எம் இனத்தை அழித்த பேரினவாத சக்திகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்- ஜனா
Published on August 7, 2012-4:31 pm
கடந்த
கால அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டு நிகழ்கால
யதார்த்தத்திற்கேற்ப தந்திரோபாயங்களை வகுத்துக்கொண்டு எதிர்கால
இலட்சியத்தினை அடைவதற்கு நம் தமிழர்களை வழி நடாத்த
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழி சமைத்துள்ளது என தெரிவித்துள்ள கிழக்கு
மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்
கோவிந்தன் கருணாகரம்(ஜனா), பேரினவாதமோ கடந்த காலத்தின் நிகழ்வுகளை கணக்கில்
எடுக்காது நிகழ்கால யதார்த்தத்தினையும் புரிந்துகொள்ளாது ஒட்டுமொத்த எம்
தமிழ்ச் சமூகத்தையும் படுகுழியில் தள்ள முனைகின்றது எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,செட்டிபாளையத்தில்
கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கை ஓரின, ஒருமொழி பேசும் நாடாக என்றும்
இருந்ததில்லை. வரலாற்று காலம் தொடக்கம் பன்மைத்துவ நாடாகவே
இருந்துவந்துள்ளது. இந்த யதார்த்தத்தை புறக்கணிக்க புறப்பட்டவர்களே இன்று
மகிந்த அரசின் பங்காளிகளாக உள்ளனர். வாயைத் திறந்தாலே இனவாத வாந்தியெடுத்து
வரலாற்றை திரிக்கும் எல்லாவெல மேதானந்த தேரர் இனவாதமே இரத்தத்தில் ஊறிய
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வரலாறே தெரியாது. வாயில் வந்ததை உளறும்
அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இன்று ஒருங்கிணைந்து இலங்கைக்கு மீண்டும்
ஒரு புது மகாவம்சத்தை படைக்க முனைகின்றார்கள். இவர்களது புதிய
கண்டுபிடிப்பு தான் இலங்கையின் ஆதிக்குடிகளும் ஆதிமதமும் சிங்களவர்களும்
பௌத்தமும் என்பது.இவர்களைத் தன் ஆட்சிக் கட்டிலிலும் தன் இடது புறத்தில் இதயமாகவும் வைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தீர்வு காணப் புறப்பட்டுள்ளார் நம் மகிந்த. இதை நாங்களும் நம்ப வேண்டுமாம். சர்வதேச சமூகமும் நம்ப வேண்டுமாம். மணலைக் கயிறாக்குவதில் வல்லவர் மகிந்த. ஆனால் தொடர்ச்சியாக தமிழ்ச் சமூகத்தின் கண்களிலும் சர்வதேச சமூகத்தின் கண்களிலும் மண்ணைத் தூவ முடியாது என்பதை வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மகிந்த அரசுக்கு மரண அடி கொடுத்து புரிய வைக்கும்.
இனவாதமும் நாட்டுப்பற்றும் வேண்டுமானால்
தென் பகுதியில் விலை போகும். ஆனால் கிழக்கில் அது விலைபோகும் பண்டமல்ல
விற்பனையாகும் சரக்குமல்ல என்பதை தேர்தல் முடிவு உணர்த்தும். தேசப்பற்று
நாட்டுப்பற்று என்று நாக்கு வழிக்கும் அரசுத் தலைவருக்கும் அவரது
அடிவருடிகளுக்கும் ஒன்று மட்டும் கூறுகின்றேன். உண்மையான இலங்கை வரலாற்றை
சற்றுப் புரட்டிப் பாருங்கள். வரலாறு உண்மையினை எடுத்துரைக்கும். கண்டி
அரசு அந்நியரின் கையில் எனக் கட்டிக்காத்து நாட்டுப் பற்றை
வெளிக்காட்டியவன் நாயக்க மன்னன். ஒரு தமிழன் அதை அந்நியரிடம் அதுவும்
ஆங்கிலேயர் கைப்பற்ற காட்டிக் கொடுத்தவர்கள் சிங்கள பிரதானிகள்.
சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஏன் அதற்கு
முன்பிருந்து என்று கூடக் கூறலாம். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம்
பெறுவதற்காக நாம் நடத்திய சுதந்திரப் போராட்டத்தில் சிங்களவருக்கும் மேலாக
தேசப் பற்றினை வெளிக் காட்டி ஐக்கிய இலங்கைக்கு ஆதார அடித்தளம்
இட்டவர்களும் எம் தமிழர்களே. இவை யாவும் வரலாற்று உண்மையாகும்.
அன்று ஐக்கிய இலங்கையை தமிழர்கள்
வலியுறுத்தியபோது டொனமூர் காலத்தில் இலங்கையர்களுக்குப் பொருத்தமான ஆட்சி
முறை சமஸ்டியே என்று முதன் முதலில் இலங்கை ஆட்சி முறைக்கு சமஸ்டி என்ற
எண்ணக் கருவை எடுத்துக் கூறியவர் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தின் பிதாமகரான
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களே. இதுவும் இலங்கை அரசியல்
வரலாற்றின் ஒரு உண்மையாகும். கடந்த கால உண்மை வரலாறுகளை பேரினவாதிகள்
அறிவதுமில்லை அறிவதில் ஆர்வம் கொள்வதுமில்லை. அறிந்துகொண்டாலும் கூட
அதிலுள்ள உண்மையை புரிந்துகொள்வதுமில்லை.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. கடந்த கால
அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டு நிகழ்கால
யதார்த்தத்திற்கேற்ப தந்திரோபாயங்களை வகுத்துக்கொண்டு எதிர்கால
இலட்சியத்தினை அடைவதற்கு நம் தமிழர்களை வழி நடாத்த தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு வழி சமைத்துள்ளது. ஆனால் பேரினவாதமோ கடந்த காலத்தின்
நிகழ்வுகளை கணக்கில் எடுக்காது நிகழ்கால யதார்த்தத்தினையும்
புரிந்துகொள்ளாது ஒட்டுமொத்த எம் தமிழ்ச் சமூகத்தையும் படுகுழியில் தள்ள
முனைகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் ரவூப்
ஹக்கீம் அவர்கள் தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சனையின்போது ஒரு தடவை கூறியது
போல நாமும் கண்ணைத்திறந்து விருப்பத்துடன் படுகுழியில் விழ வேண்டுமா? ஒரு
தடவைக்கு ஓராயிரம் தடவை சிந்தியுங்கள் என்று என் தமிழ் மக்களே உங்கள்
சிந்தனைக்கு வழிவிடுகிறேன்.
எனக்குத் தெரியும் என் தமிழ்ச் சமூகம்
சிந்திக்கத் தெரிந்தது மட்டுமல்ல சரியான நேரத்தில் சரியான தீர்மானமும்
எடுக்க வல்லது. அந்தச் சரியான தீர்மானம் எடுக்க வேண்டிய சரியான நேரம் இந்த
கிழக்கு மாகாண சபைத் தேர்தல். எனவே இத் தேர்தலில் உங்கள் உயர் ஜனநாயக
உரிமையாம் வாக்குரிமையை வீட்டுச் சின்னத்திற்கு வழங்கி பேரினவாதத்திற்கு
தக்க பாடம் புகட்டி எம் தமிழ்த் தேசியம் தழைக்க நீரூற்றி உரமூட்டுங்கள்
என்று ஒட்டுமொத்த எம் கிழக்கு வாழ் தமிழ் சமூகம் புத்திஜீவிகள்
பத்திரிகையாளர்கள் கல்விமான்கள் அரச அலுவலர்கள் அனைவரையும் உரிமையுடன்
வேண்டுகின்றேன் என ஜனா தெரிவித்தார்.
நண்றி;


No comments:
Post a Comment