Tuesday, 4 September 2012
மன்னாரில் முஸ்லிம் மீள்குடியேற்ற கிராம தீ வைப்புச் சம்பவத்திற்கு செல்வம் எம்.பி கண்டனம்
மன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி மரைக்காயர் தீவுப் பகுதியில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீ வைப்புச் சம்பவத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (TELO) கண்டனம் தெரிவித்துள்ளார். நீண்ட காலத்தின் பின்னர் மீழ குடியேறிய அம் மக்களினது இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கவலைதெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் இந்த மீள்குடியேற்ற கிராமத்தில் தற்காலிக கொட்டில்கள் மற்றும் பொதுக் கட்டிடம் போண்றவை நேற்று இரவு இனம் தெரியாத ஆயுததாரிகள் சிலரால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும், ஒரு பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 21 வீடுகளைக் கடற்படையினர் கழற்றி தம்முடன் எடுத்துச் சென்றிருப்பதாகவும், 8 வீடுகள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் பூர்வீகமாகக் குடியிருந்து வந்த இந்தக் கிராமத்தில் பெரும்பகுதியைக் கடற்படையினர் எடுத்துக் கொண்டனர். மீதி இருந்த சிறிய நிலப்பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது தமது குடியிருப்புக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாக ஊர் முக்கியஸ்தராகிய மஃமுத் தௌபீக் தெரிவித்தார். மறிச்சுக்கட்டி மரைக்கார்தீவுக்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துத் திரும்பியுள்ள வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி, இந்தச் சம்பவத்தில் 8 வீடுகளும் ஒரு பொது மண்டபமும் எரிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 4 வீடுகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினர் சம்பந்தப்பட்டதற்கான சாட்சியங்கள் கிடையாது என்றும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment