Thursday, 28 March 2013

ரெலோவின் மாநாட்டை ஏப்ரலில் நடத்த உத்தேசம் !

ரொலோ என்று அழைக்கப்படும் தமிழர் விடுதலை இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி வவுனியாவில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த மகாநாடு கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழர் விடுதலை இயக்கத்தினால் அறிவிப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் மார்ச் மாதத்திற்கு அந்த மகாநாடு பிற்போடப்பட்டது.

எனினும் ஜெனிவா கூட்டத் தொடர் மற்றும் ஜேர்மனில் நடைபெறும் மாநாடொன்று ஆகியவற்றில் தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.இதனால் மார்ச் மாதத்திலும் ரொலோ மாநாடு இடம்பெறவில்லை. 

இந்நிலைல் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டம் வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் என்றும் மகாநாட்டிற்கான நேரம் மற்றும் இடம் என்பன கட்சியின் தலைவருடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Saturday, 16 March 2013

மறுப்பும் விளக்கமும் - விந்தன் !

பின் கதவால் உள்நுழைந்து யாழ்.முதல்வராகியவர் யோகேஸ்வரி பற்குணராஜா!– விந்தன் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 16 மார்ச் 2013, 10:27.24 AM GMT ]
http://www.tamilwin.com/show-RUmryDSaNYfr2.html
 

தற்போதைய மாநகர முதல்வாரன திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் அக் கட்சியில் 4ம் இடத்தில் வெற்றி பெற்றிருந்தார். எப்படியோ பின் கதவால் உள்நுழைந்து முதல்வராகியவர் இன்று மாநகரத்தில் இருந்து கொண்டு என்ன செய்கின்றார் என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிரணி உறுப்பினர் விந்தன்
யாழ்.மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:
யாழ்ப்பாணம் நாயன்மார் குளத்தக்கு அருகில் மாநகரத்துக்குச் சொந்தமான வீதி ஒன்றில் பெரும் குழி ஏற்பட்டு இருப்பதாகவும் அக்குழியை ஓலையால் போட்டு மூடி மறைத்துள்ளார்கள் என்றும் செம்மணி வீதியில் நடந்த மரணம் போல் இவ் வீதியிலும் விபத்தினூடாக மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாநகரசபை உறுப்பினர்களாகிய நீங்கள் என்ன பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
மாநகரசபை ஆளும் தரப்பு தொடர்பாகவும் அவர்களின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்தி தொடர்பிலும் பல்வேறு குறைகளைக் கூறி குற்றம் சாட்டியதோடு செம்மணி வீதியில் ஏற்பட்ட விபத்து சம்பவம் போல் இவ் வீதியிலும் மாநகரசபைக்குச் சொந்தமான ஏனைய வீதிகளிலும் நடப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக சாரப்படச் சொல்லப்பட்ட செய்தியில் தவறுதலாக “செம்மணி வீதி மாநகர சபை எல்லைக்கு உட்பட்டதென்றும் விபத்தில் ஏற்பட்ட மரண சம்பவத்திற்கு மாநகரசபையே பொறுப்பேற்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இச் சொற்பதங்கள் என்னால் கூறப்படவில்லை என்பதை நான் மறுப்பதோடு முதல்வரின் பதில் செய்திக்கு நான் சில விளக்கங்களையும் சொல்ல விரும்புகின்றேன்.
முதல்வர் தனது செய்திக்குறிப்பில் நான் மாநகர சபையின் எல்லைக்குள் பிறக்காதவன் என்றும் எனக்கு மாநகரசபை எல்லை தெரியாமல் இருக்கின்றது என்றும் தாங்கள் செய்யும் அபிவிருத்தியைப் பொறுக்க முடியாத நான் குறை கூறுவதையே வழமையாகக் கொண்டுள்ளேன் எனவும் கூறுகின்றார். முதல்வர் அவர்களே நான் 20 வருடங்களாக மாநகரப் பகுதியில் நிரந்தரமாக வசிப்பவன்.
இலங்கையில் பிறந்தவர்கள் மக்கள் ஆதரவு இருந்தால் உள்நாட்டில் எங்கும் தேர்தல் கேட்கலாம் அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மாநகர சபையிலே உறுப்பினர்களாக இருக்கும் என்னைப்போல் வேறு பகுதியில் பிறந்தவர்கள் பல பேர் ஆளும் தரப்பிலும் எதிர் தரப்பிலும் உங்களை விட அதிகமாக வாக்குப் பெற்றவர்கள் இருக்கின்றார்கள் என்பதையும் தாங்கள் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
அதிலும் ஆளும் தரப்பில் சட்ட ரீதியாக முதல்வராக தெரிவு செய்யப்பட்டவர் உங்கள் தரப்பில் அதிகமான வாக்கைப் பெற்றதை நீங்கள் மறந்து விட்டீர்களா? என்னோடு சேர்த்து அவர்களுக்குமா மாநகரசபை எல்லை தெரியாது என சொல்ல வருகின்றீர்கள். உங்கள் பின்னணியையும் நீங்கள் சுய பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
எல்லைகள் தொடர்பாக எமக்கு பாடம் கற்பித்தலை விடுத்து யாழ் மாநகர பகுதிக்குள் மாநகர சபைக்குச் சொந்தமான நூற்றுக்கு மேற்பட்ட நிலங்களையும் கடைகளையும் முறையற்ற விதத்தில் பலகோடி ரூபாய்க்கு விற்றது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினராகிய 8பேர் கடந்த மாதம் தங்களுக்கு முகவரியிட்டு விசேட கூட்டத்தைக் கூட்டும்படி கோரியிருந்தோமே அக்கூட்டத்தைக் கூட்டிவிட்டு இலங்கை லஞ்ச ஊழல் ஆணைக்குழு, இலங்கைக் கணக்காய்வுத் திணைக்களம், வடக்கு மாகாண கணக்காய்வுத் திணைக்களம், மாநகர உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், வடமாகாண உள்ளுராட்சி அமைச்சு, மாநகரசபை உறுப்பினர்கள், மக்கள், ஆகியோருக்கு நீங்கள் நேர்மையானவர்கள் என்றும் உங்கள் அபிவிருத்தி நேர்மையானவவை எனவும், உங்கள் சேவையில் தூய்மை இருக்கின்றது என்பதையும் முடிந்தால் நிருபித்துக் காட்டுங்கள்.
அப்பொழுது தெரியும் யார் பதவி இழந்து வீதியில் அநாதரவாக நிற்பார்கள் என்று உங்களுக்கு இன்னுமொன்றைக் கூற விரும்புகின்றேன் மாநகரசபையைக் கலைத்து விட்டு 23 வட்டாரத்திலும் ஏதாவது ஒரு வட்டாரத்தில் என்னோடு தேர்தல் களத்தில் நின்று பாருங்கள் அப்பொழுது தெரியும் எனக்கு இருக்கும் மக்கள் பலம்.
யாழ் மாநகர சபைக்கு 2009ல் தேர்தல் நடந்த போது கூட்டமைப்புக்கு அதிகமாக வாக்களிக்கக்கூடிய ஆதரவான பகுதிகளை இனங்கண்ட ஈபிடிபி யினர் அப் பகுதியில் அமைந்துள்ள ஒன்பது வாக்குச்சாவடிகளில் அதிகாலை வேளையிலே கைக்குண்டுகளை வீசி பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதனைத் தடுத்ததன் மூலமும் அன்றையதினமும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளை வீதிகளில் மறித்து பறித்துக் கொழுத்தியதன் மூலமும் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்படுத்தி அவர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதனைத் தடுத்ததன் மூலம் சொற்ப வாக்குகளால் கபடத்தனமாக குறுக்கு வழிகளில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர்.
ஆளுந்தரப்பில் வெற்றி பெற்றவர்களில் திரு றீகன் அவர்களே அதிக விருப்பு வாக்குகளால் முதல்வராகவும் தெரிவாகியும் இருந்தார். தற்போதைய மாநகர முதல்வாரன திருமதி.யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் அக் கட்சியில் 4ம் இடத்தில் வெற்றி பெற்றிருந்தார். எப்படியோ பின் கதவால் உள்நுழைந்து முதல்வராகியவர் இன்று மாநகரத்தில் இருந்து கொண்டு என்ன செய்கின்றார் என்பதை எம் மக்கள் அறியாமல் இல்லை.

கே.என்.விந்தன் கனகரத்தினம்
யாழ் மாநகரசபை உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Friday, 15 March 2013

மதங்களுக்கு இலங்கையில் அச்சுறுத்தல் !

பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்களுக்கு இலங்கையில் அச்சுறுத்தல் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர்!

இந்த நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத உரிமைகளுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதையே அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் பௌத்த கடும் போக்காளர்களின் நடவடிக்கைகள் வெளிப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கிரான்குளம் கணபதிப்பிள்ளையார் ஆலய மடப்பள்ளி மற்றும் அலுவலக கட்டட அடிக்கல் நடும் நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆலய தலைவர் எ.குணலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அபிவிருத்திகளைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென அரசாங்கம் நினைக்கிறது. ஆனால் இனங்களிடையே மதங்களுடையே முரண்பாடு நிலவுமானால் அந்த அபிவிருத்தியினால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக பலரும் பல்வேறு விதமாக பேசிக்கொள்கிறார்கள். கடந்த ஆண்டு ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டம் நடைபெற்ற போது முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு குறிப்பாக அரபு நாடுகளைக் கேட்டிருந்தார்கள் ஆனால் தற்போது முஸ்லிம்கள் கூட தமது மத உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடுகிறர்கள்.இந்துக்கள் கடந்த வருடம் கார்த்திகை தீப நாளைக் கூட கொண்டாட முடியாத நிலை காணப்பட்டது. எமது தாயக பூமியில் இந்து ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. தெற்கிலே சில கத்தோலிக்க தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பௌத்த மதம் இல்லாத ஏனைய மதத்தினர் தமது மத அனுஷ்டானங்களை செய்வதில் பல சாவால்களை எதிர் நோக்குகின்றனர். கிழக்கு மாகாண சபையின் தற்போதைய அரசாங்கம் தனித்தோ அல்லது கூட்டாகவோ ஆட்சி அதிகாரத்தை வைத்திருக்கும் வரை அது சுதந்திரமாக இயங்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது. கடந்த மாகாண சபை ஆட்சியைப் போன்று தான் தற்போதைய கிழக்கு மாகாண சபை ஆட்சியும் பொம்மை ஆட்சியாக உள்ளது. மத்திய அரசாங்கத்தின் கையில் “றிமோட்கொன்றோல்” ஆளுநரின் கையில் “மூக்கணங்கயிறு” மாகாண சபை சுதந்திரமாக இயங்க முடியாத நிலையில் உள்ளதாக சபையிலும் ஊடகங்களிலும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.இதுதான் கிழக்கு மாகாண சபையின் இன்றைய நிலை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனித்தோ அல்லது கூட்டாகவே ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது” என்றார்.

அநாமதேய துண்டுப் பிரசுரங்கள் - ஜனா (TELO)

மட்டக்களப்பில் இன வன்முறையைத் தூண்டவே அநாமதேய துண்டுப் பிரசுரங்கள்: கோ.கருணாகரம்

இனங்களிடையே இனரீதியான வன்முறையை தூண்டும் வகையில் பொதுபலசேனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பவர்களே மட்டக்களப்பில் வெளியாகியுள்ள அநாமதேய துண்டுப் பிரசுரங்களின் பின்னணியிலும் இருப்பதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் கோ.கருணாகரம்(ஜனா) தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளியாகிக்கொண்டிருக்கும் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் பிட்டும் தேங்காய்ப் பூவுக்கும் ஒப்பிட்டு பேசப்பட்டுவந்த உறவுகள் சீர்குலைந்து பல இன்னல்கள் மத்தியில் இருந்து வருகின்றது.கடந்த கால குரோதங்கள் காரணமாக வீரமுனைப் படுகொலை, காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைகளைச் சந்தித்த எமது தமிழ் பேசும் இனம் மீண்டும் ஒரு தடவை அவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை எண்ணிப்பார்ப்பதையே தவிர்த்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இனங்களுக்கும் இடையில் மீண்டும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் எறியப்பட்டு வருகின்றன.பொதுபலசேனா என்ற அமைப்பு இந்த நாட்டில் இனங்களிடையே கலவரத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இதனை நான் நோக்குகின்றேன்.இதன் பின்னணியில் பொதுபல சேனா என்ற பெயரில் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருபவர்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எவ்வாறாயினும் அரசியல் வங்குரோத்து நிலையில் இருப்பவர்களின் செயற்பாடாகவே இதனை நாங்கள் நோக்கவேண்டியுள்ளது.தமிழ் மக்கள் இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும்.இந்த மாவட்டத்தில் மீண்டும் ஒரு தடவை இனக்கலவரம் ஏற்பட்டு இனங்களிடையே சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைமை ஏற்படாமல் இருக்க அனைவரும் உறுதியுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தயவு செய்து தமிழ் மக்களின் துன்ப துயரங்களில் குளிர் காயவேண்டாம் ! - அடைக்கலநாதன் எம்,பி

வடக்கு ஆர்ப்பாட்டங்கள் குறித்து சந்தேகம் வெளியிடுகிறார் !!
news
சுயநலத்திற்காக மேற்கொள்ளப்பட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்தும் துன்பத்தில் தள்ளும் ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா பிரேரணைக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் மன்னாரிலும், கிளிநொச்சியிலும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் சுயநலத்திற்காக மேற்கொள்ளப்பட்டது

மன்னாரிலும், கிளிநொச்சியிலும் அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டில் ஜெனிவா பிரேரணைக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கலந்து கொண்ட மக்கள் எதற்காக தம்மை அழைத்தார்கள் என்று தெரியாத நிலையில் கலந்து கொண்டுள்ளனர்.

மீள்குடியேறிய மக்கள், மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் உடன் தீர்த்து தரப்படும் என கூறப்பட்ட நிலையில் அவர்கள் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர். ஆனால் விபரம் அறிந்த மன்னார் நகர மக்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.

இதே போன்று கிளிநொச்சியில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர்கள் பலவந்தப்படுத்தி அதில் அழைத்து வரப்பட்டு கலந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.

செற்ப அளவு ஊதியம் பெற்றுக்கொள்ளும் நிலையில் குறித்த ஆசிரியர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை மாணவர்களுக்கு வழங்கும் நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கும் நிலையில் அந்த ஆசிரியர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கலில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள் அனைத்தும் உண்மை இல்லையா? என்பதனை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியவர்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன்.

சுய நலத்திற்காக இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பவர்கள் சற்று உங்கள் மனச்சாட்சியை தட்டிப்பாருங்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை மூடி மறைக்க நினைக்காதீர்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவம், எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகியவற்றை கொச்சைப்படுத்துகின்ற வகையில் குறித்த இரண்டு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

தனிப்பாட்ட உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்ய துடிக்கின்றீர்கள்.

தயவு செய்து தமிழ் மக்களின் துன்ப துயரத்தில் குளிர் காயவேண்டாம் என கேட்டுக்கொள்ளுகின்றேன். இந்தியாவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணா விரதப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகித்துள்ளவர்கள் தமது சுய நலத்திற்காக இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுகின்றனர்.

இதனை தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.எனவே தமிழ் மக்கள் பட்ட துன்பங்களுக்கு உங்களால் குரல் கொடுக்க முடியாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் பட்ட துன்ப துயரங்களை மூடி மறைக்க வேண்டாம் என  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Home
15 மார்ச் 2013, வெள்ளி 3:00 பி.ப

Wednesday, 13 March 2013

ஊடக அச்சுறுத்தல் !

ஊடக அச்சுறுத்தல் தொடர அனுமதிக்க வேண்டாம்: விந்தன் கனகரத்தினம்

வலம்புரி பத்திரிகையின் செய்தியாளரான உதயகுமார் சாளின் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக  கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் கே.என்.விந்தன் கனகரத்தினம் இன்று தெரிவித்தார். செய்தியாளரை நடு வீதியில் வைத்து தாக்கிய ஆறு பேர் அடங்கிய கும்பல் அடையாளப்படுத்திக் கொண்டபோதும், இன்று வரை கைது செய்யப்படாததையிட்டு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சில பத்திரிகையாளர்கள் மீதும் பத்திரிகை நிறுவனங்கள் மீதும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியலாளர்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு வரும் நிலையில், இப்பொழுது இறுதியாக வலம்புரிப் பத்திரிகையின் செய்தியாளர் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்படடுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.இத்தகைய மிலேச்சத்தனமான, மனித நேயத்திற்கும், மனித பண்பிற்கும் துளியேனும் ஒவ்வாத செயல்கள் யாழ் மண்ணில் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகவும், தொடர்கதையாகவும் அரங்கேற்றப்பட்டு வரும் மற்றுமோர் அங்கமாக இச்செயல் இடம்பெற்றுள்ளது என அவர் கூறினார்.’இவ்வாறான செயற்பாடுகள் யாழில் அதிகரிக்குமென்றால், ஊடக சுதந்திரம் அழியும் நிலை ஏற்படலாம். ஊடகவியலாளரை தாக்கியவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு யாழ். பொலிஸார் விரைந்து விசாரணை மேற்கொண்டு தாக்குதல் சூத்திரதாரிகளை கைதுசெய்து தண்டனை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். தண்டணை விதிக்கபடாவிட்டால், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்கள் மத்தியில் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் இந்நிலை தொடர அனுமதிக்க கூடாதென்றும்” அவர் தனது கண்டண அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, 9 March 2013

ஜனா ( கோவிந்தன் கருணாகரம் ) டெலோ !

சனல்4 காணொளி- ஜெனிவா களம்- இலங்கை, மூன்றும் தொடர்கதையாக மாறும் நிலையே உள்ளது: கோ. கருணாகரம்

உள்நாட்டுப் பொறிமுறையூடாக அனைத்து இனமும் ஏற்கத்தக்க தீர்வுத்திட்டமொன்றினை இலங்கை அரசாங்கம் முன்வைத்தால், அத்திட்டம் கூட்டாட்சி, நல்லாட்சி, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமையுமாக இருந்தால் அடுத்த ஜெனிவாத் தொடருக்கு நாம் தலைநிமிர்ந்து செல்லலாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.ஆனால் நம் நாட்டு நடப்புக்களோ அதற்கேற்ற வகையில் இல்லை. இன்னுமோர் சனல் 4 காணொளி வெளிவரும். அது வெளிவந்தவற்றைவிட மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தும்.கெகலிய ரம்புக்வெல்ல அப்போதும் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்தால் இன்று கூறியவற்றையே அடுத்த முறையும் கூறுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.ஜெனிவாவில் நடைபெற்றுவரும் அமளிகள் மற்றும் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தொடரந்:து கருத்துத் தெரிவித்த அவர்,

காணொளிகளும் காட்சிகளும் ஜெனிவா தளமும் இலங்கைக் களமும் இப்போதைக்கு முடிவடைவது போல கள நிலைமைகள் கூறவில்லை. இது ஒரு தொடர்கதையாக அல்லது மெகா தொடராக மாறும் நிலைமையினையே அரசு உருவாக்கியுள்ளது.கடந்த வருடமும் ஜெனிவா கூட்டத்தொடர் காலத்திலும் சனல் 4 காணொளி காட்சியினை வெளியிட்டது. அதனை அரசு அப்போது தனது வழமையான அமைச்சர்கள், அதிகாரிகள், ஆகியோரை பயன்படுத்தி பொய் புரட்டு புனையப்பட்டது என்ற வாதத்தினை முன்வைத்தது.யுத்தம் ஒன்று நடைபெறும் போது அந்நாட்டில் முதலில் பலியாவது உண்மை. அதன் பின்னர் பலியாவதே உயிர்களும் உடைமைகளும் என்பது போர் தொடர்பான நடுநிலை ஆய்வாளர்களது ஏகோபித்த கருத்தாகும். இதற்கு இலங்கை அரசு மட்டும் எப்படி விதிவிலக்காகும்.சர்வதேச அரசியல் என்பது இன்று புதுவடிவம் பெற்றுள்ளது. உள்நாட்டு விவகாரம் என்றும் வெளித்தலையீடு தேவையில்லை என்றும் வீம்பு பிடிப்பது வீணென்று உணராத நிலையில் அரசு உள்ளது.ஜெனிவா அரங்கு இக்காலத்தில் நிகழும் என்பதும் அதில் இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானம் கேள்விக்குள்ளாகும் என்பதும் அதற்குரிய குறைந்தபட்ச நியாயமான பதிலையேனும் சர்வதேச அவையில் சமர்ப்பிக்கவேண்டும் என்ற ரீதியில் அரசு காய் நகர்த்தல் களை மேற்கொள்ளவில்லை.முள்ளிவாய்க்கால் யுத்த வெற்றிகூட அமெரிக்கா, இந்திய மற்றும் சர்வதேச ஆதரவுகளால் பெற்ற வெற்றி என்பதைவிட தமது இராணுவத்தின் திறமைகளால் பெற்ற வெற்றியாகவும் இன்றும் அரசு கணக்குப் போட்டுக் கொண்டுள்ளது.கடந்த வருட ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெற்ற வேளை காணொளிக் காட்சியினை வெளியிட்ட சனல் 4 இம்முறையும் ஜெனியா கூட்டத் தொடர் நடைபெறும் வேளை போர்க் குற்றங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் சம்பவங்களைக் கொண்டு காணொளியினை வெளியிட்டு மனித மனத உரிமை ஆர்வலர்களையும். சிவில் சமூகத்தினரையும் ஆட்சித் தலைவர்களையும் ஐ.நா. அதிகாரிகளையும், ஏன் ஒட்டு மொத்த சர்வ தேசத்தையுமே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.குறிப்பாக 12 வயது பாலகன் பாலச்சந்திரன் முகம் வெளிப்படுத்தும் அதிர்வுகள் மனம் படைத்த மனிதர்களது இதயங்களை ஒருகணம் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.பாலச்சந்திரன் சம்பவம் விடுதலைப் புலிகளின் தலைவரது மகன் என்பதால் அதிர்வினை ஏற்படுத்தவில்லை. பால்வடியும் முகம் கொண்ட ஒரு பாலகன் உண்ணக் கொடுத்து உயிரைப் பறித்த சம்பவம் உலகில் எங்குமே நடைபெறாத வரலாறாகும்.இதே வேளை காணொளியினைத் தயாரித்த அவர்களது கருத்துப்படி இத்துடன் இந்த காணொளி விவகாரம் முடிந்து விட்டது என்று நிம்மதியாக இலங்கை அரசு இருந்து விடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இரண்டாவது காணொளிச் சம்பவங்களை விடவும் மேலும் வலிதான போர்க்குற்ற ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவ்வப்போது அவை வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் ஆட்சியாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்த நிலைமைக்கு ஆக்கியுள்ளது. இதனால் தான் இக்காணொளி விவகாரத்தை நான் மெகா தொடர் என விளித்தேன்.உண்மையில் அரசு யுத்தம் முடிவடைந்த கையோடு வெற்றி முழக்கம் அறிவித்த வேளை யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை மையமாக வைத்து யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் மனம் திறந்து கலந்துரையாடி சகல சமூகங்களும் சமத்துவமாக நம் நாட்டில் வாழக் கூடிய வகையில் ஒரு தீர்வுத்திட்டத்தினை வைத்திருந்தால் இந்த மூன்றாண்டுகளில் நம் நாடு எங்கோ சென்றிருக்கும்.ஆனால் அரசோ பேரினவாதத்தை விதைத்து சிறுபான்மை இனம் ஒன்று இல்லை என்று கோசமிட்டு மெல்ல மெல்ல சிறுபான்மை இனத்தினை அவர்களது நிலம் அமைவிடம் கலாசாரம் மொழி என கல வழிகளாலும் அழித்து வருகின்றது.இன்னமும் காலம் கடந்து விடவில்லை. அரசு கூறுவது போல உள்நாட்டுப் பொறிமுறையூடாக அனைத்து இனமும் ஏற்கத்த்க தீர்வுத்திட்டமொன்றினை முன்வைத்தால், அத்திட்டம் கூட்டாட்சி, நல்லாட்சி, பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமையுமாக இருந்தால் அடுத்த ஜெனிவாத் தொடருக்கு நாம் தலைநிமிர்ந்து செல்லலாம். முகம் கொடுக்கலாம்.ஆனால் நம் நாட்டு நடப்புக்களோ அதற்கேற்ற வகையில் இல்லை என்றே தோன்றுகிறது. நான் நினைக்கின்றேன். இன்னுமோர் சனல் 4 காணொளி வெளிவரும். அது வெளி வந்தவற்றைவிட மேலும் அதிர்வுகளை ஏற்படுத்தும். கெகலிய ரம்புக்வெல்ல அப்போதும் அமைச்சரவைப் பேச்சாளராக இருந்தால் இன்று கூறியவற்றையே அடுத்த முறையும் கூறுவார்.ஏனெனில் அரசு ஆட்சியாளர்கள் கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் படிக்கவில்லை பட்டறிவும் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

Wednesday, 6 March 2013

சுவிஸ் லுட்சேர்ன் மக்களோடு கலந்துரையாடவுள்ளது கூட்டமைப்பு

 
[ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 10:44.01 PM GMT ]
ஜெனீவா முன்றலில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாளை சுவிஸ் லுட்சேர்ன் மக்களை சந்தித்து அவர்களோடு கருத்தாடல் நடாத்தவுள்ளனர்.
லுட்சேர்ன் தமிழர் இந்து கலாச்சார மன்ற ஏற்பாட்டில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் லுட்சேர்னில் உள்ள தமிழ் மக்களை நாளை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர்.
நாளை மாலை 6:00 மணியளவில் லுட்சேர்னில் உள்ள தமிழ் மன்றத்தில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன், பா.அரியநேந்திரன், மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து தமிழ் உறவுகளையும் இச்சந்திப்பில் கலந்துகொண்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் கடந்த 3ம் திகதி சுவிஸ் துர்கா மாநிலத்திலும் குட்டமைப்பு உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, 3 March 2013

சமரசிங்கவின் உரை அப்பட்டமான பொய் !

டெலோவின் தலைவர் செல்வம் !

இராணுவப் பிரசன்னம், மீளக்குடியேற்றம், காணி விவகாரம், புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் உட்பட வடக்கு நிலைவரம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நடவடிக்கையை விமர்சிக்க இலங்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது. அத்துடன், ஜெனிவாவில் இம்முறை உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் எனவும், இனியும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றலாம் என இலங்கை அரசு நினைப்பதை உடன் கைவிடவேண்டும் எனவும் கூட்டமைப்பு கூறியுள்ளது.“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தேவையில்லாத ஒன்று. இது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது.இந்நிலையில், இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், பாதுக்காக்கவும் என்ற பெயரில் நியாயமற்ற பக்கச்சார்பான விதிகளுக்கு அப்பாற்பட்ட மற்றும் நீதியற்ற முறையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையால் எடுக்கப்படும் எந்தவொரு அணுகுமுறையையும் நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தரப்பு வாதங்களை முன்வைத்து உரையாற்றியபோது  தெரிவித்திருந்தார்.“வடக்கில் இராணுவத்தினர் குறைக்கப்பட்டுள்ளனர்; இராணுவத்தினர் அங்கு மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்; வடக்கில் மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளது; புனர்வாழ்வு நடவடிக்கை திறம்பட நடைபெறுகின்றது; காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது உரையில்  குறிப்பிட்டிருந்தார்.இந்த உரை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தவை வருமாறு:
“உலகத்தை மீண்டும் ஏமாற்றும் வகையில் இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனிவாவில் புதன்கிழமை உரையாற்றியுள்ளார். ஆனால், சர்வதேச சமூகத்தை இனியும் ஏமாற்றலாம் என இலங்கை அரசு நினைப்பதை உடன் கைவிடவேண்டும்.வடக்கில் இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், காணி விவகாரம். புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்கம் உட்பட வடக்கு நிலவரம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க  ஜெனிவாவில் ஆற்றிய உரை உண்மைக்குப் புறம்பானது.  அவர் அப்பட்டமான பொய்களை அங்கு கூறியுள்ளார். வடக்கின் உண்மை நிலைவரங்களை ஜெனிவா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அங்கு எடுத்துக்கூறும்.மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளிடம் தமிழர் தாயகத்தில் இலங்கை அரசும், படையினரும் மேற்கொள்ளும் அராஜகங்களை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பார்கள்.இறுதிப் போரில்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேறிவிட்டனர் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார். ஆனால், இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் யாழில் 16 அகதி முகாம்களில் இன்னும் வாழ்கின்றனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் இருப்பதால் அங்கு சென்று குடியேற மக்கள் அச்சமடைகின்றனர்.  அதேவேளை, கடந்த வருடம் செட்டிகுளம் முகாமில் இருந்த மக்களை வலுக்கட்டாயமாக பஸ்களில் ஏற்றிச்சென்ற  அரச தரப்பினர்  அவர்களை கேப்பாபிலவு  காடுகளில் அந்தரிக்கவிட்டுள்ளனர்.அங்கு அவர்கள் அடிப்படை வசதிகளின்றி அவல வாழ்வு வாழ்கின்றனர். அங்கு இராணுவத்தினரின் கெடுபிடிகளும் இடம்பெறுகின்றன. எனவே, வடக்கில் இராணுவ ஆட்சியின் கீழ் அச்சத்தின் மத்தியில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இந்நிலையில், வடக்கில் நல்லிணக்கம் என்று அமைச்சர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடவடிக்கையை விமர்சிக்க இலங்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இலங்கையின் உண்மை நிலைவரத்தை ஆராய்ந்த பின்னர்தான் சர்வதேச நாடுகள் பிரேரணைகளைக் கொண்டுவருகின்றன. எனவே, ஜெனிவாவில் இம்முறை உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.

கூட்டமைப்பு சுவிஸ்ல் !

இன்று சுவிஸ் வாழ் தமிழ் மக்களோடு கலந்துரையாடும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013, 10:04.41 AM GMT ]


சுவிஸ் துர்கா தமிழ் கலை கலாச்சார மன்ற ஆதரவில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களை இன்று சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன், பா.அரியநேந்திரன், மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அனைத்து தமிழ் உறவுகளையும் இச்சந்திப்பில் கலந்துகொண்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.