Saturday, 15 December 2012

சிறிலங்காவில் பெளத்தம் மட்டும்தான் - ஏனைய மதங்களுக்கு இடமில்லை [ வெள்ளிக்கிழமை, 14 டிசெம்பர் 2012, 08:27 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவின் தென்மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெற்றிய பிரதேசத்திலுள்ள Jeevanalokaya Sabhawa தேவாலயத்தில் கடந்த ஞாயிறன்று
காலைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்கர்கள் மீது 80 வரையான புத்த பிக்குகளின் தலைமையில் 1000ற்கு மேற்பட்ட காடையர்கள் காடைத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இத்தாக்குதலை மேற்கொள்வதற்கு காவற்துறையின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதுடன், தேவாலய சொத்துக்கள் நாசமாக்கப்பட்டு, அங்கு பிராத்தனையை நடாத்திக் கொண்டிருந்த போதகர் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாக கத்தோலிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தேவாலயத்தை ஒரு நாளுக்குள் மூடுமாறு குறித்த தாக்குதலை தலைமை தாங்கிய புத்த பிக்குகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அறியப்படுகிறது. இத்தாக்குதலாளிகள் தேவாலயத்திற்கு சொந்தமான தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள், வாகனங்கள் போன்றவற்றுக்கு சேதம் விளைவித்தது மட்டுமல்லாது, இத் தேவாலயத்தின் போதகர் மீதும் தீவிர தாக்குதலை நடாத்தியிருந்தனர். கற்பாறையின் மூலம் தாக்கப்பட்ட போதகரின் அடிவயிறுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும், தாக்குதலுக்கு உள்ளான போதகரை தொடர்ந்தும் காடையர் குழு கண்காணித்துக் கொண்டிருப்பதால் இவரால் தனது காயத்திற்கு கூட மருத்துவ சிகிச்சை பெறமுடியாத நிலையிலுள்ளதாக குறித்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இக்காடைத்தனமான தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே. இதில் சேதமடைந்த தேவாலய சொத்துக்கள் கிட்டத்தட்ட 4000 அமெரிக்க டொலர்கள் பெறுமதிமிக்கன என தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த இரு காவற்துறையினர் தேவாலயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கண்காணிப்பதற்காக கடமையில் நின்றிருந்தனர். இத்தாக்குதலை அடுத்து மேலும் எவ்வித தாக்குதலும் நடாத்தப்படுவதை தடுப்பதற்காக மேலதிக காவற்துறையினரும் இராணுவத்தினரும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தாக்குதல் இடம்பெறுவதற்கு முதல்நாள் சில புத்த பிக்குகள் தேவாலய போதகரை சந்தித்து இத்தேவாலயத்தில் வழிபாடு இடம்பெறுவதற்கு புத்த பிக்குவிடம் அனுமதி வாங்க வேண்டும் என எச்சரித்திருந்தார். சிறிலங்காவின் அரசியல் யாப்பின் பிரகாரம் மதச்சுதந்திரம் காணப்படுவதாக போதகர், குறித்த பிக்குவிடம் பதிலளித்திருந்தார். இந்த அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் தேவாலயத்தில் வழிபாடு நடக்குமானால் தான் தேவாலயத்தை மூடுவேன் அல்லது சேதங்களை விளைவிப்பேன் என அந்த புத்தபிக்கு மீண்டும் போதகரிடம் வலியுறுத்தியிருந்தார். "தற்போதைய சிறிலங்காவின் கூட்டாட்சி அரசாங்கத்தில் புத்தபிக்குகள் பிரதான அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் குற்றங்களைப் புரிகின்றனர். இது மட்டும் தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல. கத்தோலிக்கர்களுக்கு எதிராக புத்த பிக்குகளின் தலைமையில் 50ற்கும் மேற்பட்ட மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன" எனவும் தகவல் தந்த வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தெனியாயவிலும் இவ்வாறான ஒரு சம்பவமும் இடம்பெற்றிருந்தது. இத்தாக்குதல் சம்பவமானது அதிகாரம் மிக்க அரசியல் அதிகாரிகளின் துணையுடனேயே இடம்பெற்றது. சிறிலங்காவின் மொத்த சனத்தொகையான 20.4 மில்லியன் மக்களில் 70 சதவீதத்தினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். சிறிலங்காவில் 8.4 சதவீத கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 40 சதவீதத்தினர் சிறுபான்மை தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். சில வலது சாரி புத்த சமயக் குழுக்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்தை மேலும் வலுப்படுத்தி நாட்டிலுள்ள ஏனைய சிறுபான்மை சமயங்களைப் பின்பற்றுபவர்களை அழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். சிறிலங்காவின் மத்திய மாகாணத்திலுள்ள நவீன மகரகமவிலுள்ள ராஜ மகா விகாரையில் கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் Buddhist Power Force என்கின்ற அமைப்பால் சிங்கள பௌத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் சிறுபான்மை முஸ்லீம் மற்றும் கத்தோலிக்கர்களிடமிருந்து பௌத்தர்கள் எவ்வாறு மீளெழுச்சி கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. சிறிலங்காவில் வாழும் கத்தோலிக்கர்களின் மத வழிபாடுகளை அழிப்பதை நோக்காகக் கொண்டு புத்த பிக்குகளால் தலைமை தாங்கப்படும் செல்வாக்கு மிக்க அரசியற் கட்சியும், அரசாங்கத்தின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய சட்டம் ஒன்றை புதிதாகக் கொண்டு வருவதற்கான முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. "சிறிலங்காவில் செயற்படும் தேவாலயங்களின் செயற்பாடுகள் வரையறுக்கப்பட வேண்டும் என அண்மையில் இந்நாட்டின் மத விவகாரங்களுக்கான அமைச்சு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. தேவலாயம் என்றால் என்ன என்பதைக் கூட இச்சுற்றறிக்கை வரையறுப்பதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன" என தேசிய கத்தோலிக்க சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. செய்தி வழிமூலம் : Christian Today மொழியாக்கம் : நித்தியபாரதி http://www.puthinappalakai.com/view.php?20121214107446

No comments:

Post a Comment