தமிழர்
விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு
கட்சிகளும் இணைந்து ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக்
கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு
செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்படி மாநாட்டில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாநாட்டின் போதே இந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு
கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும்
கலந்துகொண்டனர்.இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால்
தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன. அத்தீர்மானங்கள்
பின்வருமாறு,
• தமிழ் மக்களின் அபிலாஷைகளை
நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய
கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில்
ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவு செய்யப்படவில்லை.
• பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை
நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள்,
சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும்
இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நேரடி
பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை
எடுக்க வேண்டும்.
• ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக்
கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த
முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.
• இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத
சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி,
ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ்
தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்
அடிப்படையில் விரைவில் ஒரு முன்னணியாக, தனி அரசியல் கட்சியாக பதிவு
செய்யப்பட வேண்டும்.
• தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு
செய்யப்பட்டதன் பின்னர் இதில் சேர விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை
வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் அபிலாஷைகளை
நிறைவேற்றும் தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும்’ என்ற தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
Posted by TELOadmin on Sunday, April 28, 2013 · Leave a Comment
No comments:
Post a Comment