Pages

Wednesday, 26 December 2012

டெலோவின் விந்தன் பதிலடி !!

தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும்! சுபியான்! நீங்கள் இந்த மண்ணில் இருக்க தகுதி அற்றவர்கள்! டெலோவின் விந்தன் பதிலடி

 

தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஏன் அஞ்சலி செய்ய வேண்டும். அதற்காக ஏன் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று யாழ். மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் சுபியான்  கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு டெலோவின் விந்தன் கனகரத்தினம் இவ்வாறு கூறுவீர்களானால் நீங்கள் இந்த மண்ணிலேயே இருக்க தகுதி இல்லாதவர்கள் என ஆவேசமாக பதிலளித்தார்.இன்று காலை 10.30 மணிக்கு யாழ். மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற யாழ். மாநகரசபையின் 2012ம் ஆண்டுக்காக மாதாந்த இறுதிக் கூட்டநிறைவில் எதிர்க்கட்சி உறுப்பினர் டெலோவின் விந்தன் கனகரத்தினம் தனது கருத்தினை முன்வைக்கும் போதே பதிலுக்கு விவாதித்த சுபியான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கடந்த வாரம் யாழ். மாநகர சபையினால் ஒளிவிழா கொண்டாடப்பட்டிருந்ததை தாம் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்தோம். எமக்கு அறிவித்தல் எதுவும் விடப்படவில்லை என்றும் எதிர்கட்சி சார்பில் விந்தன் கனகரத்தினம் சபையில் தெரிவித்தார்.அத்துடன் நடைபெற்று முடிந்த ஒளிவிழாவின் போது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதனை ஒரு போதும் யாராலும் தடுக்க முடியாது. இறந்தவர்களை மக்கள் தமது வீடுகளில் நினைவு கூரலாம் என்றும் மாநகர சபை முதல்வர் கூறிய கருத்தையும் சபையில் கூறி அவருக்கு நன்றியும் தெரிவித்து தொடர்ந்தும் கருத்துரைத்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த 30 வருடங்களாக எமக்காக தமது உயிரைத் தியாகம் செய்த மாவீரர்கள், போரின் போது கொல்லப்பட்ட மக்கள், அரசியல் தலைவர்கள் என இலட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். இறந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செய்வதனை யாராலும் தடுக்க முடியாது. அது எமது உரிமை.வடக்கு கிழக்கு மட்டுமன்றி தெற்கிலும் போரின் போது கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கும், கலவரங்களின் போது கொல்லப்பட்ட ஜே.வி.பியினருக்கும் நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டு வருடா வருடம் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை இதனை யாராலும் தடுக்க முடியாது.ஆத்ம சாந்திக்காக அனுஷ்டிக்கப்படும் அஞ்சலிகள் வீடுகள், பாடசாலைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என எங்கும் அனுஷ்டிக்க முடியும். அது எமது உறவுகளுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக அமைகின்றது என தெரிவிக்கும் வேளையில் குறுக்கிட்டார் எதிர்க்கட்சி உறுப்பினர் சுபியான்.நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் புலிகள். அவர்களுக்கு எவ்வாறு பகிரங்கமாக அஞ்சலி செலுத்த முடியும் அவ்வாறு செலுத்தினாலும் ஏன் கல்விக்கூடங்களைப் பயன்படுத்த வேண்டும்.உங்கள் அரசியலுக்காக ஏன் பல்கலை. மாணவர்களைத் தூண்டி விடுகின்றீர்கள். நீங்கள் அந்த தடை செய்யப்ட்ட இயக்கத்தை தான் ஆதரிக்கிறீர்கள் என்று தெரியும் என வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்.அவரின் கருத்தினை மறுதலித்த விந்தன் கனகரத்தினம் இவ்வாறு கூறுவீர்களானால் நீங்கள் இந்த மண்ணிலேயே இருக்க தகுதி இல்லாதவர்கள். அவ்வாறு மிகவும் அமைதியான முறையில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்களது விடுதிக்குள்ளும் பல்கலைக்கழகத்திற்குள்ளும் நுழைந்து மாணவர்களைத் தாக்குவதற்கு என்ன உரிமை இராணுவத்திற்கு இருக்கிறது? பொலிஸார் ஏன் அங்கு செல்ல வேண்டும்? யார் அவர்களை அழைத்தது என கேள்வி எழுப்பினார்.அதற்கு ஏன் அவர்கள் போனார்கள் என்று அவர்களைப் போய் கேளுங்கள் என்று கூறிவிட்டு வாயடைத்துக் கொண்டார் ஆளும்கட்சி உறுப்பினர் சுபியான்.இதனையடுத்து பதிலளித்த மாநகர சபை முதல்வர் இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்துவது எமது ஒவ்வொருவரது கடமை. ஆனாலும் அஞ்சலி செலுத்துவதற்கான இடத்தினை தெரிவு செய்து செலுத்த வேண்டும் என்றார்.எனினும் கடந்த மாதாந்தக் கூட்டத்தில் இது குறித்த பிரேரணை ஒன்று கொண்டுவர எதிர்க்கட்சி முடிவெடுத்தாலும் வாய்த்தர்க்கங்களினால் கூட்டம் முடிவுறாது கலைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

''ஹலால்'' புறக்கணிக்கும் பிக்குகள் !!

ஹலால் உணவுகளை புறக்கணிக்குமாறு பிக்குகள் போராட்டம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கான ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று வலியுறுத்தி இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய நகரில் இன்று திங்கட்கிழமை பௌத்த பிக்குகள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடந்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
பாதுகாப்புச் செயலர்- முஸ்லிம்கள் சந்திப்பு
இதேவேளை, இலங்கையில் அண்மைக் காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் சில தினங்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.முஸ்லிம் மக்களின் சனத்தொகை, பள்ளிவாசல்கள் மற்றும் ஹலால் முத்திரைகளுக்கு எதிராக அண்மைக் காலங்களாக பல்வேறு பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடந்துவருகின்றமை தொடர்பில் தாங்கள் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.இதேவேளை, இந்தப் பிரச்சனை தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.எம்பிலிபிட்டிய பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் முச்சக்கர வண்டியில் வந்த நபர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டிருப்பதாகவும் அமீன் தெரிவித்தார்.
‘ஹலால்-அற்ற உணவு எமது உரிமை’: ஹெல உறுமய
இதேவேளை, எம்பிலிபிட்டியவில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தை தமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை என்றபோதிலும் அதில் தமது கட்சியின் உறுப்பினர்கள் வெவ்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொண்டிருக்கலாம் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல்மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில பிபிசி தமிழோசையிடம் கூறினார்.ஹலால் சான்றிதழ் பெற வேண்டுமென்று வர்த்தக நிறுவனங்களை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பலவந்தப்படுத்துகின்ற போக்குக்கு தமது கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.முஸ்லிம்களுக்கு ஹலால் உணவு உண்பதற்கு உரிமை இருப்பது போல ஹலால் இல்லாத உணவை உண்பதற்கான உரிமை மற்ற மதத்தவர்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் உதய கம்மன்பில வாதிட்டார்.அதேவேளை, நாட்டில் பௌத்த விகாரைகளுக்கு அருகில் ‘உரிய அனுமதியின்றி நிர்மானிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் சட்டவிரோதமானவை’ என்றும் அவற்றை அகற்ற வேண்டுமென்றே தாம் போராட்டம் நடத்துவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

முஸ்லிம்களும் ஆயுதம் !

முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்துவதை எதிர்பார்க்கின்றதா மஹிந்த அரசு? அஸாத் சாலி அரசுக்கு எச்சரிக்கை!

 
சிங்கள பேரினவாதிகளினூடாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அராஜக நடவடிக்கைகளை அரசு ஏன் வேடிக்கைப் பார்க்கின்றது. முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதையா மகிந்த அரசு எதிர்பார்க்கின்றது என முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.அத்துடன் முஸ்லிம்களை ஆயுதம் நிலைக்கு ஆளாக்கவேண்டாம் என்றும் முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்தது.சிறிய பிரச்சினை எனக் கூறி அரசு இவற்றைத் தட்டிக்கழித்தால் அதன் எதிர்விளைவுகள் ஆபத்தானதாக அமையும் என்று முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயருமான அஸாத் ஸாலி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.முஸ்லிம்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வருகின்றன.இதற்கு ஆதாரமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்பிலிப்பிட்டியவில் சிங்களக் குழுவினரால் முஸ்லிம் வர்த்தகர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய சந்தையில் இரண்டு முஸ்லிம் கடைகள் இருக்கின்றன. இந்த இரு கடைகளிலுள்ள வர்த்தகர்கள் சிங்களக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர்.ஏன் சிங்களக் குழுவினரால் அவர்கள் தாக்கப்பட்டனர்? எதற்காகத் தாக்கப்பட்டனர்?”புதுபல சேனா’ என்ற சிங்கள அமைப்பும், ஏனைள சிங்கள இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், இவர்களுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எம்பிலிப்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமா எனத் தெரியவில்லை.தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்குகளுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களில் ஆளுந்தரப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பிமார்களும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் சென்று முறையிடுகின்றனர். அவரிடம் முறையிட்டு என்ன பயன்? முஸ்லிம் பள்ளிவாசல் உடைப்பு, முஸ்லிம் வர்த்தகர்கள் தாக்கப்படுதல், முஸ்லிம்களின் ஹலால் உணவுகள் தடைசெய்யப்படவேண்டும் என சிங்கள இனவாதிகள் மேற்கொள்ளும் அராஜக செயல்கள் அனைத்தும் சிறிய செயல்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகின்றார். எமது இஸ்லாம் சமயத்துடனும், முஸ்லிம் மக்களது வாழ்வுடனும் விளையாடுவது சிறிய செயலா? இதுபோன்ற சிறிய செயல்களின் எதிர்விளைவுகள் நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும்.எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாட்டில் இனிமேலும் தொடரக்கூடாது. அதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அடக்குமுறைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படவேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதனூடாக முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டுமென்றா அது எதிர்பார்க்கிறது? வேண்டாம். எம்மை ஒருபோதும் அந்த நிலைக்குத் தள்ளிவிடவேண்டாம் என்றார் அஸாத் ஸாலி.

வாய் திறந்தார் அமைச்சர் டக்ளஸ் !

தீபம் ஏற்றத் தடையில்லை! ஒரு மாதத்தின் பின் வாய் திறந்தார் அமைச்சர் டக்ளஸ்!

 
.
  இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இறந்த உறவுகளுக்காக தமது வீடுகளில், வியாபார நிலையங்களில் தீபம் ஏற்றலாம் அதனை யாரும் தடுக்க முடியாது அவ்வாறு தடுத்தால் தன்னிடம் கூறுமாறு கோரிக்கை விடுத்ததுடன்.நாட்டில் யுத்தம் நிறைவடைந்து நிரந்தர சமாதானம் நிலவுகின்றது. இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை.யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவும் போது சிலர் திட்டமிட்ட செயற்கை யுத்தம் ஒன்றை ஏற்ப்படுத்த முனைகின்றனர். இதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.ஆட்சியிலுள்ள அரசாங்கத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வினை நிச்சயமாக வழங்க முடியும்.ஆனால் இந்த அரசாங்கம் தவிர்ந்த வேறு ஒரு அரசாங்கத்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை வழங்க முடியாது என அவர் தெரிவித்தார்.கடந்த மாதம் இதே நாளில் இறந்த உறவுகளை நினைத்து தீபமேற்றியவர்களை இராணுவம் எவ்வளவு துன்புறுத்தியது என்பதை தெரிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு மாதத்தின் பின் தீபம் ஏற்றத் தடையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளமை ஆச்சரியமாகவுள்ளது என பொதுமக்கள்  பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.


.
http://telo.org/?p=7241&lang=ta

மட்டக்களப்பில் தேர்தல் !

2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்


மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட ஒன்பது உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று தென்மேற்கு, மண்முனைப்பற்று தெற்கு மற்றும் எருவில்பற்று, மண்முனை மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று மற்றும் போரதீவுப்பற்று ஆகிய உள்ளூராட்சிமன்றங்களுக்கே இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதை அடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி, மட்டக்களப்பு மாவட்டத்துக்குட்பட்ட 9 உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதன்படி, இவ்வருடம் (2012) மார்ச் 17ஆம் திகதியில் இப்பிரதேசங்களுக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், தேர்தல் விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த தேர்தல்களை ஒரு வருடத்துக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த ஒரு வருட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதியுடன் முடிவடைகின்றதை அடுத்து, அத்திகதிக்கு முன்னர் அரசாங்கம் இந்த தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. ‘இம்முறையும் தேர்தலை பிற்போட வேண்டுமாயின் அதற்கு ஒரேயொரு மார்க்கமே உள்ளது. அதாவது, தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் மட்டுமே மீண்டுமொருமுறை இந்த தேர்தலை பிற்போட முடியும்’ என்று தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மட்டக்களப்பு உள்ளூராட்சிமன்ற தேர்தல்களின் போது, அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிட்ட சிவநேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்), 9 உள்ளூராட்சிமன்றங்களில் எட்டு சபைகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Thursday, 20 December 2012

பொது எதிரிக்கு எதிராக போராடும் சிந்தனை உருவாக வேண்டும்!


[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 05:46.42 AM GMT ]
மக்கள் போராட்டங்கள் உலகெங்கும் இடம்பெறுகின்றன. அவற்றுள் சில தவறான தலைமைத்துவங்கள் காரணமாக நியாயமான போராட்டங்களாக அமையாமல் அநியாயத்திற்கு துணைபோகும் போராட்டங்களாக மாறிவிடுகின்றன.
அண்மையில் மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றுள்ள இடம்பெற்ற மக்கள் எழுச்சிகள் அங்கு உறுதியான தீர்வுகளை அவர்களுக்கு தந்துவிட்டன என்று கூற முடியாது.
இலங்கைத் தீவிலும் இதே போன்ற நிலைதான் தோன்றியுள்ளது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பொதுவான பிரச்சனைகள் பல உள்ளன. அவற்றுக்காக அவர்கள் இணைந்து போராடுகின்ற சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
இதற்கான காரணங்களை நாம் ஆராய முற்படுகின்ற போது அவை நீண்ட விவாதங்களுக்குரிய கருப்பொருளாக மாறிவிடலாம் என்ற அச்சம் எம்மை வாட்டுகின்றது.
மறுபக்கத்தில் நாம் மேலே குறிப்பிட்ட மூன்று இனத்தவர்களுக்கும் அவர்கள் இனம் சார்ந்த பிரச்சனைகள் பல உள்ளன. அவற்றிலிருந்து விடுபடுவதற்கான போராட்டங்களை அவர்கள் நடத்திய வண்ணமே உள்ளார்கள்.
இலங்கையில் தமிழர்களுக்குத்தான் பிரச்சனைகள் இருந்தன என்ற காலம் போய் தற்போது தென்னிலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்;கும் பல்வேறு நிர்வாகத் துறைகள் சார்ந்த பீடங்களில் உள்ளவர்களுக்கு முறுகல் நிலை தோன்றி தற்போது அவை நன்றாகவே “பழுத்து விட்டன”. 
நீதித்துறையின் காவலர் என்று வர்ணிக்கப்படுகின்ற பிரதம நீதியரசருக்கு எதிராக   அரசியல்வாதிகளின் காடைத்தனமிக்க தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற போது, அவற்றுக்கெதிராக நாடுமுழுவதும் உள்ள தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் பகிரங்கமாகவே ஆர்ப்பாட்டங்களை நடத்தி பிரதம நீதியரசருக்கு தங்கள் ஆதரவை காட்டும் அதேவேளை அரசுக்கெதிரான கோசங்களையும் வைக்கின்றார்கள்.
இதைப்போலவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவக் கொடியவர்களால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைச் சிறைக்கூடங்களில் அடைக்கப்படுகின்ற போது, அவர்களின் கைதுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களை நாடு முழுதும் நடத்தியுள்ளார்கள்.
ஆனால் இவ்வாறான கூட்டான போராட்டங்களை கண்டுவிட்டு அரசாங்கம் மௌனமாக இருந்து விடும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான ஒருமித்து குரல்களை அடக்கி விடுவதற்காக இனவாதத்தை மீண்டும் அரசாங்கம் பிரயோகிக்க முயலும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி மீண்டும் இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயலும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில்தான் பொது எதிரியான அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கு நியாயங்களை விரும்பும் சக்திகள் ஒன்று சேர வேண்டும்.
அண்மைக்காலங்களில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா போன்ற தலைவர்கள் கூறிவருவது போல, பொது எதிரிக்கு எதிரான போராட்டங்களில் இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஒன்றுபடுவார்களேயானால் அங்கு இனங்கள் சார்ந்த பிரச்சினைகள் நீங்குவதற்கும் இனவாதிகளின் குரல்கள் அடங்குவதற்கு சாதகமான ஒரு நிலை தோன்றலாம் என்றே நாம் நம்புகின்றோம்.

நண்றிகள்;
கதிரோட்டம்: கனடா உதயன்
http://news.lankasri.com/show-RUmqzCRVNVlr4.html

போரினால் இடம்பெயர்ந்த மக்கள் நடைபிணங்களாக வாழ்கின்றனர்: விநோ எம்.பி


[ வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012, 03:11.46 AM GMT ]
 
போரினால் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மக்கள் நடை பிணங்களாக வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
போரினால் இடம்பெயர்ந்த மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உளவியல் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விநோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் அழுத்தங்களை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
போரினால் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நண்றிகள்.
http://news.lankasri.com/show-RUmqzBRXNUnv0.html

நல் வாழ்த்துக்கள் !!

சாந்தியும் சமாதானமும் நிறைந்த இனிய நத்தார் புது வருட நல் வாழ்த்துக்கள் !

இலங்கையில் கொழும்பு அருகே உள்ள மாத்தளையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் அருகே, ராட்சத சவக்குழி கண்டிபிடிக்கப் பட்டுள்ளது !

இலங்கையில் கொழும்பு அருகே உள்ள மாத்தளையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் அருகே, ராட்சத சவக்குழி கண்டிபிடிக்கப் பட்டுள்ளது. இலங்கையில் தலைநகர் கொழும்பில் இருந்து 142 கிமீ தொலைவில் உள்ள மாத்தளையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் அருகே, கண்டிபிடிக்கப்பட்டுள்ள சவக்குழியில் ஏராளமான எலும்புக் கூடுகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளது !
1,350 சதுர அடியில் அமைந்துள்ள அந்த சவக்குழியைத் தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர். இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரகணக்கானோர் காணாமல் போய்விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தச் சவக்குழி, போரில் மரணமடைந்த தமிழர்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ஆனால், கடந்த 1989ம் ஆண்டு காவல்துறை கொன்று குவித்த 'ஜனதா விமுக்தி பெரமுனா' இயக்கத்தின் சிங்கள போராளிகளின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என்றும் ஒரு சிலர் சந்தேகிக்கின்றனர். இந்த எலும்புக் கூடுகள் குறித்து விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. மருத்துவமனை அருகே எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நண்றி; http://www.inneram.com/news/srilanka-news/skeletons-found-near-the-hospital-7414.html

மோசடி மற்றும் கட்டாயப்படுத்தல் மூலம் இளம் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்- WAN அறிக்கை |

மோசடி மற்றும் கட்டாயப்படுத்தல் மூலம் இளம் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்- WAN அறிக்கை, பிரசுரகளம் | Sothilingam | December 13, 2012 9:23 am
மோசடி மற்றும் கட்டாயப்படுத்தல் மூலம் இளம் தமிழ் பெண்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்- பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள 11 பெண்கள் அமைப்பு கூட்டாகச் சேர்ந்து அமைத்துள்ள பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (டபிள்யு.ஏ.என்), கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெண்களை இராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையிட்டு ஆழமான கவலை அடைந்துள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்பவர்களுக்கு, விசேடமாக அந்தப் பிரதேசங்களில் உள்ள பெண்களுக்கு,வேண்டிய மிகவும் அடிப்படையான வசதிகளைத் தானும் அளிப்பதற்கு போருக்கு பிந்திய அபிவிருத்தி தவறியுள்ளது. போதுமான பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் போன்றவை இல்லாமல், இன்னும் சொல்வதானால் மிகவும் அடிப்படைத் தேவையான பாதுகாப்பாகத் படுத்துறங்குவதற்கு வேண்டிய ஒரு இடம் கூட இல்லாத பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். யுத்தத்தின் பின்பு வன்னியில் வாழும் 60 விகிதமான குடும்பங்களின் தலைவர்களாக பெண்களே உள்ளனர், வீட்டிலுள்ளவர்களுக்கு தேவையான முக்கிய பாதுகாப்பை வழங்குபவர்களாக இருப்பதுடன், மேலதிகமாக அவர்களின் குடும்பத்தின் முதன்மையான ஊதிய வருவாயை சம்பாதிப்பவர்களாகவும் பெண்களே உள்ளனர். எனவே நாட்டின் சமூக, பொருளாதார, மற்றும் கலாசார தேவைகள், உரிமைகள் என்பனவற்றை இட்டு நிரப்பும் முக்கியமான பாத்திரத்தை பெண்களே வகிக்கிறார்கள். உயர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், மற்றும் வாழ்க்கைச் செலவினம் என்பன அவர்களின் தெரிவுகளை கட்டுப்படுத்துவதுடன், பெண்கள் தங்கள் தெரிவுகளுக்கு அப்பாற்பட்ட முடிவுகளை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளாhகள். பொருளாதார செயற்பாடுகளில் செலுத்தப்படும் இராணுவத்தின் தலையீடு உட்பட்ட இராணுவ மயமான சூழலில், ஏற்கனவே பலவீனமான நிலையில் உள்ள இந்த சமூகத்திடம் நிருவாகம், ஏன்; நல்லிணக்கம் கூட நன்மை பயக்குவதாக அல்லாமல் அதனை மேலும் வலுவிழந்ததாக்கியுள்ளன. சமீப வாரங்களில் ஊடகங்கள் பிரதானப்படுத்தி தெரிவித்திருப்hதைப்போல, தமிழ் பெண்கள் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார்கள். அதேவேளை இந்த செயற்பாடு நல்லிணக்கத்துக்கு உட்பட்டதாகவும் மற்றும் அதை நோக்கியதுமான ஒரு நடவடிக்கையைப் போல தோற்றமளிக்கக்கூடும், ஆனால் ஒரு மேலோட்டமான பார்வையில் நோக்கும் போது அந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை,தகவல் வழங்கல், என்பனவற்றில் பற்றாக்குறை இருப்பதாகத் தென்படுவதுடன், வற்புறுத்தல்களும் இடம்பெற்றாதகத் தெரிகிறது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இராணுவத்தினரே இந்த ஆட்சேர்ப்பில் தொடர்பு கொண்டிருப்பதுடன் அவர்கள் பொருளாதார ரீதியில் பலவீனமான குடும்பங்களையே இதற்காக இலக்கு வைத்துள்ளனர். சில கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள் அல்லது அவர்கள் நேரடியாகச் சென்றுள்ளார்கள் மற்றும் சில சம்பவங்களில், அவர்கள் அந்தப்பகுதி கிராம சேவையாளரை பயன்படுத்தியுள்ளார்கள். பெண்கள் தலைமையிலுள்ள குடும்பங்கள் அல்லது, ஐந்து அல்லது ஆறு குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்கள் என்பனவற்றில் உள்ள இளம் பெண்களே பொதுவாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் பெரிதும் கவலைப்படுவதாக உள்ள விடயம் தகவல் வழங்குதல் மற்றும் முறையான சம்மதம் பெறுதல் என்பனவற்றில் உள்ள குறைபாடுகளே.
ஆட்சேர்ப்புக்கு ஆளானவர்களிடம் அவர்கள் எழுதுனர் சேவை, அல்லது கிராமசேவையாளருடனான வேலைகளிலேயே ஈடுபடுத்தப்பட உள்ளார்கள், அந்த வேலை சில மணித்தியாலங்களுக்கு மட்டுமே உள்ளது மற்றும் அவர்களால் அவர்களது சொந்த இடங்களிலேயே வேலை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாதாந்தம் 30,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 109 பெண்கள் அதற்காக விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றியுள்ளார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களில், அவர்கள் இராணுவத்துக்காக வேலை செய்யவேண்டியிருக்கும் மற்றும் தங்கள் கடமைகளைச் செய்வதற்காக அவர்கள் இராணுவத்தில் சேரவேண்டியிருக்கும் என்று ஒருபோதும் அவர்களிடம் தெரிவிக்கப்படவில்லை. 2012 நவம்பர் 5ல், இந்த வேலைகளுக்காக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்த இந்த பெண்களை, இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ஒரு ஆண் மருத்துவர் மற்றும் ஒரு ஆண் தாதி ஆகியோரால் இந்தப் பெண்கள் ஒரு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் பெயர் மற்றும் விலாசம் என்பனவற்றறைத் தவிர சகல தகவல்களும் சிங்கள மொழியிலேயே சேகரிக்கப்பட்டன. அந்தப் பெண்களிடம் கிராம சேவையாளர் அல்லது சமாதான நீதவான் அல்லது கிறீஸ்தவராக இருக்குமிடத்து ஒரு கிறீஸ்தவ பாதிரியார் ஆகிய யாராவது ஒருவரிடமிருந்து ஒரு பரிந்துரைக் கடிதம், பிறப்பு சான்றிதழ், மற்றும் பாடசாலை விடுகைச் சான்றிதழ் என்பனவற்றை அவர்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு சென்று ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்தப் பெண்கள் அந்த ஆவணங்களை ஒப்படைக்க காவல்நிலையத்துக்குச் சென்றபோது அங்கு அவர்களது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இராணுவ நபர்கள் இந்தப் பெண்களின் வீடுகளுக்கு சென்று நவம்பர் 15ந்திகதி வந்து வேலையில் இணையுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். இராணுவத்தினர் இந்தப் பெண்கள் மற்றும் யுவதிகளிடம் அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் சிங்களம் என்பனவற்றை போதிப்பதற்காக 03 மாத வதிவிட கற்கைநெறி ஒன்று உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள். நவம்பர் 15,அன்று ஒரு ஆண் இராணுவ அதிகாரி அந்தப் பெண்கள் அனைவரையும் அவர்கள் வீடுகளில் இருந்து கூட்டிச்சென்று பாரதிபுரம் முகாமுக்கு அனுப்பிவைத்தார். முதலாவது நாள் அந்தப் பெண்களின் சுய விபரங்களை சேகரிப்பதிலேயே, கழிந்தது. 16ந் திகதியான இரண்டாவது நாள், புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களுக்காக ஒரு இராணுவ விழா நடத்தப்பட்டது. அப்போதுதான் அந்தப் பெண்கள் தாங்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர் என்கிற விபரத்தை அறிந்தனர். சிலர் அச்சமடைந்து தங்கள் குடும்பங்களுக்கு அறிவித்ததுடன், தாங்கள் இராணுவத்தில் சேருவதற்கு விரும்பவில்லை என்று இராணுவத்தினரிடம் அறிவித்தார்கள். ஆனால் விழா முடிந்த பிற்பாடுதான் அவர்கள் போகமுடியும் என்று அவர்களிடம் இராணுவத்தினர் அறிவித்தனர். 17ந் திகதி அந்த விழா இராணுவ முகாமிற்கு உள்ளே நடைபெற்றது, அதேவேளை அந்தப் பெண்களின் குடும்ப அங்கத்தினர்கள் சிலர் அதே முகாமின் மறுமுனையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒரு பெண் இராணுவ அதிகாரி, ஒவ்வொரு புதிய ஆட்சேர்ப்பாளரின் அருகில் நின்றபடி அந்தப் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் தகவல் பரிமாற்றம் செய்வதை தடுத்தார். இந்தப் பெண்களின் தகப்பன்மார்கள் மாலையணிவித்துக் கௌரவிக்கப் பட்டார்கள் மற்றும் அவர்களது தாய்மாருக்கு “வீரத்தாய்” என்று பொறிக்கப்பட்ட பட்டயங்கள் வழங்கப்பட்டன. அந்த 109 பெண்களில் 06 பெண்கள் அவர்களது குடும்பத்தினருடைய முயற்சியினால் விடுவிக்கப்பட்டார்கள். அதன் விளைவாக ஏனைய பெண்களும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள். டிசம்பர் 02 ந்திகதி முதல் முகாமுக்குள் கைபேசிகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. அந்தப் பெண்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்களுக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ துல்லியமான தகவல்கள் வழங்கப்படவில்லை, அதனால் அவர்கள் விரும்பியதை தேர்வு செய்வதற்கான அனுமதி அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த நடைமுறைகள், சட்டப்படி தேவையான வர்த்தமானி அறிவித்தல் செயல்முறைகளை மீறுவதாக உள்ளன. இந்தப் பெண்களின் , குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளவர்களது வாழ்க்கையில் , உடல் தகுதிப் பயிற்சிகள் வழங்கவேண்டிய தேவை, மற்றும் வடபகுதி முழுவதும் இராணுவ மயப்படுத்தல், மற்றும் இந்தப் பெண்கள் சேவையில் உள்ளவரை அவர்களுக்கான தொடர்ச்சியான பாதுகாப்பு போன்றவை சம்பந்தமாக அரசாங்கம் மற்றும் இராணுவத்தினர் ஆற்றியுள்ள பங்களிப்பு காரணமாக எற்பட்டுள்ள இந்த நிலமை ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. வேறு இரு மாறுபட்ட நிகழ்வுகளில், குடியியல் சேவைக்குரிய நியமனங்கள் (பாலர் கல்விப் போதனை ஆசிரியர்கள், மற்றும் இராணுவத்தினர் நடத்தும் அரசாங்கப் பண்ணைகளுக்கான வேலைகள்) அதற்குரிய சிவில் நிருவாகத் துறைகளினால் வழங்கப்படுவதற்குப் பதிலாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிவில் நிருவாகத்தில் இராணுவமயமாக்கல் மற்றும் வன்னியில் உள்ள சமூகத்தினருக்கு நடந்துள்ளவை என்பன,சமமான, நியாயமான, மற்றும் வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கடப்பாடு சம்பந்தமாக ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. ஐநா பாதுகாப்புச் சபையின் பிரேரணை 1325 தெளிவாக தெரிவிப்பது, யுத்தத்தின் பின்னான சூழலில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பெண்களின் பூரண பங்களிப்பு மிகவும் அவசியம், ஆயுதக் களைவு மற்றும் படை நீக்கம் என்பனவற்றின் முன்நிபந்தனையுடனான அவிவிருத்திக்கு, பெண்களின் தனித்தன்மையான தேவைகளை கணக்கில் கொள்ளல் வேண்டும், என்று. முன்னர் போரினால் சீரழிந்துள்ள பிரதேசங்களில் தீர்மானங்களை மற்றும் தெரிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம், பெண்களுக்கு குறைவாக இருப்பதையிட்டு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு (டபிள்யு.ஏ.என்), ஆழ்ந்த கவலை அடைகிறது, மற்றும் அரசாங்கத்தின் நல்லிணக்க திட்டத்தின் ஒரு நியாயமான செயல்முறையாக சிவில் நிருவாகம் முற்றாக சிவில் கட்டமைப்புகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது http://thesamnet.co.uk/?p=42307

யாழிலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தின் இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்றுவரை யாழ். மாவட்டத்திலிருந்து 39 பேரும் கிளிநொச்சியிலிருந்து 4 பேருமாக மொத்தம் 43 பேர் கடந்த சில வாரங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி கிளிநொச்சியில் ஒரு நபரும் கடந்த 17 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/local.php?vid=2173
இனியும் அரசை நம்பி பயனில்லை, சர்வதேசத்தின் உதவியுடன் தீர்வை பெற்றுக்கொள்ள அனைவரும் போராட வேண்டும்: ரெலோ Posted by Administrator on Thursday, December 20, 2012 · Leave a Comment
தமிழ்த் தாயகத்தில் இலங்கை இராணுவம் நிலை கொண்டிப்பது குறித்த விவாதங்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் சமீப காலங்களாக இடம் பெற்ற வருகின்றது. இது குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறது. இலங்கை அரசினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் இனப் படுகொலையை முன்னின்று நடாத்திய இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப் படைகளாவே பார்க்கப்படுகின்றது. எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ்மக்களின் விருப்பமாகும். இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்ட பின்னர் தமிழ் மக்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவம் தமிழ்த் தாயகத்தில் நிலை கொள்ள முடியும்.தமிழ் இனப் படுகொலைகளுக்கும், போர்க் குற்றங்களுக்கும் சர்வதேச நீதியை வேண்டி நிற்கும் தமிழ் இனம் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வையே நாடி நிற்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் இனத்தின் தேசிய விடுதலை இயக்கம் என்பதினை மிகப் பெரும்பாலன தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்தாயகத்தில் நடைமுறை அரசாங்கம் (Defacto State) செயல்பாட்டில் இருப்பதையும் உலகம் அறிந்திருந்தது. பெரும் தவறுகளைச் செய்த பலஸ்தீன விடுதலை இயக்கம் நடாத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக பலஸ்தீனம் பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடாக ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே அயர்லாந்தில் ஐரிஸ்; குடியரசு இராணுவம் நடாத்திய ஆயுதப்போராட்டத்தின் விளைவாக பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டள்ளது.ஆனால், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகின் பலநாடுகள் சேர்ந்து அழித்தது. ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது எந்த ஒரு நாடாவது பகிரங்கமாக தமிழ் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. தற்பொழுது இலங்கையின் வன்னிப் பகுதியில் மாபெரும் மனிதப் படுகொலைகளைத் ஐக்கிய நாடுகள் சபை தடுக்கத் தவறி விட்டதாக அதன் உள்ளக அறிக்கையே குற்றம் சாட்டும் அளவுக்கு நிலமை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பியிராமல் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய தீர்வைப் பெற நாம் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலமே இலங்கைத் தீவில் நிலையயான சமாதான ஏற்படுத்தப்பட முடியும். http://telo.org/?p=7133&lang=ta
தமிழர்களை இந்த அரசு சீண்டிப் பார்ப்பதை இனியும் அனுமதிக்க முடியாது! – செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் உரை!! Posted by Administrator on Saturday, December 15, 2012 · Leave a Comment இலங்கை அரசை ஆளுகின்றவர்கள் தொடர்ச்சியாக எமது இனத்தை நசுக்குகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருகாலத்தில் ‘தரப்படுத்தல்’ என்ற விதத்தின் அடிப்படையிலே மாணவர்களை நசுக்க நினைத்ததினால் புரட்சி வெடித்தது. இவ்வாறான நிலை காரணமாக
எங்களுடைய இனம் கிளர்ந்தெழுந்து தமது எழுச்சியையும் போராட்டத்தையும் சிறப்பாக பல தியாகங்களுக்கு மத்தியில் செய்து முடித்துள்ளது.இன்றைக்கு இந்த அரசு தமிழர்களுடைய சுய கௌரவத்தையும் சுயநிர்ணயத்தையும் தட்டிப்பார்க்கின்ற நிலைக்கு இறங்கியிருக்கின்றது. தமிழர்களை கிள்ளுக்கீரை என்று நினைக்கும் அளவிற்கும் அடிமைத்தனம் என்று நினைக்கும் தன்மையிலும் செயற்படுகின்றது. இதை நாம் உடைத்தெறியும் தன்மை கொண்டவர்களாக மாறவேண்டும்.இந்த அரசு செய்யும் அடாவடித்தனங்களுக்கு எதிராகவும் இராணுவம் செய்யும் அத்தனை கொடுமைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும். எமது நிலத்தை அபகரிக்கின்ற எமது மதங்களை உடைத்தெறிகின்ற, எமது மாணவர்களை கைது செய்கின்ற தன்மைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லும் வகையில் எமது செயற்பாடுகள் இருக்கவேண்டும்.இனியும் அரசு தமிழர்களை சீண்டிப்பார்க்கின்ற தன்மைக்கு அனுமதிக்க முடியாது. தமிழர்கள் சுயகௌரவத்துடனும் சுயநிர்ணயத்துடனும் வாழுகின்றனர் என்பதனை எமது ஜனநாயக போராட்டங்கள் மூலமாக உலக நாடுகளுக்கு காட்டுவதனூடாக நாம் சளைக்கமாட்டோம். எமது இனம் மீண்டு எழும் என்கின்ற செய்தி சென்றடைய வேண்டும் என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன். பாஸ்கரா இந்த அரசு மிக மோசமான செயற்பாட்டை நிகழ்த்தி வருகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது அதுவும் தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியவர்களை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவதற்கு ஆயுதமா ஏந்தினார்கள்? எதற்காக அப்பாவி மாணவர்கள் மீது புலி சாயம் பூசப்படுகின்றது. எமது மாணவர்கள் கற்றது குற்றமா? கற்றதனால் முன்னேறியது குற்றமா? முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு, கல்வி கற்கும் மாணவர்களுக்கும் புனர்வாழ்வு. என்ன சொல்கின்றது இந்த அரசு.இதேவேளை, எமக்குள் உள்ள பொது பிரச்சினைகளை சந்தியில் வைத்து பேச வேண்டிய தேவையில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய நாம் இன்று வடக்கு கிழக்கில் இடம்பெறும் எமது மக்களுக்கான பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றோம் என்றால் அது ஓரணியில் நாம் நிற்பதனால் தான்.ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவம் இருக்கும் அதனை இழக்கமுடியாது. எமது பிரச்சனைகளை மூடிய அறையில் இருந்து பேசி முடிவெடுப்போம். பொது இடத்தில் அவற்றை பேசி எம்மை நாமே தரம் குறைக்கும் செயற்பாடுகளை விடுத்து ஓரணியாக எமது போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா.

Saturday, 15 December 2012

சிறிலங்காவில் பெளத்தம் மட்டும்தான் - ஏனைய மதங்களுக்கு இடமில்லை [ வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 08:27 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவின் தென்மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெற்றிய பிரதேசத்திலுள்ள Jeevanalokaya Sabhawa தேவாலயத்தில் கடந்த ஞாயிறன்று
காலைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்கர்கள் மீது 80 வரையான புத்த பிக்குகளின் தலைமையில் 1000ற்கு மேற்பட்ட காடையர்கள் காடைத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலை மேற்கொள்வதற்கு காவற்துறையின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதுடன், தேவாலய சொத்துக்கள் நாசமாக்கப்பட்டு, அங்கு பிராத்தனையை நடாத்திக் கொண்டிருந்த போதகர் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக கத்தோலிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தேவாலயத்தை ஒரு நாளுக்குள் மூடுமாறு குறித்த தாக்குதலை தலைமை தாங்கிய புத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அறியப்படுகிறது. இத்தாக்குதலாளிகள் தேவாலயத்திற்கு சொந்தமான தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு சேதம் விளைவித்தது மட்டுமல்லாது, இத் தேவாலயத்தின் போதகர் மீதும் தீவிர தாக்குதலை நடாத்தியிருந்தனர். கற்பாறையின் மூலம் தாக்கப்பட்ட போதகரின் அடிவயிறுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும், தாக்குதலுக்கு உள்ளான போதகரை தொடர்ந்தும் காடையர் குழு கண்காணித்துக் கொண்டிருப்பதால் இவரால் தனது காயத்திற்கு கூட மருத்துவ சிகிச்சை பெறமுடியாத நிலையிலுள்ளதாக குறித்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இக்காடைத்தனமான தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே. இதில் சேதமடைந்த தேவாலய சொத்துக்கள் கிட்டத்தட்ட 4000 அமெரிக்க டொலர்கள் பெறுமதிமிக்கன என தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த இரு காவற்துறையினர் தேவாலயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கண்காணிப்பதற்காக கடமையில் நின்றிருந்தனர். இத்தாக்குதலை அடுத்து மேலும் எவ்வித தாக்குதலும் நடாத்தப்படுவதை தடுப்பதற்காக மேலதிக காவற்துறையினரும் இராணுவத்தினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தாக்குதல் இடம்பெறுவதற்கு முதல்நாள் சில புத்த பிக்குகள் தேவாலய போதகரை சந்தித்து இத்தேவாலயத்தில் வழிபாடு இடம்பெறுவதற்கு புத்த பிக்குவிடம் அனுமதி வாங்க வேண்டும் என எச்சரித்திருந்தார். சிறிலங்காவின் அரசியல் யாப்பின் பிரகாரம் மதச்சுதந்திரம் காணப்படுவதாக போதகர், குறித்த பிக்குவிடம் பதிலளித்திருந்தார். இந்த அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் தேவாலயத்தில் வழிபாடு நடக்குமானால் தான் தேவாலயத்தை மூடுவேன் அல்லது சேதங்களை விளைவிப்பேன் என அந்த புத்தபிக்கு மீண்டும் போதகரிடம் வலியுறுத்தியிருந்தார். "தற்போதைய சிறிலங்காவின் கூட்டாட்சி அரசாங்கத்தில் புத்தபிக்குகள் பிரதான அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் குற்றங்களைப் புரிகின்றனர். இது மட்டும் தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல. கத்தோலிக்கர்களுக்கு எதிராக புத்த பிக்குகளின் தலைமையில் 50ற்கும் மேற்பட்ட மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன" எனவும் தகவல் தந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தெனியாயவிலும் இவ்வாறான ஒரு சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இத்தாக்குதல் சம்பவமானது அதிகாரம் மிக்க அரசியல் அதிகாரிகளின் துணையுடனேயே இடம்பெற்றது. சிறிலங்காவின் மொத்த சனத்தொகையான 20.4 மில்லியன் மக்களில் 70 சதவீதத்தினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். சிறிலங்காவில் 8.4 சதவீத கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 40 சதவீதத்தினர் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். சில வலது சாரி புத்த சமயக் குழுக்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்தை மேலும் வலுப்படுத்தி நாட்டிலுள்ள ஏனைய சிறுபான்மை சமயங்களைப் பின்பற்றுபவர்களை அழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். சிறிலங்காவின் மத்திய மாகாணத்திலுள்ள நவீன மகரகமவிலுள்ள ராஜ மகா விகாரையில் கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் Buddhist Power Force என்கின்ற அமைப்பால் சிங்கள பௌத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் சிறுபான்மை முஸ்லீம் மற்றும் கத்தோலிக்கர்களிடமிருந்து பௌத்தர்கள் எவ்வாறு மீளெழுச்சி கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. சிறிலங்காவில் வாழும் கத்தோலிக்கர்களின் மத வழிபாடுகளை அழிப்பதை நோக்காகக் கொண்டு புத்த பிக்குகளால் தலைமை தாங்கப்படும் செல்வாக்கு மிக்க அரசியற் கட்சியும், அரசாங்கத்தின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய சட்டம் ஒன்றை புதிதாகக் கொண்டு வருவதற்கான முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. "சிறிலங்காவில் செயற்படும் தேவாலயங்களின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட வேண்டும் என அண்மையில் இந்நாட்டின் மத விவகாரங்களுக்கான அமைச்சு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. தேவலாயம் என்றால் என்ன என்பதைக் கூட இச்சுற்றறிக்கை வரையறுப்பதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன" என தேசிய கத்தோலிக்க சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. செய்தி வழிமூலம் : Christian Today மொழியாக்கம் : நித்தியபாரதி http://www.puthinappalakai.com/view.php?20121214107446
‘ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை’க் காணவில்லை – பிரான்செஸ் ஹரிசன் சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப்புலிகளின்
கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த வன்னியில் ‘ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேரை’க் காணவில்லை என பி.பி.சி சேவையின் செய்தியாளராக 2000-2004 வரை சிறிலங்காவில் கடமையாற்றிய வரும், சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ‘மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன’ என்ற நூலின் ஆசிரியருமான பிரான்செஸ் ஹரிசன் இந்திய ஊடகங்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு காணாமற் போன மக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் காணாமற் போயுள்ளதை உலக வங்கியின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் மூலம் தன்னால் உறுதிப்படுத்த முடிவதாகவும் பிரான்செஸ் ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.”இதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களோ அல்லது நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையோ உள்ளடக்கப்படாதிருக்கலாம். ஆனால் சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் காணாமற் போன இந்த மக்கள் தொடர்பில் இந்நாட்டு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்” என பி.பி.சி முன்னாள் செய்தியாளர் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், யுத்தத்தின் பின்னர் 1.06 இலட்சம் பேர் காணாமற் போயுள்ளதாக இவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ் மொழியிலும் வெளிவரவுள்ள மரணங்கள் இன்னமும் எண்ணப்படுகின்றன என்ற நூலில், சிறிலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் அகப்பட்டுத் தப்பிப்பிழைத்த முன்னாள் புலி உறுப்பினர், மருத்துவ தாதி, அருட்சகோதரி, ஆசிரியர் போன்ற பல்வேறு தரப்பினரின் யுத்த அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நூலில் யுத்தத்திலிருந்து உயிர் தப்பியவர்களின் சாட்சியங்கள் மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நூலாசிரியர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
Selvam Adaikkalanathan's parliament speech

ஹம்பாந்தோட்டையில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்- செல்வம் எம்.பி.கண்டனம் ஹம்பாந்தோட்டை வீரஹெட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவமானது இந்த நாட்டை புத்த பிக்குகளே ஆளும் தரப்பினராக
எடுத்துக்காட்டுவதாகவும் குறித்த தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஹம்பாந்தோட்டை வீரஹெட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விசேட திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது சுமார் 80 பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பலொன்று தேவாலயத்தினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்கிருந்த வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தீ வைத்தும் கொளுத்தியுள்ளது.அத்துடன் ஆலய பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது ஆலயத்தினுள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்துள்ளனர். கடந்த 11 வருடங்களுக்கு மேலாக குறித்த தேவாலயம் அவ்விடத்தில் அமைந்திருந்த போதும் ஆலயத்தின் சகல நடவடிக்கைகளையும் பௌத்த பிக்குகளிடமே அனுமதி பெற்றே செய்ய வேண்டிய நிலை இருக்கின்றது.குறித்த ஆலயம் மீதான தாக்குதல் உட்பட நாட்டில் பௌத்த பிக்குகளினால் பல கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளி வாயல்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.இந்த சம்பவங்களின் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு இந்த நாட்டில் எவ்வித உரிமைகளும், சுதந்திரமும் இல்லை என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.இந்த சம்பவங்களின் மூலம் பௌத்த பிக்குகளே இந்த நாட்டை ஆளும் தரப்பாக வெளிப்படையாக காட்டுகின்றது.ஹம்பாந்தோட்டை மாவட்டமானது ஜனாதிபதியின் மாவட்டமாக காணப்படுகின்ற போதும் அங்குள்ள கிறிஸ்தவ மக்களுக்கும்,அங்குள்ள ஆலயங்களுக்குமான பாதுகாப்புக்கள் இன்று கேள்விக்குறியாகியுள்ளன.தொடர்ந்தும் பௌத்த பிக்குகள் இவ்வாறான செயலில் ஈடுபடுவதன் மூலம் இந்த நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்த முடியாது.எனவே ஏற்கனவே பல வணக்கஸ்தலங்கள் பௌத்த பிக்குகளின் தலைமையில் உடைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்று அந்த தாக்கம் மறைவதற்கு முன் ஜனாதிபதியின் மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் உள்ள கிறித்தவ தேவாலயத்தின் மீதும்,அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மிகவும் வேதனையளிக்கின்றது.இதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.எனவே இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி உடன் தலையிட்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளுகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.