Pages

Friday, 27 April 2012

Ex TELO : முன்னாள் அமைச்சர் இராஜதுரைக்கு கறுப்பு கொடி காட்டி சிவாஜிலிங்கம் எதிர்ப்பு !

வீரகேசரி தேசிய நாளேடு 4/27/2012 10:54:36 AM

  யாழ்ப்பாணத்தில் மூதறிஞர் தந்தை செல்வாவின் நினைவு தினக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.கே. சிவாஜிலிங்கம் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புக்காட்டிய சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தின வைபவம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவாஜிலிங்கம் தனது கறுப்புக் கொடி எதிர்ப்பின் போது தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெளியேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி அரசின் அடிவருடி துரோகியை வெளியேற்ற வேண்டும் என கோரினார்.

இதன் போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நினைவுக் கூட்டத்திலிருந்து வெளியேறிய சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

முன்னாள் அமைச்சராக இருந்த இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு அரசில் இணைந்து அமைச்சரானார். பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ் இளைஞர்களை சிறையில் தள்ளியவர். இந்த புனிதமான மண்ணில் இவரை கால் வைக்க விடமாட்டேன் என்றார்.

எவ்வாறாயினும் சற்று நேரத்திற்கு பின்னர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் செல்லையா இராஜதுரை உரையாற்றும் போது,

""தந்தை செல்வா ஒரு அரசியல் பாடப் புத்தகம் அவர் தமிழ் மக்கள் பிரிந்து வாழ்வதை விரும்பாத ஒருவர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்து விட்ட காலத்தால் அழிக்க முடியாத ஒருவர்'' என்றார்.

இந்நிலையில் தந்தை செல்வாவின் புதல்வர் சத்தியதாசன் மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
___
1


No comments:

Post a Comment