மேற்கத்தேய
கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்றவற்றுக்கு அடிமையாகி எமது மாணவர்கள்
கல்வியிலும், கலாச்சாரத்திலும் பின்தங்கி செல்லும் பரிதாப நிலைமை
ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமையை மாற்றுவதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும்
மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டும் என டெலோ இயக்கத்தின் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார்
தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்தின்
23வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதுவருடத்துக்கான கலாசார விளையாட்டு
நிகழ்வும், சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கழகத்தின் தலைவர்
ந.துஸ்யனதன் தலைமையில் முனைத்தீவு சக்தி மகா வித்தியாலய விளையாட்டு
மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முனைத்தீவு மேன்பவர் கழகமானது தமிழ்
கலாசாரத்தை பின்பற்றுவது போன்று, எமது பிரதேச ஏனைய விளையாட்டுக் கழகங்களும்
எமது தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்களை பின்பற்ற வேண்டும்.
எமது பாரம்பரிய கலாச்சாரங்களை பின்பற்றாமையினால் எமது மாவட்டத்தில்
எதிர்பராத அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றது. அண்மையில் நடந்த சம்பவமானது
எமது தமிழ் இனத்திற்கு ஒரு அவமானமாகும். இதுபோன்ற செயற்பாடுகள் மேலும் எமது
மாவட்டத்தில் இடம்பெறாது இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பிரதேச மக்கள் என்றும் தமிழ்
தேசியத்துடன் இருப்பவர்கள். அவர்கள் கடந்த காலத்தில் பல இன்னல்களை
எதிர்நோக்குயிருந்தனர். இதனை நான் இங்கு அறிவேன். இப்பிரதேசத்திற்கு
என்னாலான பல உதவிகளை தங்களுக்கு வழங்குவேன் என்றார்.
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான
சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மாகாண சபை
உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், மா.நடராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து
கொண்டனர்.
Posted by TELOadmin on Friday, May 3, 2013 · Leave a Comment

No comments:
Post a Comment