மௌனம் கலைத்த சிறீதரன் – தொடர்ந்தும் பயணிக்க வேண்டும் – சரிதம் ஆசிரியர் பீடம்!(காணொளி)
April 1st, 2012 அன்று வெளியிடப்பட்டது

சரிதம் இணையத்தளம் தொடங்கப்பட்டது முதல் இற்றைவரையில் தேசியத்திற்கான
பயணத்தில் பயணிக்கும் தலைவர்களின் பாதைகள் தொடர்பில் விமர்சனங்களை
முன்வைத்தே வந்திருக்கின்றது. இதனால் ஆசியர் பிடத்திற்கு நெருக்கடிகளும்
ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆசியர் பீடத்தினர் துரோகிகள் என்றும் சில
கட்சிகளின் எடுபிடிகள் என்றும் கூட விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனாலும் கூட பொது நோக்கம் அறுவடை என்பதால் தனிப்பட்ட விமர்சனங்களைப்
பெரிதாக தலைகளில் தூக்கிக் கொண்டு சரியானதைப் பிழை என்றோ, பிழையானதை சரி
என்றோ தடம் மாறுவதற்கு சரிதம் ஆசியர் பீடம் தயார் நிலையில் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் சரிதம் இணையத்த தளத்தினால்
முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை
ஒரு கட்சியாக வரித்துக் கொள்ளுதல், தனியான ஒரு கட்சியாக மக்கள் மத்தியில்
பணி செய்தல் போன்ற விடயங்களையே நாங்கள் இதுகால வரையில் மீண்டும் மீண்டும்
வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இச் செயற்பாட்டில் இருந்து விலகிச்
செல்வபவர்களை விமர்சிக்கவும் தவறவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற அனைத்துக் கட்சிகளையும்
கலைத்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கட்சிகளின் கூட்டமைப்பு அல்ல)
என்ற பெயரில் கட்சியினைப் பதிவு செய்யவேண்டும் என்பதே எமது வலியுறுத்தலின்
பிரதான விடயமாக விளங்கியது. இந்த விடயங்களின் சாராம்சத்தினை
வெளிப்படுத்தும் வகையில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை
கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருக்கின்றார் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். சிவஞானம் சிறீதரன் வெளியிட்டிருக்கின்ற
கருத்துகள் அனைத்திற்கும் சரிதம் ஆசியர் பீடம் மனம் திறந்த வரவேற்பினைத்
தெரிவித்துக் கொள்கிறது.
சிறீதரன் வெளியிட்ட கருத்துக்களும், அவற்றின் முக்கியத்துவங்களும்!
சுமந்திரனின் கருத்துக்களுக்கு கண்டனம்!
தமிழீழ விடுதலைப்புலிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் தமது ஏக
பிரதிநிதிளாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்
வேலையற்றிருந்த இளைஞர்கள் போன்ற கருத்துக்களை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினர் சுமந்திரன் வெளிப்படுத்தியிருந்தமையை கடுமையாகவும் நேரடியாகவும்
சாடியிருக்கின்ற சிறீதரன் அவற்றினை நியாயப்படுத்த முடியாது என்றும்
தெரிவித்திருக்கின்றார்.
உயிர் கொடுக்க மட்டும் இளைஞர்கள்! அரசியலுக்கு ஏன் முதியவர்கள்?!
ஒவ்வொரு கட்சியினரும் தமது கட்சிகளைப் பலப்படுத்துவதில் குறியாக
இருப்பதாகவும், தமது கட்சிகளுக்கு பாரம்பரியங்கள் உண்டு எனத் தெரிவித்துக்
கொண்டு தமது கட்சி சார்ந்தோரின் நினைவு நிகழ்வுகளைக் கடைப்பிடிக்கவே
முற்படுகின்றனர் ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உயிர்களைத்
தியாகம் செய்தவர்களை நினைத்துப் பார்க்கவோ அவர்களுக்கு நினைவு நிகழ்வுகளை
நடத்தவோ யாரும் தயார் நிலையில் இல்லை. இரத்தம் சிந்தவும், உயிர்களைக்
கொடுக்கவும் மட்டும் தான் இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். அரசியல் என்று
வரும் போது ஏன் முதியவர்கள் இளைஞர்களுக்கு வழிவிடுகிறார்கள் இல்லை என்றும்
சிறீதரன் கேள்வி எழுப்பியிருக்கின்ற விடயங்கள் உண்மையின்
பிரதிபலிப்புக்கள்.
ஜெனீவாத் தீர்மானத்திற்கு புலம்பெயர் மக்களின் பங்களிப்பும் முக்கியமானது!
ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு உரிமை கோரமுடியாது என்பதையும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு புலம்பெயர் அமைப்புக்களும், புலம்பெயர்
மக்களும் ஆற்றிய பங்களிப்புக்களையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
கூட்டமைப்பில் தலைமைத்துவத்தில் இருக்கின்ற ஒருசிலர் தீண்டத்தகாத
பொருட்களாக புலம்பெயர் மக்களைப் பார்ப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்ற
நிலையில் சிறீதரன் தனது உரையில் புலத்தில் உள்ளவர்களைப் பற்றி புகழ்ந்து
தள்ளியிருக்கின்றார்.
கூட்டமைப்பு எதனையும் செய்யவில்லை!
கட்சிகளைக் கலைத்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பாதையில்
பயணிக்க அனைவரும் முன்வரவேண்டும். அதற்கு எவரும் தயார் நிலையில் இல்லை.
கடந்த ஆண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்வதற்காக தேர்தல்கள்
திணைக்களத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு அது
நிராகரிக்கப்பட்டதாகவும் ஒவ்வொரு தொகுதிகளுக்கும், பிரதேச சபைகளுக்கும்
குழுக்களை அமைக்கவேண்டும். அவற்றின் ஊடாகப் பணிகளைச் செய்யவேண்டும்.
இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வேலைத்திட்டம் எதுவும்
முன்னெடுக்கப்படவில்லை என்பதை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.
சிறீதரன் ஏன் விமர்சிக்கப்பட்டார்?
ஆக, சிறீதரன் எடுத்திருக்கின்ற அதிரடி முடிவுகளும் அதற்கு முன்னர் அவர்
விமர்சிக்கப்பட்டமைக்கான காரணங்களையும் திரும்பிப்பார்க்க சரிதம் இணையம்
முற்படுகின்றது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன் அரசியலுக்குள்
பிரவேசிக்கும் போது வன்னியின் குரலாக போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட
மக்களுக்குள் இருந்து செயற்படுகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வன்னி மக்களின் பிரதிநிதியாகவே அவர் செயற்படுவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது.
அதனைவிடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சிகளின் கூட்டணிக்குள்
அரசியல் கட்சிகளின் சாயம் இன்றி தெரிவு செய்யப்பட்ட ஒருவராக அவர்
இருந்தமையால் அவர் கூட்டமைப்பு என்ற அடையாளத்தினை மட்டும் கொண்டவராகவே
பார்க்கப்பட்டார் அவ்வாறே செயற்படுவார் என்றும் நம்பப்பட்டிருந்தது.
ஆனாலும் கூட அவரது அடையாளப்படுத்தல் தமிழரசுக்கட்சி என்பதாகவே இருந்தது.
ஜனநாயகப் பாதையில் பயணிப்பதாகத் தெரிவித்து தமிழரசுக்கட்சிக்கு
முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்று பார்த்தாலும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புக்குள் இருக்கின்ற ஏனைய கட்சிகள் கடந்தகாலங்களில் தமிழீழ
விடுதலைப்புலிகளோடு எதிர் நின்று போராடிய இயங்களைச் சேர்ந்தவை, அவை தேசிய
விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவையாகக் கொண்டால் அதற்கு
தமிழரசுக்கட்சியும் விதிவிலக்கல்ல. ஈபிஆர்எல்எப்பினால் தியாகிகள் தினம்
கொண்டாடப்படுவது போன்று தமிழரசுக்கட்சினால் தமிழரசுக்கட்சியின் தளபதி(!)
அமிர்தலிங்கத்திற்கும் நினைவு நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது
வெளிப்படையான விடயம்.
இவ்வாறு கட்சிகள் ஒவ்வொருவரும் தமது கட்சிகளில் அல்லது இயக்கங்களில்
இருந்து மறைந்தவர்கள் நினைவாக நிகழ்வு நிகழ்வுகளைக் கொண்டாட, வன்னியில்
இருந்து வந்த சிவஞானம் சிறீதரன் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீழ்ந்த
முத்துக்களுக்கான குரலாக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் அவர் தமிழரசுக்கட்சியாகவே தன்னை அடையாளப்படுத்த முற்பட்டார். அதுவும்
அவர் விமர்சனங்களை எதிர்கொள்ள ஒரு காரணமாக அமைந்தது. இதனைவிடவும்,
தமிழரசுக்கட்சியும் அவருக்கு முழுமையான விசுவாசத்தினை காட்டவில்லை. அவரை
தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவராக அறிவித்த தமிழரசுக்கட்சியின்
பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா ஒரு கட்டத்தில் தானே தமிழரசுக்கட்சியின்
இளைஞர் அணித் தலைவர் என்று சொல்லிக்கொண்டார். அதேவேளை மன்னாரைச் சேர்ந்த
வி.ரி.சிவகரன் என்பவர், தான் தான் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின்
தலைவர் என்று சொல்லிக் கொள்கிறார். எனவே இந்த இடத்தில் ஒரு சரியான முடிவினை
எடுத்து தமிழரசுக்கட்சி செயற்படவில்லை.
சிவஞானம் சிறீதரனை தமக்குள் அழைத்துக்கொள்வதன் மூலம் தமிழ்த்
தேசியக்கூட்டமைப்பு என்கின்ற தீவிர சிந்தனை உடையவர்களாக உருவாகுவோரின்
எண்ணிக்கையினைக் குறைப்பதற்கு தமிழரசுக்கட்சித் தீவிர செயற்பாட்டாளர்கள்
முற்பட்டனரோ அல்லது சிறீதரன் ஜனநாயகப்பாதை என்பதை அடையாளப்படுத்துவதற்கு
தமிழரசுக்கட்சியின் ஊடாக தன்னை நிலைநிறுத்த முற்பட்டாரோ? என்பதற்கான
பதிலினை அவரே வெளிப்படுத்த வேண்டும்.
கிளிநொச்சியிலும் சிவஞானம் சிறீதரனின் ஒழுங்குபடுத்தலில் தமிழரசுக்கட்சிக்
கிளை, தமிழரசுக்கட்சி இளைஞர் அணிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மட்டக்களப்பு, அம்பாறை ஈறாக தமிழரசுக்கட்சிக் கிளைகள் அமைப்பது தொடர்பில்
சிறீதரன் உரையாற்றியிருந்தார்.
இவற்றினைவிடவும் கிளிநொச்சியில் அவரது அன்பக அலுவலத்தில் தமிழரசுக்கட்சி
என்ற பெயர்பலகையும் வைக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சியில் நடைபெறுகின்ற
நிகழ்ச்சிகளில் குறிப்பாக அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கிலும்
தமிழரசுக்கட்சி என்ற பெயர் மிகப் பெரிதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
சிறிய அளவிலும் எழுதப்பட்ட பதாதையே கட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான சம்பவங்களுடன் அண்மைய தகவலின் படி மட்டக்களப்பில்
தமிழரசுக்கட்சியின் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அதன் போது சில
தீர்மானங்களை நிறைவேற்ற தமிழரசுக்கட்சி முற்படுவதாகவும் தகவல் ஒன்று
வெளியாகியிருக்கின்றது. அதன் சாராம்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
முடிவுகளில் 75 வீதமான அதிகாரம் தமிழரசுக்கட்சிக்கு வழங்கப்படவேண்டும்.
ஏனைய 25 வீதமான அதிகாரம் என்பது ஏனைகட்சிகளுக்கும் வெளியில்
உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் என்பதாகும். இந்த விடயம் நிறைவேற்றப்பட்டால்
கட்சிகள் சாராது கூட்டமைப்பினை நேசிக்கின்ற அல்லது ஆதரிக்கின்ற ஒரு நபர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை நினைத்துப் பார்க்க முடியுமா?
கடந்த ஆண்டு தேர்தல்கள் திணைக்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை
பதிவு செய்வதற்கான முன்மொழிவு கொடுக்கப்பட்டு அது இன்றுவரை தடைப்பட்டு
இருப்பதற்கான காரணம் தமிழரசுக்கட்சி ஒப்புதல் கடிதம் குடுக்கவில்லை என்பதை
இந்த இடத்தில் மீளவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே, இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழரசுக்கட்சி செயற்படுகின்றபோது சிவஞானம்
சிறீதரன் தமிழரசுக்கட்சிக்கு முண்டுகொடுப்பது அல்லது அவர்களைச் சார்ந்து
நிற்பது என்பது பொதுக் கொள்கைஉடைய, எந்தக் கட்சியையும் சாராது தனியே
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற எண்ணப்பாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு
தமிழின உணர்வாளர்களையும் தூரவைப்பதாகவே அமைந்துவிடும்.
சிறீதரனிடம் பகிரங்க வேண்டுகோள்!
ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் நிலைப்பாட்டில்
மட்டும் மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. சிவஞானம் சிறீதரனின் அரசியல்
போக்கிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது என்றே எண்ணத்
தோன்றுகின்றது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றபோது
சிவஞானம் சிறீதரன் இருந்தது போன்றதான நிலைப்பாட்டினை மீண்டும் அவர்
எடுத்திருக்கின்றார் என்றே சரிதம் ஆசியர் பீடம் பார்க்கின்றது.
ஆனாலும் கிளிநொச்சியில் இருந்து நாடாளுமன்றம் சென்ற சிறீதரன் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் அடையாளமாகவே தொடர்ந்தும் இருக்கவேண்டுமே தவிர
தமிழரசுக்கட்சியாக அல்ல என்பதை அவர் செயற்படுத்திக் காட்ட வேண்டும்.
மேநாள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியாக மக்கள் மத்தியில்
நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று தெரிவித்த அவர் கிளிநொச்சியில் தனியான
நிகழ்ச்சியினை நடத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தார். அந்த விடயத்தினை
நாங்களும் வரவேற்று நிற்கின்றோம். அந்த நிகழ்விலும், யாழ்ப்பாணம்
மட்டக்களப்பு உட்பட்ட இடங்களில் நடைபெறவுள்ள கருத்தரங்குகளிலும்
தமிழரசுக்கட்சி என்ற பெயரினைத் தவிர்த்து, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்ற
பெயரை மட்டும் பயன்படுத்தி நடைபெறும் நிகழ்வுகளை தமிழ்த்தேசியக் கட்சியின்
நிகழ்வுகளாகவே வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழரசுக்கட்சி என்ற விடயத்தினை தேர்தல்கள் அண்மிக்கும் போது மக்களுக்கு
நினைவுறுத்துவதற்காவே பயன்படுத்தலாம். காரணம் சின்னத்தினை மக்கள் நினைவில்
வைத்திருக்க வேண்டும் என்பதற்காக. தமிழரசுக்கட்சி என்பது எப்போதோ
கைவிடப்பட்டு தமிழர் விடுதலைக்கூட்டணி தோற்றம் பெற்றது. அதன் பின்னர்
மற்றொரு வளர்ச்சிப்படியாகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவெடுத்தது. எனவே
மீண்டும் தமிழரசுக்கட்சியை நோக்கிப் போவது எந்தவகையில் ஏற்புடையது.
சிவஞானம் சிறீதரன் எடுத்த முடிவினை நாங்கள் வரவேற்கிறோம். தமிழீழ
விடுதலைப்புலிகளின் எச்சமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகிறது.
அதனையும் அழிந்து போக அனுமதிக்க முடியாது என்று அவர் ஆக்ரோசமாகத்
தெரிவித்திருப்பது ஆறுதல் தருகிறது.
ஆனாலும் அவரது முடிவுதொடர்பில் தமிழரசுக்கட்சி இரு வேறு முனைப்புக்களை
மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். முதலாவது பணிந்துபோவது போலக்
காட்டிக்கொண்டு சிறீதரனை மீண்டும் தமது வலைக்குள் இழுத்துக் கொள்வது.
இரண்டாவது மிரட்டுதல் மூலம் சாதித்தல், மிரட்டுதல் என்கிற போது தேர்தல்
வரும் போது வேட்பாளராக நியமிக்கமாட்டோம் எனத் தெரிவிப்பது. இந்த இரண்டு
விடயங்களில் ஏதாவது ஒன்றின் மூலமாக சிறீதரன் அணுகப்படலாம் என்றே
எண்ணமுடிகிறது. இருப்பினும் சிறீதரன் அவற்றினை எவ்வாறு எதிர்கொள்ளப்
போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
தமிழீழத் தேசியக் கொடி விவகாரத்தினையும் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்,
குறித்த விடயத்தினையும் சரிதம் ஆசிரியர் பீடமே செய்திவாயிலாக
வெளிப்படுத்தியிருந்தது. அந்தத் தகவலையும் எமக்குத் தந்தவர்கள்
தமிழரசுக்கட்சி சார்ந்தவர்கள் தான் என்பதையும் பகிரங்கப்படுத்த
விரும்புகிறோம்.
அரியநேத்திரன், யோகேஸ்வரன், சரவணபவன் ஆகியோருக்கு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய உங்களுக்கு,
சிவஞானம் சிறீதரன் எடுத்த முடிவு தொடர்பிலும் அவரது பகிரங்கமான கருத்துப்
பரிமாற்றல் மூலமும் தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அந்தச்
செய்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற கட்சிசாராத
உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பு உண்டு என்பது.
ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சியில் இரா.சம்பந்தன்,
மாவை.சேனாதிசாரா, செல்வராசா அவர்களுடன் சுமந்திரனை இணைத்துக் கொண்டாலும்
நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஈபிஆல்எல்எப்,
ரெலோ ஆகிய கட்சிகளில் இவ்விரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே இருக்கின்றனர்.
அப்பாத்துரை விநாயகமூர்த்தியினை தமிழரசுக்கட்சியாக அடையாளப்படுத்துவற்கு
அவர்கள் முற்படவில்லை. எனவே பெரும்பான்மை என்று பார்க்கின்ற போது
தமிழரசுக்கட்சிக்கு நிகராக கட்சிகள் சாராது போட்டியிட்டு வெற்றி பெற்ற
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அமைந்திருக்கின்றது.
இவர்கள் நால்வரும் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சரியான பாதைக்கு
கொண்டுவர முற்படுவதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்வதற்கு
முன் நின்று உழைத்திருக்க வேண்டும். இவர்கள் யாருக்கும் பின்னால் செல்ல
வேண்டும் என்று நினைக்காமல் மற்றையவர்கள் எமக்குப் பின்னால் வரவேண்டும்
என்று எண்ணிச் செயற்பட்டிருக்கவேண்டும். இனியும் செயற்படலாம். பதவிகளைத்
தூக்கி எறியத் தயார் என்று மீளவும் மீளவும் சிறீதரன் வலியுறுத்தித்
தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் எதற்காகவும் பணிந்துபோகவேண்டிய தேவை
இல்லை என்பதை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். இதனையே மற்றைய மூன்று
நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமக்கான நிலைப்பாடாக வைத்திருப்பார்கள் என்று
எண்ணமுடிகிறது.
கடந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுவதற்காக
தேர்தல்கள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட போது கட்சி சாராத நாடாளுமன்ற
உறுப்பினர்கள் உறுப்புரிமையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதை
சம்பந்தப்பட்டவர்கள் மனதில் கொண்டு இனிவரும் நாட்களில் முன்னெடுக்கும்
பதிவு நடவடிக்கைக்கு கட்சிகள் சாராதவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து
பொதுநோக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சரிதம் ஆசியர் பீடம் வேண்டி
நிற்கின்றது.
சரியான பாதைகளை நோக்கி பயணிப்பவர்கள் தவறான பாதையில் சென்றாலும் மீண்டும்
சரியான பாதையை அடைந்தால் இலக்கு என்பது தாமதித்தாலும் வந்தேசேரும்.