Pages

Saturday, 7 April 2012

ஈழப் போராளி அமைப்புக்களுக்கான இந்திய ஆயுதப் பயிற்சிகள் இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றது .

Eelam5.com

ஈழமும் இந்தியாவும்-15: பயிற்சி முடிந்து யாழ். திரும்பிய போராளிகள்!
Saturday, 09.07.2011, 11:59am (GMT)


ஈழப் போராளி அமைப்புக்களுக்கான இந்திய ஆயுதப் பயிற்சிகள் இரண்டு பிரிவுகளாக இடம்பெற்றது என்பதை கடந்த வாரத்தில் பார்த்தோம். ஒரு பறம் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளக்கு உத்தர பிரதேசத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சிகளை வழங்க, மற்றொரு புறத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றம் ஈரோஸ் அமைப்பின் போராளிகளுக்கு இந்திய இராணுவ அதிகாரிகள் ஆயுதப் பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகள் தமது முதலாவது பயிற்சிக் குழுவில் 200 போராளிகளை அனுப்பிவைத்திருந்த அதேவேளையில், ஏனைய அமைப்புக்களிலிருந்து சுமார் 2,000 வரையிலான போராளிகள் இராணுவப் பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டிருந்தார்கள். வடபகுதியில் இதற்காக பெருமளவிலான ஆட்சேர்ப்பை மேற்கொண்ட இந்த அமைப்புக்கள் இவர்களை அனுப்பிவைத்திருந்தன என்பதை கடந்த வாரங்களில் பார்த்தோம்.
இலங்கை தொடர்பிலான இந்தியாவின் நடவடிக்கைகளைக் கையாளும் பொறுப்பு 'றோ"வின் முக்கிய அதிகாரிகளான ஆர்.என்.காவ், கே.சங்கரன் நாயர் மற்றும் கிருஷ் சந்திர செக்சானா ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளையில், களத்தில் போராளிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்கு ஏ.அர்ஜூனன் மற்றும் நக்ராணி ஆகியோர் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர். விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய போராளி அமைப்புக்களின் முதலாவது பிரிவினருக்கு இவர்கள்தான் பயிற்சிகளை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காப்பு நடவடிக்கைகள், கெரில்லாத் தாக்குhல்கள் மற்றும் வரைபடங்களைப் பயன்படுத்து மறைந்து செல்வது போன்றனவற்றிலேயே இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த ஆயுதப் பயிற்சிகளைவிட அரசியல் ரீதியிலான வகுப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கான ஆயுதப் பயிற்சிகள் 1983 அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்திருந்த அதேவேளையில், ஏனைய அமைப்புக்களுக்கான ஆயுதப் பயிற்சிகள் அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவர்களுக்கான ஆயுதப் பயிற்சிகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆரம்பமாகியிருந்தது. அதிகாலை முதலே இந்தக் கடுமையான பயிற்சிகள் ஆரம்பமாகிவிடும். இவர்களுக்கான அடிப்படையான ஆயுத மற்றும் கெரில்லாப் போர்ப் பயிற்சிகள் நவம்பர் மாதத்தில் முடிவுக்கு வந்திருந்தது. உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள டெஹ்ரா டென்னின் படக்கேயுள்ள சக்ரட்ட என்ற இடத்திலுள்ள இராணுவப் பயிற்சிப் பாசறையிலேயே இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இங்குள்ள மலையும், காட்டுப் பகுதிகளும் பயிற்சிக் களங்களாக இருந்தன.
மிகவும் இரகசியமாக இடம்பெற்ற இந்த மூன்று மாத காலப் பயிற்சியின் முடிவில் அங்கிருந்து புதுடில்லிக்குக் கொண்டுவரப்பட்ட இந்தப் போராளிகள் 500 பேர்களைக் கொண்ட நான்கு குழுக்களாக ரயில் வண்டிகளில் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சென்னைக்கு வந்தடைந்த இவர்கள் குறிப்பிட்ட மூன்று இயங்கங்களின் தலைவர்களால் வரவேற்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்களை ஆயுத பணிகளாக படகுகள் மூலம் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு இரகசியமாக அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை இயக்கத் தலைமை மேற்கொண்டது. இவர்களுக்கு வரையறுக்கப்பட்டளவில் ஏ-48 ரக தன்னியக்கத் துப்பாக்கிகள், கைக்குண்டுகள் போன்ற ஆயுதங்களை இந்தியா கொடுத்திருந்தது. ஆயுதங்களை வழங்குவதில் இயக்க ரீதியாக இந்தியா பாகுபாடாக நடந்துகொண்டதாகவும் சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
பயிற்சிபெற்ற போரிகள் குழுக்களாக படகுகள் மூலமாக இரகசியமான முறையில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். வடபகுதியில் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்டாமல் செயற்படுமாறு இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. கைது செய்யப்பட்டால் தாம் எங்கே பயிற்சி பெற்றோம் என்பதையோ யார், எவ்வாறான பயிற்சிகளை வழங்கினார்கள் என்ற தகவல்களையோ தெரிவிக்கக்கூடாது என இவர்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 1983 நவம்பர் டிசெம்பர் மாதங்களில் பயிற்சிகளை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் திரும்பிய ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். போராளிகள் தாக்குதல் நடவடிக்கைகளைப் பெருமளவுக்குத் தீவிரப்படுத்தாமல் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதேவேளையில் தாக்குதல்களுக்கான தருணத்தை எதிர்பார்த்துக்காத்திருந்தார்கள்.
இந்தியா வழங்கிய முதற்கட்ட ஆயுதப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியவர்களில் பெரும்பாலானவர்கள் ரெலோ உறுப்பினர்களாகவே இருந்தார்கள். தங்கத்துரை, குட்டிமணி போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ரெலோ அமைப்பின் தலைவராக சிறீ சபாரட்ணம் அப்போது விளங்கினார். சென்னையில் சபாரட்ணத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சந்திரஹாசன் அவ்வமைப்பின் ஆலோசகர் போன்று செயற்படத் தொடாங்கியிருந்தார். அதனால்தான் ஏனைய அமைப்புக்களைவிடவும் ரெலோ அமைப்பை அதிகளவுக்கு வளர்த்துவிடுவதற்கு இந்தியா முற்பட்டது. இந்தியா இவ்வாறு விரும்பியமைக்கு மேலும் சில காரணங்களும் இருந்தன.
குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையில் இந்தியாவின் வலைக்குள் வீழ்ந்துவிடக்கூடிய ஒரு அமைப்பாக அது இருக்கவில்லை. இறுக்கமான கட்டுக்கோப்பைக் கொண்ட ஒரு அமைப்பாக உருவாகியிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு வன்னிக் காட்டுப் பகுதியில் தனக்கென பயிற்சி முகாம்களை ஏற்கனவே அமைத்திருந்தது. பல போராளிகள் இந்தப் பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றிருந்தார்கள். அத்துடன் பிரபாரனின் கொள்கைப் பற்றும், உறுதிப்பாடும் அவரது அமைப்பை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைச் சாத்தியமாக்கப் போவதில்லை என்பதை இந்தியாவுக்கு உணர்த்தியிருந்தது.
இதனைவிட ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் ஈரோஸ் ஆகிய அமைப்புக்கள் அரசியல் கோட்பாடுகளைக் கொண்டவையாகவும், போராட்டம் தொடர்பில் தெளிவான அரசியல் பார்வையைக் கொண்டவையாகவும் இருந்ததால் தமது கைப்பாவையாக அவ்வமைப்புக்கள் செயற்படும் என்றோ நம்பவில்லை. புளொட் அமைப்பும் இந்திய எதிர்ப்புக் கோட்பாட்டையே கொண்டிருந்தது. இந்த நிலையில் ரெலோ அமைப்பு ஒன்றுதான் தெளிவான அரசியல் கொள்கைகளோ கோட்பாடுகளோ இல்லாத ஒன்றாக இருந்துள்ளது. அதேவேளையில் சந்திரஹாசனும் இந்தியக் கைப்பாவையாகச் செயற்படக்கூடிய ஒருவராகவே இருந்துள்ளார். இதனால் ரெலோவை தமது செல்லப் பிள்ளையாக வளர்ப்பதற்கு இந்தியா தீர்மானித்திருந்தது.
ரெலோ அமைப்பினருக்கே அதிகளவு ஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களும் பெருமளவு இளைஞர்களை சேர்ப்புச் செய்து பயிற்சிகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பிவைத்திருந்தார்கள். இவ்வாறு பெருந்தொகையானவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கட்டுப்பாடுகளோ வரையறைகளோ இல்லாமல் ஆட்சேர்ப்பை ரெலோ மேற்கொண்டது.
இலங்கை நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்த றோ அதிகாரிகள் போராளிகளுக்குப் பயிற்சியளித்து அவர்களை ஜெயவர்த்தன அரசுக்கு எதிரான நாசகாரச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக அனுப்புவதுடன் தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவில்லை. ஜெயவர்த்தன அரசாங்கத்தைப் பதவியிலிருந்து வெளியேற்றி, சிறீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை மீள நிலைநிறுத்த வேண்டும் என்பதில் இந்திரா காந்தி தீவிரமான அக்கறையைக் காட்டினார். இதற்கான பல முயற்சிகளையும் அவர் மறைமுகமாக மேற்கொண்டதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் பின்னர் தெரிவித்தார்கள்.

இதேவேளையில் இந்த ஆயுதப் பயிற்சிகள் ஆரம்பமாகியிருந்த சந்தர்ப்பத்தில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ரெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரட்ணம், புளொட் தலைவர் உமா மகேஸ்வரன், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர் இரத்தினசபாபதி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் கே.பத்மநாபா ஆகியோரை புதுடில்லியில் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். ஈழத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் தான் அனுதாபத்துடன் இருப்பதாகவும், அவர்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு தான் உதவுவதாகவும் இந்திரா காந்தி அப்போது உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை ஜீ.பார்த்தசாரதியே மேற்கொண்டிருந்தார். இருந்த போதிலும் இந்தச் சந்திப்பு இரகசியமானதாக இடம்பெற்றதால் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்தியப் பயிற்சிகள் தொடர்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் றோ அதிகாரிகளுடன் விரிவான முறையில் பேச்சுக்களை நடத்திய போதிலும், இந்த ஆயுதப் பயிற்சியின் உண்மையான நோக்கம் என்ன என்பதையிட்டு அவர்கள் கேள்வி எழுப்பவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவின் உள்நோக்கங்களைப் பரிந்துகொண்டவர்களாகவே அவர்கள் இருந்தனர். ஆனால், அந்த நோக்கங்கள் பற்றி கேள்வி எழுப்பி இந்தியத் தரப்புக்கு சங்கடமான ஒரு நிலையை அவர்கள் ஏற்படுத்த விரும்பவில்லை.
இந்திரா காந்தியைப் பொறுத்தவரையில் பங்களாதேஷல் முக்திபாஹினி அமைப்பைப் பயன்படுத்தி தனிநாட்டை உருவாக்கியதைப் போன்ற ஒரு நோக்கத்துடன் ஈழப் போராளிகளுக்கான பயிற்சிகளை வழங்கவில்லை. வெறுமனே போராளிகளை ஆயுத மயப்படுத்தி ஜெயவர்த்தனவுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுப்பது இந்திரா காந்தியின் முதலாவது நோக்கமாக இருந்தது. இரண்டாவதாக இந்த ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கும் அச்சுறுத்தல்களின் மூலமாக இந்தியாவுக்கு எதிரான சக்திகள் இலங்கையில் காலூன்;றுவதைத் தடுப்பது இந்திராவின் இரண்டாவது நோக்கமாக இருந்தது.
இந்த இரண்டு நோக்கங்களுடனும்தான் இந்திரா காந்தி தன்னுடைய உபாயங்களை வகுத்திருந்தார். தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார் என்பது உண்மை. அதனால்தான் இந்திரா காந்தி மீது ஈழத் தமிழர்கள் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்கள்.

அடுத்த வாரமும்.

பூராயத்துக்காக
சிவயோகன்

No comments:

Post a Comment