சனி, 16 அக்டோபர், 2010
கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்? -ஜீவமுரளி-
EPDPக்கு முன்
பதினாறு
ஆயுத இயக்கங்கள் முளைவிட்டிருந்த 1985ன் காலப்பகுதிக்கு முன்பே "தமிழர்
தகவல் நடுவம்" என்றொரு அமைப்பு மதுரை நரிமேட்டில் இருந்துகொண்டு
தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பிரச்சாரமும் செய்துகொண்டு
சாப்பாட்டுக் காசில்லை என்று வரும் எல்லா இயக்க பொடியங்களுக்கும் காசு
கொடுத்துக் கொண்டிருந்தது. அங்கே புலிகள் தொடக்கம் குட்டி இயக்கங்கள்வரை
காசு வாங்க வந்து போய்கொண்டிருந்தன. -ஜீவமுரளி-
1984-இன் நடுப்பகுதிகளில் சென்னையில் உள்ள சாலிக்கிராமத்தில் ரெலோத்தலைவர் சிறிசபாரத்தினத்தின் அலுவலகத்தில் ஒரு அழகிய இளம்பெண் தலைவருடன் சிரித்துச்சிரித்து கதைத்துக் கொண்டிருப்பதாக கதை பரவிக் கொண்ருந்தது. ரெலோதலைவரின் கட்டைபிரமச்சரியத்திற்கு அந்த அழகிய இளம்பெண் ஆப்பு வைத்துவிடப் போகின்றா என்ற சந்தேகம் பெடியங்களுக்கு ஏற்பட்டது. ஆனாலும் தவைரில் உள்ள விசுவாசமும் நம்பிக்கையும் சந்தேகங்களை தவிர்க்க முற்பட்டன. கேள்வி கேட்டல் சந்தேகப்படல் என்பன தற்கொலை செய்துகொள்ததற்கு ஒப்பான சூழல் அது. அந்த இளம்பெண் மரியாதைக்கு உரிய ஒருவராக ரெலோ பெடியங்களால் அணுகப்படவோ பார்க்கப்படவோ பேசப்படவே இல்லை. ஒரு பெண் தலைவருக்கு முன் சரிக்குசமமாக இருந்து அதுவும் சிரித்துச் சிரித்து அரசியல் பேசிக் கொண்டிருப்பது பெடியங்களுக்கு எரிச்சலையும் ஆச்சரியத்தையும் தந்தன.
தூசணங்களை மொழியாகவும் தூசணங்களை உணவாகவும் தூசணங்களை கனவு காணும் வழமையைக் கெண்ட இயக்கப் பெடியளால் அதை ஜீரணிக்க முடியவில்லை. தமிழ்ஈழம் என்ற தேவதையை கனவு காணும் பெடியங்கள் கட்டாயத்தின் பெயரில் தங்களின் ஆணுறுப்புக்களை களட்டிவைத்துவிட்டு தூசணங்களின் துணையுடன் உயிர் வாழ்ந்தார்கள் என்றுசொன்னால் அதுமிகையாகாது. இத்தனைக்கும் பிரச்சாரப்பிரிவுக்கென ஐம்பது பெண்கள்வரை மனேமாஸ்டரால் உள்வாங்கப்பட்டனர்.
ரெலோவின் பிரச்சார பிரிவு மனோமாஸ்டரால் உருவாக்கப்பட்டது. மனோவாத்தியை குழப்பவாதி துரோகி என தூக்கி ஒரு மூலையில் போட்டுவிட்டார் சிறியர். ரெலோவின் பிரச்சார பீரங்கிப்பிரிவு தலைவரின் கடைக்கண் பார்வையுடன் தானாகவே கற்க முயற்சி செய்து கொண்டிருந்தது. தோழர் கம்பன் முலம் மாஓசேதுங்,கோசிமின் கோட்பாடுகளும் மட்டக்களப்பைச் சேர்ந்த தோழர் சண் மூலம் ரசியப்புரட்சியும் லெனினும் மாக்சும் என கோட்பாடு புரட்சி என வரிக்குவரி ஆண்டுகள் மறக்காமல் மனப்பாடமும் செய்துகொண்டு கண்டதையும் கற்றுக்கொண்டிருந்தோம். பின் தோழர் வி.பொன்னம்பலம் அவர்களின் வருகை கற்பதற்கான ஆசையையும் சர்வதேச அரசியல் குறித்த பார்வையையும் தந்தன. எண்ணம் சஞ்சிகை ஆசிரியர்களில் ஒரு¬வரான தோழர் மகாதேவாவின் வருகை சிங்களவனை வெட்டவும் சுடவும் பயிற்றுவிக்கப்பட்ட தோழர்கள் பலரை இனவாத மனநிலையிலிருந்து மீட்டெடுத்தது. இந்த சூழல் கருத்துமாற்றக்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தின. ஆனாலும் அந்த அழகிய இளம்பெண் அடிக்கடி தலைவரின் அலுவலகத்துக்கு வந்து போவதும், தலைவருடன் சிரித்துச்சிரித்து அரசியல் பேசிக்கொள்வதும், புரட்சிக்கு குந்தகம் விளைவிக்கலாம் என்ற கருத்தில் மட்டும் மாற்றமிருக்கவில்லை.
இந்தளவிற்கும் பிரச்சாரப்பிரிவில் பெண்கள் இருந்தார்கள். இயங்கியல் என்பது மாற்றங்களே என மனப்பாடம் செய்துகொண்டு நாங்கள் மட்டும் மாறாமலிருந்தோம். பிரச்சார பிரிவு தமிழ் நாடெங்கும் பிரச்சாரத்திற்காகவும் காசு சேர்ப்பதற்காகவும் முடுக்கி விடப்பட்டது. பிரச்சாரப் பிரிவிலிருந்து ஒரு பெண் தோழர்கூட காசு சேர்ப்பதற்;கோ, கொள்கை பிரச்சாரத்திற்கோ அனுமதிக்கப் படவில்லை. இந்தப் பெண்கள் பெருந் தலைவர்களுக்கும் தலைவர்களின் எடுபிடிகளுக்கும் அடியாட்களுக்கும் உருசியாக சமைத்துப் போட்டுக்கொண்டிருந்தார்கள். மாற்றத்துக்காக அவர்களுடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள் அல்லது சினிமா பார்க்கப் அனுப்பப்பட்டார்கள். இந்தச்சூழலில்தான் அந்த அழகிய இளம்பெண் தவைருடன் சிரித்துச்சிரித்து அரசியல் பேசிக் கெண்டிந்தார்.
குத்துமதிப்பாக இரண்டு பிரச்சார பீரங்கிகளுடன் இந்திய அரசால் உத்தரப்பிரதேசத்தில் பயிற்றுவிக்கப்பட்ட நான்கு இராணுவ முட்டாள்கள் என்ற வீதத்தில் அனுப்பப்பட்டார்கள். என்னையும் வின்சனையும் கண்ணகி கருக்கிய மதுரைக்கு அனுப்பினார்கள். நானும் வின்சனும் அங்கே ஏற்கனவே இருந்த நான்கு இராணுவமுட்டாள்களுடன் சேர்ந்து கொண்டோம். யு பி ரெயினிங் என பெடியங்களால் பெருமையாக சொல்லப்படும் உத்தரப்பிரதேசத்தில் இராணவமுட்டாள் பயிற்சியை பெற்றவர்கள் அவர்கள். நானும் வின்சனும் மாஓசேதுங்கையும் மாக்சையும் லெனினையும் மனப்பாடம் செய்த பதினெட்டு வயது நிறையாத டெலோவின் பிரச்சார பீரங்கிகள். யுபி ரெயினிங் முடித்து துரை¬யை சயிக்கிளில் அவன் சொல்லுமிடமெல்லாம் கூட்டிச்செல்வதுதான் எனக்கு இடப்பட்ட கட்டளையாகவும் வழக்கமாயிருந்தது. இந்த இராணுவ முட்டாள்களின் முன்முடிவுகளும் முன் ஏற்பாடுகளும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் சைக்கிள் உளக்க இடுப்பிலிருந்த கட்டைத்துப்பாக்கியை அடிக்கடி தொட்டுப்பார்த்தபடி துரை பாரில் இருக்க மதுரையில் நரிமேட்டிலிருந்த தமிழர் தகவல் நடுவதிற்கு சென்றோம். அங்கே தலைவர் சிறிசாபாரத்தினத்துடன் சிரித்துச்சிரித்து அரசியல் பேசிய இளம் பெண்ணை மறுபடியும் கண்;டேன். பதினாறு ஆயுத இயக்கங்கள் முளைவிட்டிருந்த 1985ன் காலப்பகுதிக்கு முன்பே தமிழர் தகவல் நடுவம் என்றொரு அமைப்பு மதுரை நரிமேட்டில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பிரச்சாரமும் செய்துகொண்டு சாப்பாட்டுக்கு காசில்லை என்றுவரும் எல்லா இயக்க பொடியங்களுக்கும் காசு கொடுத்துக்கொண்டிருந்தது. அங்கே புலிகள்தொடக்கம் குட்டி இயக்கங்கள்வரை காசு வாங்க வந்து போய்கொண்டிருந்தன. நாங்களும் சிரித்துச் சிரித்து அரசியல் பேசும் அந்த அக்காவிடமிருந்து 1000ரூபா காசை சாப்பாட்டுக்கென சொல்லி வாங்கிக் கொண்டு போனோம். எங்களுக்கு சாப்பாட்டுக்கும் இதரசெலவுகளுக்கும் காசு தேவைப்படும்போது சிரித்துச் சிரித்து அரசியல் பேசுகின்ற அக்காவின் அலுவலகத்திற்கு துரை என்னையும் கூட்டிச்செல்வான். அவவும் காசுதந்து அனுப்புவா. இந்தமுறை பெரியதொகை பத்தாயிரம் ரூபாவை துரை கேட்கப்போய் மறுத்துவிட்டா. ”இல்லையக்கா எங்களுக்கு அவசரத்தேவை இரண்டு நாளில் வருவன் எனக்கு பத்தாயிரம் ரூபா வேணும்” என்றபடி துரை சைக்கிள் பாரில் அமர்ந்தான். துரை ஒரு முட்டாள் இராணுவ மனிதனுக்கான முறுகிய உடலமைப்பைக் கொண்டவன். தன் உடல்வலிமையில் பெருமிதமும் கட்டைத்துப்பாக்கியில் நம்பிக்கையும் கொண்டவன். நான் மாஓசேதுங்கையும் கோசிமினையும் லெனினையும் மாக்சையும் மனப்பாடம் செய்பவன். நாங்கள் இருவரும் ஒரு சைக்கிளில் மதுரையை வலம் வந்து கொண்டிருந்தோம். இரண்டு நாட்களின் பின் தமிழர் தகவல் நடுவத்திற்கு துரையுடன் போனேன். ”என்ன தம்பியவை?” என்று சிரித்துக்கொண்டே அக்கா வந்தா. துரை இடுப்பிலிருந்த கட்டைத்துப்பாக்கியை எடுத்து சாப்பாட்டு மேசையின் மேல் வைத்துவிட்டு "என்னக்கா நான் கேட்டது கிடைக்குமா" என்றபடி நின்றான். ”தம்பி துரை உந்த எடுவை எடுத்து என்னட்டை காசு வாங்லோது. துவக்கை எடுத்து இடுப்பில செருகும்” என சிரித்துக்கொண்டு சொன்னா. உங்களுக்குமட்டுமில்ல மற்றபெடியங்களும் காசுக்கு வருவாங்கள் அவங்களுக்கும் குடுக்கவேணும் உங்கட சுபாஸ் நேற்றுத்தான் ஐயாயிரம் ரூபா வாங்கிக்கொண்டு போறான் என்றவுடன் துரையின் முகம் இறுகியது.
மறுநாளே சுபாசும் அவனது பொடிகாட்டுகளும் ஒரு வானில் வந்து இறங்கினார்கள். நான்கைந்து நாள் நாங்கள் இருந்த வீட்டில் தங்கியிருந்து பகல் வேளைகளில் 304 காட்ஸ் விளையாடினார்கள், மாலை ஐந்துமணிக்கு பின் மறைந்துவிடுவார்கள்.
ரெலோவுடன் உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி பெற்று சென்னை திரும்பும்
இரயிலில் இருந்து இறங்கி தப்பியோடி ரெலா என்ற இயக்கத்தை தொடங்கிய ரெலா ராஜன் மதுரையில்தான் இருந்தான். இன்னும் தப்பியோடிய ஐந்து போர்கள் புலிகளுடன் இருந்தார்கள். புலிகளுக்கு இந்தியஅரசால் பயிற்சி மறுக்கப்பட்டபோது புலிகளால் இவர்கள் ரெலோவுக்குள் அனுப்பப் பட்டவர்கள் என்று நம்பப்பட்டது. இவர்களையெல்லாம் பிடித்து போட்டுத்தள்ளுவதற்காக தலைவரால் அனுப்பப்பட்ட உளவுப்பிரிவின் தலைவன்தான் சுபாஸ். எந்த மனிதர்களாலேயுமே அவனது கண்களை நேருக்குநேர் பார்க்கமுடியாது. அப்படி தவறிப் பார்த்து விட்டால் வாழ்நாள் முழுக்க தூங்கவே முடியாது. ரெலாராஜனை சுபாசும் பொடிக்காட்டுகளும் மதுரை தெருக்களெங்கும் துரத்தித்திரிந்தும் பிடிக்கமுடியவில்லை. இரண்டுமுறை மதிலேறிப்பாய்ந்து தப்பிப்பிழைத்தான். ரெலாராஜனுக்கு தனது அலுவலகத்தில் அடைக்கலமளித்தது சுபாஸிடமிருந்து அவனைக் காப்பாற்றிவிட்டது சிரித்துச்சிரித்து அரசியல் பேசும் அதே அக்காதான். பின்நாட்களில் அதே ரெலா ராஜனால் துப்பாக்கி முனையில் அக்கா மிரட்டப்பட்டார். நன்றி மறப்பது நன்றன்று. தின்ற வீட்டுக்கே இரண்டகம் செய்யாதே என குழந்தைகளுக்கு கற்பித்துக்கொண்டு இருக்கும் தமிழ் அடையாளக் கலச்சாரமும்; மாவ்வியாக் கலாச்சாரமும் இந்த இடத்தில் நெருங்கிவந்த காலமது. பின்நாளில் சாப்பாடு தந்த சனங்களையெல்லாம் போட்டுத்தள்ளியது தமிழ்த்தேசிய அடையாளக் கலாச்சாரம்.
மாஓசேதுங்கையும் கோசிமினையும் லெனினையும் மனப்பாடம் செய்து, எங்களையும் மனப்பாடம் செய்யவைத்த தோழர் கம்பனின் சகோத¬ரிதான் சிரித்து சிரித்து தலைவர் சிறிசபாரத்தினத்துடன் சரிக்குச்சமன் இருந்து அரசியல் பேசிய அந்த அழகிய இளம் பெண் மகேஸக்கா என்ற மகேஸ்வரி வேலாயுதம் என்பது அவரின் சகோதரர்களான சர்வேஸ்வரனையும் கணேசையும் மதுரையில் சந்தித்தபின்பே தெரியவந்தது. தோழமையுணர்வும் பேச்சுத்திறமையும் தேடலுமுள்ள கம்பன் புலிகளால் ரெலோ அழிக்கப்பட்ட பின் தற்கொலை செய்து கொண்டார் என அறிந்தேன். ஏன் எப்படி எதற்கு என்பது இதுவரைக்கும் தெளிவில்லாத ஒரு கனவைப்போலவேயிருக்கின்றது.
மதுரைக்கு பக்கத்தில் உள்ள அருப்புக் கோட்டை என்ற பெரிய கிராமத்தில் ஒரு பாடசாலை விழாவில் தமிழ் இளைஞர்பேரவையின் ஆரம்பப்போராளிகளில் ஒருவரான சத்தியசீலனுடன் மகேஸ் அக்காவும் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே நானும் வின்சனுமிருந்தோம். பாடசாலை மாணவர்கள் கலையும் கலைவிழாவுமாக பாட்டும் கூத்துமாகவிருந்தனர். எங்களுக்கோ சிங்களவனைக் கொல்லவேணும் எண்டதை தவிர வேற ஒரு அறுப்பும் தெரியாது. அந்த ஆத்திரத்தில இருக்க என்னையும் ரெலோ சார்பில் மேடைக்கு பேச அழைத்தார்கள். நான் பேசிய இரண்டு வரிகள் இவைதான்.
தமிழ் நாட்டு மக்களே அங்கே தமிழன் கொல்லப்படுகிறான் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் நீங்கள் இங்கே பாட்டும் கூத்துமா போட்டுக் கெண்டிருக்கிறீர்கள். எனது பேச்சு பாடசாலை மாணவர்களை சங்கடப்படுத்தியது. அந்தச் சங்கடத்திற்காக மகேசக்கா அல்லது சத்தியசீலன் யாரோ ஒருவர் அவர்களிடம் மன்னிப்புகேட்டு சமாதானம் செய்தார்கள். தமிழன் கொல்லப்படுகிறான் தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சாரத்தின் நீட்சிதான் இயக்கங்களுக்கு தமிழ் நாட்டு மக்களிடம் இருந்து ஆதரவையும் காசையும் உறவுகளையும் பெற்றுத்தந்தன. மறாக இதை மீறி மகேசக்கா குறுங்குழுவாத அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட்டார் என்றே நினைக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள மாவடங்கள் வட்டங்கள் என நகைச்சுவை கலந்து அழைக்கப்படும் அரசியல்
தொண்டர்கள் முதல் லயஸ்ன்கிளப் றோட்டரிக்கிளப் புள்ளிகள் பொலிஸ்அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் மாணவத்தலைவர் எல்லாரிடமும் செல்வாக்குப் பெற்றிருந்தார். அவர்களெல்லாம் கிராமங்களிலும் நகரத்திலும் கூட்டங்கள் ஏற்பாடு செய்து மகேசக்காவை பேசவைத்து மடிநிறைய பொற்காசும் பொற்கிளியும் கொடுத்து வாழ்க தமிழ்ஈழம் என வாழ்த்தினார்கள். அவர் கிராமம் கிராமாக சென்று மேடையேறிப் பேசி சேர்த்த காசிலதான் பதினாறு இயக்கங்களும் மதுரையில் சாப்பிட்டு வளர்ந்தன. இயங்கங்கள் மக்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் அங்கீகாரம் பெறுவதற்குமுன் மகேசக்காவின் பேச்சுத்திறனும் அவரின் செயற்பாடுகளும் அங்கீகாரம் பெற்றிருந்தன. பொலிஸ் அதிகாரிகளின் புள்ளட் மோட்டார் சைக்கிளின் பின்னாலிருந்தும் அரசியல் தலைவர்களின் கார்களிலும் கூட்டங்களுக்கு சென்று பேசியிருக்கிறா. அவவிடம் காசைமட்டும் வாங்கிகொண்டு ஆண்களுடன் நெருங்கிப்பழகிறா மோசமான பொம்பிளை என தமிழ் கலாச்சார காவலர்கள் திட்டிக்கொண்டிருந்தார்கள். அவ யாரையும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் கலாச்சாரக் காவல்நாய்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் கிண்டலுக்கும் ஆளாகி கடைசிவரைக்கும் சிரித்துச்சிரித்து
அரசியல் பேசிக்கொண்டும் மனித உரிமைகளுக்காகவும் தனது வாழ்வை பலியிட்டார். வெட்டிக்கொல்லாமல் மண்டையில் போட்டுத்தள்ளாமல் முதுகில் குத்தாமல் சிரித்துச்சிரித்தே அரசில் செய்யலாம் பேசலாம் என்ற மிகச்சாதாரமான மனித பண்பை வாழ்ந்து காட்டியிருக்கிறார். இதெல்லாம் நாசமாய் போகிற தமிழ் அரசியல் இரசிக மணிகளுக்கும் கொலைகாரத் தலைவர்களுக்கும் எங்கே விளங்கப்போகுது.
”துரோகம்” இந்த வார்த்தையின் அர்த்தமதுதான் என்னவென இன்றுவரை தேடிக் கொண்டிருக்கிறேன் மகேசக்கா. உருவமற்ற உயிரற்ற மனித உடல்களா? அல்லது நாம் சாப்பிடும் சோற்றுப் பருக்கைகளா? குழந்தையின் சிரிப்பா? தாயின் மார்பகங்களா? தாயின் அணைப்பா?
துரோகம் என்பது இராணுவ முட்டாளின் கனவின் கற்பிதமாக ஒரு அடிமுட்டாளின் நம்பிக்கையாகவும் ஆசையாகவும் இன்று இருக்கிறது மகேசக்கா. ஆனால் உண்மையிலும் உண்மை அது யாழ்மையவாதத்தின் ஆண்குறி. அழுகிக் கொண்டிருக்கும் குரூரமான ஈவு இரக்கமற்ற ஆண்குறி. அது அழுகிவிழும் என்ற நம்பிக்கை யாருக்குமேயில்லை. அதைவெட்டியெறிவதே சிரித்துச்சிரித்து அரசியல் பேசுகின்ற அரசியல் செய்கின்ற ஒரு காலத்தை பெற்றுத்தரும்.
நினைவுகளை மீட்டெடுத்து, மீட்டெடுத்த நினைவுகளை அழிக்கும் வழமையில் வாழும் நான் கனவுகளே வராத ஒரு தூக்கத்தை வேண்டி நிற்கின்றேன்.
கனவுகள் தூக்கத்தின் எதிரிகள்.
கனவுகள் கண்களின் எதிரிகள்.
கனவுகள் நினைவுகளை மீட்டெடுக்கும் நோய்கிருமிகள். ஆதலால் என் தூக்கத்தை கலைக்காத கனவொன்றை நான் காணவிரும்புகிறேன்.
என் நினைவுகளை அழித்துவிட்டு வருகின்ற கனவொன்றை நான் காண விரும்புகிறேன்.
வெளிச்சத்தில் பேசுவோம் 2008
உயிர்மெய் மறுபிரதி

No comments:
Post a Comment