Pages

Saturday, 7 April 2012

சர்வதேச அழுத்தங்கள் ஏற்படாமல் எந்த மாற்றங்களும் வராது!- ரெலோ சிவாஜிலிங்கத்துடன் பேட்டி. பகுதி 2 : த சோதிலிங்கம்.


கேள்வி: தொடர்ச்சியாக பெய்யும் மழையினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்வுநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம் அவை பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள்?
பதில்: வடக்கு கிழக்கு பகுதிகளில் பருவபெயர்ச்சி மழை வழமையாக பெய்யும் காலம்தான் இது ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த பருவபெயர்ச்சி மழை சிறிது சிறிதாக பெய்யாமல் பகுதிபகுதியாக அடைமழையாகவே பெய்கின்றது. இவற்றின் காரணமாகவே வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இது இயற்கையின் மாற்றங்கள். சுனாமிக்கு பின்னர் ஏற்பட்ட மாற்றங்களோ அல்லது வேறு காரணங்களோ தெரியவில்லை ஆனால் வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்த வடக்கு கிழக்கு மக்களுக்கான உதவிகள் கிடைக்காமை என்பது வேதனையிலும் வேதனையானது. ஒருசில சமூகசேவை அமைப்புகள் சில உதவிகளை செய்து இவை பத்திரிகைகளில் பெரிதாக வெளிவருகின்றன. மற்றும்படி உதவிகள் என்பது கிடையாது அதிலும் வன்னி கிழக்கு பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மக்களுக்கு பாரிய பிரச்சினைகளை கொடுத்துவருகிறது.
கேள்வி: மக்கள் பெரும்போக அறுவடையில் மழை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதா?
பதில்: இங்கு யாழ்ப்பாணத்தில் வயல்வெளிகள் யாவும் வெள்ளத்தால் மூடிக்கிடப்பது பார்த்தால் விவசாயிகளுக்கு ஓர் அச்சுறுத்தலான நிலைமைகளையே உருவாக்கியுள்ளது.
கேள்வி: கடந்த 3 மாதங்களில் நாட்டில் 342 கடத்தல்கள் நடைபெற்றுள்ளதாக பாராளுமன்றத்தில் திரு ரங்கே பண்டார பேசியுள்ளார். இக்காலத்தில் அதுவும் மனித உரிமைகள் தினத்தில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவைகள் பற்றிய போராட்டம் ஒன்றினையும் நீங்கள் உட்பட தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து நடாத்தியுள்ளீர்கள். இவைபற்றி விரிவாகக் கூறுங்கள்?
பதில்: இரு இளைஞர்களில் ஒருவர் புத்தூர் பகுதியை சேர்ந்த குகன் என்ற இளைஞர் திருமணமானவர் 8 வயது பெண்குழந்தையின் தந்தை. கடந்த காலங்களில் புலிகளின் ஆதரவாளராக இருந்துள்ளார் என்று கருதப்படுகிறது. அவர் காணாமல் போனவர்களின் விடயங்களில் அக்கறை காட்டிவருபவர். அடுத்தவர் லலித ஜெயராஜ் என்பவர் ஜேவிபி யின் யாழ் மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டவர். அவரின் தந்தை ஒரு தமிழர் தாய் சிங்களவர் இரு மொழிகளிலும் சரளமாக உரையாட, பேசக் கூடியவர். ஆனால் அவர் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியின் நடவடிக்கையில் பங்கு பற்றியபோது பல தடவைகள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டவர். பல தடவைகள் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டவர். கடந்த மனித உரிமைகள் தினத்தன்று தெற்கிலிருந்து வந்த முற்போக்குசக்திகளும் இங்கு இருக்கும் சக்திகளும் இணைந்து காணாமல் போனவர்கள் பற்றிய கவனஈர்ப்பு போராட்டத்தை யாழ் பஸ்நிலையத்திற்கு முன்பாக நடாத்த இருந்தபோது அதில் கலந்துகொள்ள இருவரும் புத்தூர் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளனர். பின்னர் அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவுமில்லை. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இவ்வாறு இலங்கையில் ஆட்கடத்தல் ஆட்களை இல்லாமல் செய்வதை இலங்கை அரசு செய்வதோடு மாத்திரமல்ல சர்வதேச மனித உரிமைகள் தினத்திலும் செய்துள்ளது ஒரு அச்சமூட்டும் சம்பவமாக எடுத்துக்காட்டி நிற்கிறது.
கேள்வி: இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் துணை இழந்த பெண்களின் நிலைகள் பற்றியும் அவர்களது பாதுகாப்பு சம்பந்தமாகவும் அவர்கள் மீது நடாத்தப்படும் பாலியல் வன்முறைகள் பற்றியும் பல மனித உரிமைகள் அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன. அத்துடன் இந்த கணவனை இழந்த பெண்கள் பற்றி அரசு அக்கறையற்று இருப்பதாகவும் எல்எல்ஆர்சியில் இந்த பிரச்சினைகள் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. இது பற்றி என்ன அறிகிறீர்கள்?
பதில்: இந்த போரினால் பரவலாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். இது தெற்கில் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளபோதில் ஏற்பட்ட பிரச்சினைகளும் இதே போலத்தான். ஆனால் வடக்கு கிழக்கில் இவை பல மடங்கு பாரிய அளவிலானது. யாழ் மாவட்டத்தில் மட்டும் 29 ஆயிரம் பேரும் வன்னி உட்பட இதர பிரதேசங்களில் 99 ஆயிரம் பேர்களும் உள்ளதாக அரசின் கணிப்புகள் கூறுகின்றன. பல்வேறு அமைப்புகளிடம் பல்வேறு புள்ளி விபரங்கள் காணப்படுகின்றது. எப்படி இருப்பினும் 1 லட்சத்துக்கும் அதிகமான விதவைகள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கான உதவிகள், ஆதரவுகள் அரசினாலோ அல்லது ஆதரவு அமைப்புகளாலோ எந்த உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இந்திய உதவியுடன் விதவைகளுக்காக மறுவாழ்வுத்திட்டங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன என்பது அறியக்கூடியதாக இருக்கிறது.
இவர்கள் சமூகரீதியாக நொந்து போயிருக்கிறார்கள். சமூகத்தில் உள்ள தீய சக்திகள் பெண்களை விதவைகளை பாலியல் கொடுமைகளுக்கு ஆட்படுத்துகிறார்கள். அண்மையில் ஒரு தாய், போரில் கணவனை இழந்த பெண் மூன்று குழந்தைகளின் தாய், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இப்படியான பல சம்பவங்கள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடைபெற்றுள்ளது. அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட வேண்டிய நிலைமைகள் உருவாகியிருக்கிறது. இப்படியான பிரச்சினைகளின் சமூகப்பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் இல்லை. கொடுக்கப்படவில்லை, செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை, வன்னியில் வறுமை நிலவுகின்றது, அதன் காரணமாகவே இவை நடைபெறுகின்றது. இன்று வடக்கில் நடைபெறும் அபிவிருத்தித் திடடங்களுக்கான தொழிலாளிகள் தெற்கிலிருந்தே கொண்டுவரப் படுகிறார்கள். சாதாரண தொழிலாளியாக கூட இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை அரசு மறுக்கிறது. வேலைகள் இல்லை, வேறு தொழில்கள் செய்யக்கூடிய சூழ்நிலைகைள் இல்லாத சூழ்நிலையில் வறுமை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஒரு விடயத்தை இங்கு கவனத்தில் எடுத்து பேசவும் விரும்புகிறேன். போர்காலத்தில் புலிகளை ஆதரித்தவர்கள், புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் கூட இப்படியான மக்களை, முன்னாள் புலிகளை, இன்று விதவைகளாக உதவியற்றவர்களாக இருப்பவர்களை திரும்பியும் கூட பார்க்கிறார்கள் இல்லை. இப்படியாக உதவி தேவைப்படுவோரில் ஒரு 5சத விகிதத்தினருக்கே ஏதோ உதவிகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை.
நாங்கள் ஊடகங்கள் ஊடாக புலம்பெயர் மக்களுக்கும் பலருக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் கூட செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஆக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் ஒரு சதவிகிதமாவது உதவி செய்தால், ஒருசிலர் ஒன்று சேர்ந்து, ஒரு 10 பவுண்கள் மாதத்திற்கு உதவி செய்தால் உதவி செய்தால் கூட பலருக்கு உதவலாம். அவசியமாக ஆதாரங்கள் தேவைப்படுகின்ற 40,000 குடும்பங்கள் உள்ளன. எந்த உதவியுமே இல்லாத சூழ்நிலையில் பெண்களின் மீதான வன்முறைகளும் நடைபெறுவது என்பது பாரிய விடயம் என்பதை நாம் யாவரும் உணர வேண்டும். புலம்பெயர் மக்களும் உணர வேண்டும். நாம் இங்கிருந்து கொண்டு என்ன செய்யலாம்?
அண்மையில் யாழ் அரச அதிபர் அவர்களால் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவரின் புலிகள் பற்றிய கருத்துக்களைப் பற்றி நான் அக்கறைப்படவில்லை. அவர் அரசின் அதிபர். பொதுவாக பெண்கள் பற்றிய பெண்கள் மீதான வன்முறைகள் பற்றிய பெண்களின் நிலைமைகள் பற்றிய அவரின் எல்லா கருத்துக்களும் நிதர்சனமான உண்மையாகும்.
கேள்வி: அண்மையில் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய ஜரோப்பிய பாராளுமன்றக் குழு வந்திருந்தாக செய்திகள் வெளிவந்திருந்தன. அவர்கள் என்ன செய்தார்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள்?
பதில்: அவர்கள் வெளிப்படையாக தனிமனிதர்களை கண்டு பேசும் சந்தர்ப்பங்கள் இல்லை. அது பேசுபவர்களுக்கு ஆபத்தானது மற்றும் யாரும் இது பற்றிய விடயங்களை தொகுத்து கொடுக்கக்கூடிய நிலைமைகளும் இல்லை. அவர்கள் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களையும் தமது தூதுவராலயங்களின் உறுப்பினர்களையும் சந்தித்தே நிலைமைகளை அறிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் யாவருக்கும் இங்கு தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைமீறல்கள் என்ன நடைபெறுகின்றன என்பதை அவர்களால் இலகுவாக புரிந்து கொள்ளக்கூடிய நிலைமைகளே உள்ளன.
கேள்வி: கடத்தல் காணாமல் போதல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. அவற்றில் நாம் அறியும் பல வடக்கு கிழக்கில் நடைபெறுபவைகளே இவை போன்ற சம்பவங்கள் தெற்கிலும் நடைபெறுகின்றனவா? அவற்றின் பின்னணிகள் என்ன?
பதில்: தெற்கில் நடைபெறும் சாதாரண சம்பவங்களுக்கு மேலாக, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் பல வன்முறைகளுக்கும் கொலைகளுக்கும் காரணமாக இருக்கிறார்கள். வடக்கில் நடைபெறுகின்ற களவுகளுக்கும் கொலைகளுக்கும் போரின் கொடுவினைகளிலிருந்து விடுபட முடியாதோர் பொருளாதார காரணங்கள் காரணமாக: வறுமையும் இல்லாமை நம்பிக்கையின்மையும் காரணமாக அந்த நிலைமைகளுக்கு மக்களில் ஒரு பகுதியினர் தள்ளப்பட்டுள்ளனர். இதை இராணுவத்தினரும் பொலீசாரும் தமது முழுமையான பலத்தையும் கொண்டு அடக்காமல் விட்டுப்பிடிப்பது போலவும் தெரிகின்றது. ஏனென்றால் அவர்கள் தமது இராணுவம் பொலீசாரும் இந்த அளவுக்கு இங்கே இருப்பதை தக்கவைத்துக் கொள்ளவும் வேண்டுமே! அதற்காகவும் விட்டு கொடுத்து போகிறார்கள் என்றே தெரிகிறது. இல்லையென்றால் அவர்களது புலனாய்வுத்துறையினர் மிகவும் வலிமையாகவும் சிறப்பாகவும் செயற்படுகின்றது, பலம்வாய்ந்தவர்கள், இவைகளை மிகஇலகுவாக கட்டுப்படுத்த முடியும். இது மேலும் சமூகச்சீரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது. இராணுவத்தை வடக்கு கிழக்கில் வைத்திருப்பதற்கான ஒரு காரணமாகவும் இப்படியான குற்றச்செயல்களை கட்டுப்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று நாம் கருதுகிறோம்.
கேள்வி: யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் பேராசிரியர்கள் மீதான மிரட்டல்கள், தாக்குதல்கள் நடத்துகின்றவர்கள் யார்? என்ன நோக்கத்திற்காக இப்படியாக நடாத்துகிறார்கள் இதன் அடிப்படை நோக்கம் என்ன?
பதில்: மக்கள் மத்தியில் எழுச்சிகள் போராட்டங்கள் அரசுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதில் அரசும் இராணுவமும் மிகவும் தீவிரமாக உள்ளது. அதில் இராணுவத்தின் புலனாய்வுத்துறையினர் மிகவும் இறுக்கமாக செயற்படுகின்றனர். அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், தொலைபேசி மிரட்டல்கள் பல நடைபெறுகின்றன. அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் கிளர்ந்து எழுந்திடக்கூடாது என்பதிலும் மக்கள் மாணவர்கள் ஒன்று சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அரசும் இராணுவமும் அடக்கி ஒடுக்குகிறார்கள். இனிமேல் இப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்பதில் எந்தவித தயவு தாட்சண்யம் காட்டாது மிகவும் இறுக்கமாக விலகல் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.
கேள்வி: கொழும்பில் தமிழர்களை கடத்தி கொலை செய்தவர்கள் என்று அறியப்பட்டவர்கள் இனம்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளனர் என்று செய்திகள் பல வெளிவந்தன. அவை பற்றி மேலதிக செய்திகள் விபரங்கள் வெளிவரக் காணோம் ஏன்?
பதில்: இந்த சம்பவங்களுக்கும் அரசுக்கும் தொடர்பிலேயே நடைபெற்றன. இவர்களுக்கிடையிலான அடிபாடுகள் சம்பவங்கள் பொதுவானவர்களுக்கு வெளிவராதது ஆச்சரியமில்லை. ஆனாலும் இப்படியான கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
கேள்வி: கடந்த மாதம் கொழும்பிலிருந்து வந்த பொலீசாரினால் மின்சார கருவிகள் அற்று மின்சாரம் பொருத்தப்பட்டிருந்தவர்களையும் கருவிகளின் தவறுகள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள வந்த பொலீசார் மக்கள் மீது மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் பல செய்திகள் வெளிவந்திருந்தது. இவை பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?
பதில்: கடந்த பல ஆண்டுகளாக இலங்கை மின்சாரசபை சீராக இயங்கவில்லை. உள்ளூராட்சி சபைகளினால் பொருத்தப்பட்ட மின்மீற்றர்கள் இருந்தன. பின்னர் இலங்கை மின்சார சபையினர் பொறுப்பேற்ற பின்பு பொருத்தப்பட மின்மீற்றர்கள் என இருவகைகளாக இருந்தன. தெற்கில் இருப்பது போன்ற நிலைமைகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை. வடக்கில் பல காலங்களாக இந்த மின் விநியோகமும் கட்டணம் அறவிடுதலும் சீராக நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதன் காரணமாக பல பிரச்சினைகளுடன் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது.
பழைய மீற்றர்களை பாவித்திருந்தவர்களுக்கு பல்லாயிரக்கணக்காக கட்டணங்கள் அறவிட்டும் அவர்களுக்கு பல ஆயிரங்கள் தண்டப்பணங்களும் செலுத்தும்படி வற்புறுத்தியும் சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இவைகளில் பொறுப்பற்ற தனத்துடன் பொலீசார் ஈடுபட்டதாகவே பலரும் பேசிக்கொண்டார்கள். இது அரசின் தவறான நடவடிக்கைகளேயாகும். ஏனென்றால் முழு மின்சார மீற்றர்களையும் மாற்றி சீரான மின்விநியோகத்தையும் ஏற்படுத்திவிட்டு பின்னர் இப்படியாக மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டித்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மீற்றர்களை மக்களே பழுதாக்கினார்கள் என்றெல்லாம் கூறி அவர்களை தண்டிக்க முயல்வது ஏற்கக் கூடிய காரணம் அல்ல. முப்பது ஆண்டுகளாக சட்டம் ஒழுங்குகள் இல்லாமல் இருந்த இடங்களிலே ஒருகால அவகாசத்தை கொடுத்துதான் எல்லா விடயங்களையும் செயற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து.
கேள்வி:முஸ்லீம் மக்கள் தமிழ்பேசும் மக்கள் தமிழ் பேசும் மக்களின் தமது பிரதேசங்களில் தமது அரசியல் உரிமைக்காக குரல் எழுப்புகிறார்களா? அல்லது அதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? ஈடுபடுகிறார்களா?
பதில்:அவர்கள் தரப்பில் முன்னெடுப்புக்கள் பெரிய அளவில் இல்லை குரல்கொடுப்புகளும் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட அந்த மக்கள் மத்தியில் ஆழமான அதிருப்தி வேரூன்றியிருக்கின்றது. சிங்கள பௌத்த பேரினவாதம் தம்மையும் விழுங்குகின்றது, அது தம்மையும் அச்சுறுத்துகின்றது என்ற உணர்வு மேலீடாகவே இருக்கிறார்கள். அவர்களும் அதை மறுதலிக்கவில்லை. வெளிப்படையாக அவர்களது செயற்பாட்டில் இல்லாவிட்டாலும் ஆழமாக அவர்கள் மனதில் பதிந்துள்ளது. அந்தளவிற்கு இலங்கை அரசின் நடவடிக்கைகள் நடைபெறுகின்றது. தமது நலன்கள் உரிமைகள் போன்ற விடயங்களில் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் பிரகாசமாகவே உள்ளன. பொது எதிரி என்று வெளிப்படையாக கூறாவிட்டாலும் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து தமிழ் மொழிக்குரிய அரசியல் அந்தஸ்த்துக்களை இருதரப்பினரும் சமமாக வாழக்கூடிய பொது இணைந்த ஆட்சி அதிகாரங்களையும் பெறும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளது. அதேநேரம் அந்த பிராந்தியங்களில் உள்ள சிங்கள மக்களையும் இணைந்த அதிகார பரவலாக்கங்களை பெற வேண்டும். இப்படியான ஒரு அரசியல் தீர்வுகளை அடையாளம் காண வேண்டும் அதற்காக முஸ்லீம்மக்களின் ஆதரவுகள் உள்ளது. பல்வேறு தரப்பினராக பிரிந்து நிற்கிற முஸ்லீம் தரப்பினரின் ஆதரவுகள் பெறக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. அத்துடன் தமிழர் தரப்பினர் இவர்களையும் இணைத்து இயங்கவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி: தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் பற்றிய பல தகவல்கள் திருப்திகரமாக இல்லை இன்னமும் பல பிரச்சினைகள் சிக்கல்கள் நிறைந்தவைகளாக உள்ளன என்றும் இவற்றின் காரணமாக பல தமிழர்கள் தமது பாரம்பரிய குடியிருப்புக்களுக்கு மீள குடியேற முடியவில்லை என்ற செய்திகள் வருகின்றன. இது இப்படி இருக்க வடக்கில் பாரம்பரியமாக குடியிருந்த முஸ்லீம்மக்களின் மீள் குடியேற்றங்கள் எந்த நிலையில் இருக்கிறது. இவர்களுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் வெளிவந்திருந்தனவே அவை என்ன? ஏன் அரசு உதவிகளை வழங்க மறுக்கிறது? வடக்கு முஸ்லீம்களின் தற்போதய நிலை என்ன?
பதில்: வடக்கிலிருந்து 1990ம்ஆண்டு துரத்தப்பட்ட அந்த முஸ்லீம் மக்களுக்கான உதவிகள் சரியான உறுதியான நிலைப்பாட்டை முஸ்லீம் தலைவர்களோ அரசோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை, இப்போது தான் அண்மையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீடுகளில் ஆயிரம் வீடுகள் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்பட்டன, முஸ்லீம்நாடுகளின் உதவிகளை பெற்றாவது அவர்களை புத்தளம் போன்ற பகுதிகளுக்கு போனவர்கள் யாழ்ப்பாணத்தை விட வசதியான வாழ்வை ஏற்படுத்திக் கொண்டார்கள், கொள்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் மீள வரவிரும்பவில்லை ஆனால் வந்தவர்களுக்கு கூட அரசினால் முறையாக வாழ்வு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதுபற்றி யாழ்வந்த முஸ்லீம் மக்கள் அதிருப்தி அடைந்தவர்களாகவே உள்ளனர்
தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் போன்று முற்றுப்பெறாத நடவடிகைகளும், நடுத்தெருவில் விட்ட கதைபோன்று வடக்கு முஸ்லீம்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளும் உள்ளன. இது யாழ்ப்பாணம் மன்னார் போன்ற இடங்களில் இன்றும் உள்ள பிரச்சினைகளாகவே உள்ளன. ஆனால் இரு பகுதியினருக்கும் முல்லைத்தீவில் உள்ள பிரச்சினைகள் சமமானது இருதரப்பினரும் குடியேற பல இடங்களில் அனுமதிக்கவில்லை. சாதாரண தமிழ் மக்கள் தரப்பிலிருந்து எந்தவித இடைஞ்சல்களோ தொந்தரவுகளோ முஸ்லீம்களுக்கு இல்லை அரசுதான் இழுபறி நிலைமைகளை தோற்றுவித்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
கேள்வி: மன்னாரில் ரிச்சாட் பதியுதீன் நடவடிக்கைகள் பற்றியும் அங்கு நடைபெற்ற தமிழர் விரோத நடவடிக்கைகள் பற்றியும் ரெலோ செல்வம் அடைக்கலநாதன் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார் ரிஎன்ஏ அந்த நிலைமைகள் பற்றி என்ன நடவடிக்கை எடுத்திருந்தது? அங்கிருந்த நிலைமைகள் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
பதில்: மன்னார் மாவட்டம் முஸ்லீம்கள் கணிசமான அளவு வாழும் பிரதேசம். அங்கே உள்ள அரச நிர்வாகங்களில் உத்தியோகங்களில் அவர்களின் பிரதிநிதித்துவத்துக்கும் அவர்கள் இருப்பதை விட அதிகமான பங்கை, அதிகமான அளவில் நிர்வாகங்களில் உத்தியோகங்கள் எடுத்துக் கொடுக்கப்படுவதையிட்டு குறிப்பாக இதர கத்தோலிக்க சமூகம் அதிருப்தியடைந்த நிலையுள்ளது. அவைபற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேசியுள்ளார்கள். அங்கு முஸ்லீம்களுக்கு மட்டும் வேலைவாய்ப்புக்கள் என நிர்வாக கல்வியில் பகுதியில் பல விடயங்கள் ஒப்பேற்றப்பட்டுள்ளன. இவைபற்றி கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த விடயங்களில் திரு ரிச்சாட் பதியுதீன் அமைச்சர் என்ற காரணைத்தால் அவற்றை நிலைநாட்டி செல்லும் காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. மோதல் போக்காக இந்த விடயத்தை அனுகாமல் பேச்சுக்களினால் சுமுகமாக தீர்க்கப்படல் வேண்டும் என பலராலும் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. அந்த பிரதேசத்தில் தனது அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரு இனங்களிடையேயான ஒரு அழுத்தமான நிலையை திரு ரிச்சாட் பதியுதீன் உருவாக்குகிறார் என்றே நாம் கருதுகின்றோம்.
கேள்வி: கிழக்கில் தமிழர்கள் முஸ்லீம்கள் இணைந்து வாழும் பகுதிகளில் முஸ்லீம்களால் தமிழர்கள் மீது இன வேறுபாடுகள் கொண்ட நிகழ்வுகள் நடைபெறுவதாக அறிகிறோம். அதில் முக்கியமாக மருத்துவமனைகளில் தமிழர்களுக்கு மருந்து கொடுப்பதில் பல தொல்லைகள் மருத்துவமனையில் வேலைசெய்யும் டாக்டர்கள், ஊழியர்களால் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிகிறோம். இது பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
பதில்: முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தாம் புறக்கணிக்கப்படுவதாக தமிழர்கள் தொடர்ந்து புகார்கள் எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இது அதிகம். வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு காலாண்டுக்குமாக வழங்கப்படும் மருந்துகள் மிகவும் தாமதமாகவே வருவது வழமையானது. அதாவது வருடத்தின் முதல் 3 மாத காலப்பகுதிக்கான மருந்துகள் வருடத்தின் இறுதிக் காலப்பகுதியிலேயே வந்து சேரும். இடையில் இரண்டு காலாண்டுக்கான மருந்துகள் வராது போய்விடும். அடுத்தவருடம் புதிய காலாண்டுக்கான மருந்துகளே வரத்தொடங்கும். இப்படியாக மருந்துகளுக்காக தட்டுப்பாடு அதிகமாக இலங்கையில் உள்ளது. வடக்கு கிழக்கில் சுகாதாரத் திணைக்களம் ஒருபாராமுகமாக உள்ள நிலைமையும் இதன் காரணமாக மக்களிடையே குழப்பம், அரசின் உதவிகள் அற்ற நிலையுமே காணப்படுகின்றது. அண்மையில் 60 வயதுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டார்கள். இதற்காக வடபகுதி ஆளுனர் ஜனாதிபதி அமைச்சர் பசில் இராஜபக்ச இன்னும் சுகாதார அமைச்சு போன்றவர்களையெல்லாம் சந்தித்து இதற்காக பல போராட்டங்கள் செய்தே ஒரு வருடம் சேவை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
எமது பிரதேசங்களில் படித்து வெளிவரும் புதிய வைத்தியர்கள் எமது வடக்கு கிழக்கு பகுதிகளில் வேலை செய்யாமல் தெற்கு நோக்கி ஓடிச்செல்வதனாலே எமக்கு வைத்தியர்கள் பற்றாக்குறை எற்படுகின்றது. ஒரு வைத்தியசாலைக்கு மூன்று வைத்தியர்கள் இருக்கும் நிலைமைபோய் ஒரு வைத்தியர் மூன்று வைத்தியசாலைகளை கவனிக்கும் நிலைமை தோன்றி மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளார்கள். அண்மையில் ஒட்டிசுட்டான் வைத்திய நிலையம் மூடப்பட்டு இருந்தது. அங்கே உள்ளவர்கள் குழந்தைகளுடன் மருத்துவம் பார்க்க போவது என்றால் 25 கிமீ தூரம் உள்ள முல்லைத்தீவு மருத்துவமனைக்கு போவது என்பது வன்னி நிலப்பரப்பில் ஒரு சுலபமான வேலையல்ல என குறிப்பிட்டிருந்தேன். இப்படியாக வடக்கு கிழக்கில் சுகாதாரம் கல்வி நிலையங்களுக்கு பல நெருக்கடிகள் வளர்ந்துகொண்டே செல்கிறது என்பது உண்மையான விடயம்.
முஸ்லீம்கள் பெரும்பான்மையான இடங்களில் உள்ள தமிழர்களுக்கு கசப்புணர்வுகள் நீடித்துக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக கல்முனையில் அஸ்ரப் ஆதார வைத்தியசாலை இருக்கிறது. இதேபோல கல்முனையில் தெற்கு ஆதார வைத்தியசாலை தமிழர்கள் உள்ள இடத்திலும் ஒன்று உள்ளது. இந்த தெற்கு வைத்தியசாலைக்குள் ஒரு இஸ்லாமிய வழிபாட்டு தலம் ஒன்று கட்டப்படுகின்றது (இது ஒரு சிறிய அறை) ஆனால் அஸ்ரப் ஆதார வைத்திய சாலைக்குள் ஒரு கிறீஸ்தவ வழிபாட்டு அறையை அமைக்க விடுவார்களா என்றால் இல்லை. இப்படியான மதவெறி இனவாதம் யார் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அங்கு நிலைநாட்டப்படுகின்றது. இதை அரசாங்கமும் அனுமதிக்கின்றது என்பது உண்மை. இப்படியாகவே இனங்களுக்கடையிலான முறுகல்கள் தோற்றம் பெறுகின்றது.
கேள்வி: வடக்கில் வசந்தம் போய் இப்போ வடக்கில் சூறாவளி வீசுகின்றது என்று செல்வம் அடைக்கலநாதன் பேசியுள்ளார் இதன் உள்ளார்த்தம் என்ன?
பதில்: வடக்கில் வசந்தம் என்பது வடக்கின் அபிவிருத்திகள், நிலவள அபிவிருத்திகள், தொழில்துறை அபிவிருத்திகள், தெருக்கள், கட்டிடங்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு வடக்கின் வசந்தம் என்று கூறினாலும் கூட வடக்கில் சாதாரண நிலைமைகளில் முன்னேற்றமில்லை. மக்கள் மத்தியில் வெறுப்பும் வெறுமையும் காணப்படுகின்றது. அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழவில்லை, போராட்ட வாழ்வே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் சமூக சீரழிவுகள், சமுதாயப் பிரச்சினைகளையும் முன்வைத்தே செல்வம் இப்படியான கருத்தை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். அரசு வடக்கு கிழக்கில் வெறுமனே தெருக்களையும் பாதைகளையும் போடுவதனால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என்று சொல்ல முடியாது. சமூக பொருளாதார கட்டமைப்புக்களிலும் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும் என்பது உணர்த்தப்பட வேண்டிய விடயம். இவைகளை மனதில் கொண்டே அடைக்கலநாதன் வடக்கில் சூறாவளி என்ற வார்த்தைப் பிரயோகத்தை பாவித்துள்ளார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
கேள்வி:இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 170 மில்லியன்கள் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு அறிவித்துள்ளது. இதன்படி வடக்கு கிழக்கு அபிவிருத்தியடைந்து மக்களின் வாழ்வு முன்னேற்றகரமாக உள்ளதா?
பதில்: இப்போது வடக்கு கிழக்கில் சில அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தாலும் பாரிய அளவில் வீதி அபிவிருத்திகள் சீனாவின் உதவியுடன், ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் வாழ்வாதார பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பது முக்கியம். வெறுமனே வீதி அபிவிருத்தி மக்களுக்கு போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.
தெற்கு வளர்கிறது வடக்கு கிழக்கு தேய்கிறது என்ற நிலைமை உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அரசு கைவிட்டுவிட்டது. அரசசார்பற்ற நிறுவனங்களை அங்கே இயங்க மறுப்பது, ஜநா அமைப்பிற்கான சரியான அனுமதியை வழங்காதது போன்ற விடயங்கள் மக்களை பட்டினி போடவும் மக்களை துன்புறுத்தவதுமே நடைபெறுகின்றது. வெறுமனே அபிவிருத்தி என்று கூச்சல் போடுவதில் அர்த்தமில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும்
கேள்வி: அச்சுவேலியில் இந்திய முதலீடுகள் பற்றியும் அதன் ஆரம்ப வேலைகளும் என்ன நிலைமையில் உள்ளன?
பதில்: அச்சுவேலியில் போருக்கு முன்பதான காலங்களில் இருந்த கைத்தொழில் பேட்டையை மீள ஆரம்பிப்பதற்கான இந்திய உதவித்திட்டம் இதன்படி ஆரம்ப வேலைகளுக்காக சில பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த பேட்டை ஆரம்பிக்கப்பட்டால் சில ஆயிரம் பேர்கள் தொழிலாளர்கள் நன்மையடைவார்கள் வேலைவாய்ப்புக்கள் அதிகமாக வாய்ப்புண்டு. இதன் அடுத்தபடியான இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் பரம்பலும் மேலும் சிறு நூறு வேலைவாய்ப்புக்களையாவது மேலும் உருவாக்கும். இப்படியான வாழ்வாதாரத் திட்டங்களையே உருவாக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள் இப்படியான சில திட்டங்களையாவது புலம்பெயர் மக்களும் வடக்கு கிழக்கில் ஆரம்பித்து மக்களுக்கு உதவ வேண்டும் என்பது எமது விருப்பமாகும்.
கேள்வி:வடக்கில் கடற்தொழிலாளர்கள் பிரச்சினைகள் என்ன நிலையில் உள்ளது இன்றும் இந்திய மீனவர்களின் தலையீடுகள் உள்ளதா?
பதில்: இந்திய மீனவர்களின் தலையீடு இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. இலங்கை அரசு இந்தியர்களும் தமிழர்களும் அடிபட்டுக்கொண்டே இருக்கட்டும் என்ற நிலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதை விட இங்கே அரசியல் தலையீடுகள் காரணமாக ஈபிடிபியினர் பல இடங்களில் முறைகேடாக நடந்து கொள்கிறார்கள். இன்று வல்வெட்டித்துறையில் இழுவைப்படகுகளை வலைகளை வெட்டி நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள். இதில் பொலீசாரும் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் இழுவைப்படகில் தொழில்கள் செய்து கொண்டிருக்கும்போது வடமராட்சியில் வல்வெட்டித்துறையில் தடைசெய்யப்படுவதாக அறிவிக்கிறார்கள். தென் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் தடைசெய்வது என்றால் முழு இலங்கையிலும் தடைசெய்யப்படல் வேண்டும். ஒரு இடத்தில் மட்டும் தடைசெய்வது போன்ற பல நடவடிக்கைகளினால் கடற்தொழிலாளர்கள் அரசினால் மாறி மாறிவரும் நடவடிக்கைகள் காரணமாக பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முல்லைதீவு பகுதியில் ஏன் யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலே சிங்கள மீனவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. அவர்கள் அங்கு சிலிண்டர் முறைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்கள் கடற்கரையோரங்களில் அவர்கள் வாடிகளை அமைத்து கடல் அட்டை சங்கு போன்றவற்றை பிடிக்கிறார்கள். இது பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் உள்ள ஆழியவளை செம்பியன் பற்று தாழையடி போன்ற பிரதேசங்களில் மாவை சேனாதிராசா அவர்களை அழைத்து சென்று காட்டியிருந்தேன். அது ஒரு சிங்கள குடியேற்றமாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது. அவர்கள் அங்கு வைத்தே காஸ் சிலிண்டர்களை நிரப்புகிறார்கள் அந்த பிரதேசங்களில் எமது மீனவர்கள் எந்த விதமான தொழிலையும் செய்ய அனுமதிப்பதில்லை சிலவேளை மட்டுப்படுத்தப்பட்ட தொழிலை செய்ய அனுமதிப்பார்கள். இவர்களில் பலரின் படகுகள் பறிக்கப்பட்டு இராணுவ முகாம்களில் கடற்படை முகாம்களில் குவிக்கப்பட்டுள்ளது. அவை மீள கொடுக்கப்படவில்லை அவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.
இதேபோன்று முல்லைதீவில் முகத்துவாரப்பகுதியில் 340 குடும்பங்கள் அத்துமீறி குடியேறியுள்ளார்கள். இவர்கள் நீர்கொழும்பு பகுதியிலிருந்து வந்து குடியேறியுள்ளார்கள். தமிழ் மீனவர்களை துரத்திவிட்டு அவர்கள் அங்கே குடியேறியிருக்கிறார்கள். அதேபோல கொக்கிளாய், நாயாறு பகுதிகளிலும் குடியேற்றம் தீவிரப்படுத்தப்படுகின்றது. வெலிஓயாவை மையப்படுத்தி புதிய பிரதேசபை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இது போன்று கிழக்கில் மன்னாரில் பல இடங்களில் எமது மீனவர்கள் துன்பப்படுகிறார்கள். மக்கள் போரின்போதும் துன்பப்பட்டார்கள் போரின்பின்பும் துன்பப்படுகிறார்கள். அவர்களில் பலரின் வாழ்வில் தொடர்ந்தும் துன்பமே வழிகிறது.
கேள்வி:தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வின் அரசியல் தலைவராக இருக்கும் நீங்கள் ரெலோவின் தற்போதய நிலை பற்றி தெரியப்படுத்துங்கள்?
பதில்: ரெலொவின் தேசிய மாநாடு நடைபெற்றபோது நானும் திரு சிறிகாந்தாவும் மீண்டும் இணைந்து கொண்டோம். அந்த மாநாட்டிலிருந்த நான் ரெலொவின் அரசியல் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். திரு சிறிகாந்தா அவர்கள் 11 பேர் கொண்ட தலைமைக் குழுவில் ஒருவராக உள்ளார். அதைவிட 21 பேர் கொண்ட மத்திய குழுவும் 41 பேர் கொண்ட பொதுக்குழுவுடனும் இயங்குகின்றது. எப்போதும்போல் நாம் எல்லா அமைப்புகளிடையே பொதுவான இணக்கப்பாட்டை உருவாக்க, ஒற்றுமையை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம். அது எமது போராட்ட இலட்சியங்களில் ஒன்று. இதன்படி ரிஎன்ஏ யினுள் இப்போது மூன்று கட்சிகள் கொண்ட ரிஎன்ஏ போன்ற ஒரு தோற்றத்தையே காட்டுகின்றது. இது மாற்றம் பெறப்படல் வேண்டும். மேலும் ஒற்றுமையை வளர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதேபோல சிறீ ரெலொவுடன் மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. அவர்களையும் உள்வாங்கி இணைந்து இயங்குவதற்காக முயற்சிக்கிறோம்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் அரசியல் கட்சிகளுடன் இணைந்து இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுக்க வேண்டும். கடந்தகால சகோதர முரண்பாடுகளையும் குரோத வேறுபாடுகளையும் மறந்து இலங்கையில் மக்களின் வாழ்வுக்காக தம்மால் இயன்ற உதவிகளையும் ஒத்தாசைகளையும் கொடுக்க வேண்டும். முன்னாள் ரெலோ போராளிகளும் ரெலோவுடன் இணைந்து தம்மால் ஆன உதவிகளை செய்ய முன்வர வேண்டும். எமது அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து தவறுகளை திருத்தி மேலும் மக்களின் நலத்துக்காக அனைத்து கட்சிகளுடனும் இணைந்து நின்று செயற்படும் உறுதுணையை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சர்வதேச அழுத்தங்கள் ஏற்படாமல் எந்த மாற்றங்களும் வராது!- ரெலோ சிவாஜிலிங்கத்துடன் பேட்டி. பகுதி 2 : த சோதிலிங்கம்.

No comments:

Post a Comment