Sunday, 28 April 2013

4 கட்சிகள் இணைந்து ‘த.தே.கூ’வை பதிவுசெய்ய தீர்மானம் நிறைவேற்றம் !!

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்படி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாநாட்டின் போதே இந்த தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு,

 
•    தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவு செய்யப்படவில்லை.


•    பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள், சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்க வேண்டும்.


•    ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும்.
•    இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் ஒரு முன்னணியாக, தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும்.
•    தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் இதில் சேர விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும்’ என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Posted by on Sunday, April 28, 2013 · Leave a Comment 

தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு ரவூப் ஹக்கிம் வருகை தருவது தவறு: சிவாஜிலிங்கம்

நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிம், தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு வருகை தருவது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் அரசியல் விவகாரப் பொருப்பாளருமான சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினம் இன்று யாழ். பொது நூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சதுக்கத்தில் நடைபெற்றது.இதன்போது தமிழர் விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அதனை தொடர்ந்து ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் அமைச்சரவையின் பங்காளியாகவும் இருக்கும் ரவூப் ஹக்கிமை இங்கு அழைத்திருப்பது தவறென்றும், அமைச்சர் ரவூப் ஹக்கிமுகு எதிராகவோ, தனிப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராகவோ, அல்லது முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான கருத்து இது அல்லா என்று அவர் கூறினார்.

அத்துடன், இனப்படுகொலை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியை இங்கு அழைத்தது தவறு. 

இதேபோன்று ஜெனரல் சரத் பொன்சேகா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, றிசாத் பதியூதின், கருணா போன்றவர்களையும் இங்கு அழைத்திருக்க வேண்டும் என்று தந்தை செல்வாவின் அறங்காவலர் குழுவினரிடம் அவர் கேட்டு கொண்டார்.ஏனென்றால் தந்தை செல்வாவின் போராட்டம் புனிதமானது. அவர் முஸ்லிம் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர். 

 ரவூப் ஹக்கிம் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர். நான் அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். 

எனினும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இருக்கிற அமைச்சரவையின் பங்காளியாக இருப்பவரை இப் புனித பூமிக்கு பிரதிநிதியாக அழைத்திருப்பது என்பது தவறென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Posted by on Sunday, April 28, 2013 · Leave a Comment 

முள்ளியவளை மக்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: வினோ எம்.பி.

முள்ளியவளையில் மீள்குடியமர்ந்த மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். 


இந்த மக்கள் ஒவ்வொரு இரவுப் பொழுதையும் நித்திரை இன்றியும் நிம்மதி இன்றியும்  மரணப் படுக்கையிலேயே கழித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை மத்தி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குடிசைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீயிட்டு எரிக்கப்பட்டது  இந்த நிலையில நேற்று திங்கட்கிழமை அந்த இடத்திற்குச் சென்று தீயிட்டு எரிக்கப்பட்ட குடிசைகளை அவர் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறினார்.

எதிரிகளை இனங்காண முடியாதவாறு கறுப்பு அரசியல்வாதிகளின் இரும்புத்திரை பாதுகாப்பில் மேற்கொள்ளப்படும் கொலை அச்சுறுத்தல்களுக்கும் வீடுகள் எரிக்கப்படுகின்றமைக்கும்  அரசாங்கம் முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இறுதி யுத்தத்தில் அனைத்தையும் இழந்த மக்கள் ஓலைக் குடிசைகளில்  வாழும் உரிமையும் இன்று மறுக்கப்படுகின்றது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், இது இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏனைய மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை போன்ற செயல் ஆகும் எனவும் கூறினார்.

மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற திரை மறைவில் எடுக்கப்படும் முயற்சியின் ஆரம்பமே இது எனவும் அவர் கூறினார். தமிழினத்தின் காவலர்களாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாடகமாடி வேடமிட்டவர்களும் இதன் பின்னணியிலிருப்பது தமிழர் நெஞ்சங்களில் வேதனை தரும் செயல் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.

அரசாங்கம் இவ்வாறான நாசகாரச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் அவர்களுக்கு துணை போகின்றவர்களையும் பாதுகாப்பதிலிருந்து நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Posted by on Wednesday, April 24, 2013 · Leave a Comment


முல்லை கரைவலை சம்மாட்டிகள் சங்கத்தில் அனைவரும் சிங்களவர் -அத்துமீறியோர் கைகளில் ஆளுகை


முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைவலை பாடுகள் அனைத்தும் சிங்கள மீனவர்களால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட கரைவலை சம்மாட்டிகள் சங்கம் முழுமையாக சிங்கள மீனவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

1965ஆம் ஆண்டு தொடக்கம் 1984ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைவலை பாடுகள் 12 இருந்தன. இதில் ஒன்று மட்டுமே சிங்கள கடற் றொழிலாளருக்குச் சொந்தமானதாகும். ஏனை 11 பாடுகளும் தமிழர்களுடையது.
 
எனினும் 1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களிலிருந்து தமி ழர்கள் வெளியேறிய பின்னர் அனைத்து கரைவலைப்பாடுகளும் சிங்கள மீனவர்களால் அபகரிக்கப்பட்டு அவற்றில் அவர்கள் தொழில் செய்துவந்தனர்.

இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் எல்லைக்கிராமங்களில் குடியேறிய தமிழ் மக்கள் தமது பாடுகளை தம்மிடம் மீளவும் ஒப்படைக்குமாறு கேட்டிருந்த நிலையில் அவை மீளவும் கையளிக்கப்படாமல் சிங்கள மீனவர்களுக்கு அமைச்சர்கள் மற்றும் கடற்படையினரால், தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டு, 12ஆக இருந்த பாடுகள் 18ஆக அதிகரிக்கப்பட்டதுடன் மிகுந்த போராட்டத்தின் பின்னர் 3பாடுகள் மட்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. ஏனைய தமிழ் மீனவர்கள் மிகுந்த வாழ்வாதார நெருக்கடியுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கரைவலை சம்மாட்டிகள் சங்கம் கடந்த வியாழக் கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அங்கத்துவம் பெறும் அனைவரும் சிங்கள மீனவர்களாக இருக்கின்றனர்.

குறித்த கரைவலை சம்மாட்டிகள் சங்கம் மிக நீண்டகாலம் தமிழர்களின் ஆட்சியில் இரு ந்த நிலையில் 

யுத்தத்தின் பின்னர் வளமும், அதிகாரமும் சிங்கள மீனவர்களிடம் பறித்து க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் நிர்க்கதி நிலையில் விடப்பட்டுள்ளனர்.

Posted by on Sunday, April 28, 2013 · Leave a Comment

Saturday, 13 April 2013

வடக்கு கிழக்கை இணைக்கவும்: டெலோ மாநாட்டில் தீர்மானம் !!

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைப்பாட்சி (சமஸ்டி) அரசியல் முறையின் கீழ் பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வே முன்வைக்கப்படல் வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை நனவாக்ககூடிய விதத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எம் இனத்தின் மரபுவழி தாயகம் இணைந்த வடக்கு கிழக்காகும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டிலேயே இந்த தீர்மானம் உட்பட மேலும் 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 
1.    தமிழ் இனத்தின் மரவுவழித் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும் சகல சட்டவிரோத குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்தி ஏற்கனவே இடம்பெற்ற குடியேற்றங்களையும் கலைக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றது.

2.    சகல தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு இலங்கை அரசை கோரும் அதேவேளை ஏற்கனவே புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதும், விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் நிறுத்தவேண்டும்.

3.    வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் படைத்தரப்பினரின் தலையீடுகள் சிவில் நிர்வாகத்தில் இனிமேலும் இடம்பெறக்கூடாது.

4.     வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டுள்ள அரச படைகள் மீள் பெறப்பட வேண்டும் எனவும் முப்படைகளிலும் காவல்துறையிலும் தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்தோர் தம் இன விகிதாசாரத்திற்கேற்ப இடம்பெறுவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் பேணுவதிலும் காவல்துறையினர் மாத்திரமே ஈடுபடுத்தப்படவேண்டும்.

5.     முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள மதவாத அமைப்புக்களை சட்டத்தின் முன் நிறுத்திப்படுவதுடன் சட்டரீதியாக தடை செய்யப்படவேண்டும்.

6.    காணாமல் போனதாக முறையிடப்பட்டிருக்கும் சகல தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலையை இனியாவது தெளிவுபடுத்தவேண்டும்.

7.    வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு தடையாக உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் உட்பட சகல காரணிகளும் நீக்கப்பட்டு மீள் குடியேறியேற்றம் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படவேண்டும்.

8.    இலங்கையில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் தமிழ் இனப்படுகொலைகள் தொடர்பில் சுதந்திரமானதும் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்படல் வேண்டும்.

9.    தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை அணியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு பலப்படுத்தப்பட்ட ஸ்தாபன ரீதியான கட்டமைப்புடன் தமிழ் தேசிய இனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக அரசியல் குரலாக தொடர்ந்தும் தீவிரமாக செயற் படுவதற்கு தேவைப்படும் சகல நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்படல் வேண்டும்.
போன்ற தீர்மானங்களே இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Monday, 8 April 2013

அடுத்த நகர்விற்கு அடிப்படையான தேவையாக இருப்பது எமக்கு இடையிலான இறுகிய ஒற்றுமை தான் !!

தனியாக சுயாட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதே இலங்கை இனப்பிரச்சனைக்குப் பொருத்தமான தீர்வு-ரெலோ தலைவர் செல்வம்
எமது அன்புக்குரிய தோழர்களே !

தமிழீழ விடுதலை இயக்கத்தின், எட்டாவதாக நடைபெறும் ஆண்டு மாநாட்டில் நாம் கூடியிருக்கின்றோம். 

ஓர் ஆயுதப் போராட்ட இயக்கமாகத் தோற்றம் பெற்ற எமது இயக்கம், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சியில், கால மாற்றங்களுக்கு ஏற்பத் தனது நிலைப்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் முதன்மையான அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இப்போது பரிணமித்து நிற்கின்றது.

 
முன்னெப்போதும் இருந்திராத வகையான அரசியல் வெளி ஒன்றில் தமிழ் தேசிய இனம் தற்போது நின்றுகொண்டிருக்கின்றது. 

இந்த நிலையில் இருந்து எமது இனம் அடுத்து நகர்ந்து செல்ல வேண்டிய சரியான திசையையும், அந்தப் பணயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நுட்பங்களையும் தெளிவாகக் கண்டறிந்து தீர்மானிக்க வேண்டிய முக்கிய பணியில், ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து எமது கட்சியும் ஈடுபட்டிருக்கின்றது. 

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததன் பின்பு, இனங்களுக்கு இடையில் நல்லுறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளை இந்த நாட்டின் அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எல்லாத் தரப்பினரிடமும் இருந்தது. 

ஆனால், இலங்கை வாழ் மக்கள், புலம்பெயர்ந்த தமிழ் சமூகம், அனைத்துலக சமூகம் என அனைவரிடமும் இருந்த அந்த நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் வகையிலான செயற்திட்டங்களை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

தற்போதைய சூழல்,
ஆண்டு தோறும் யுத்த வெற்றி விழாக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டாடுவதில் மட்டுமே அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றதே அல்லாமல், தமிழ் மக்களின் மனங்களில் இருக்கும் ஆதங்கங்களைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

 நடந்து முடிந்த போரில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு ஈடான நீதியை வழங்கவும், நீண்ட கால இனப் பிரச்சனைக்கு நிலையான முடிவாக நியாயமான ஒரு அரசியற் தீர்வைக் காணவும், இந்த அரசாங்கம் அர்த்தமுள்ள எந்த நடவடிக்கைகளையும் இன்னும் எடுக்கவில்லை. 

மாறாக, ஏற்கெனவே இருக்கும் இன விரிசலை மேலும் அதிகமாக்கும் காரியங்களிலேயே சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.

 மிகக் கடுமையான இராணுவப் பிரசன்னம் தமிழர் தாயகப் பகுதியான இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருக்கின்றது. ஏறக் குறைய 10 பொது மக்களுக்கு ஒரு படை வீரன் என்ற அடிப்படையில் படையணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அது தவிர, படைப் புலனாய்வு ஆட்களின் மிகத் தீவிரமான செயற்பாடும் தமிழர் வாழ்விடங்களில் இருக்கின்றது.
           
 நடமாடுவதற்கான சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், மனச் சாட்சிப்படி பேசுவதற்கான சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகள் மிகக் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்வு கடுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பொது நிர்வாக நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைச்சினதும் படைகளினதும் முழுமையான தலையீடும் இருக்கின்றது.

தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான வீடுகள், காணிகள், விவசாய நிலங்கள், வழிபாட்டு இடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் என ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலங்கள் படைகளால் கையகப்படுத்தப்பட்டு படைத் தளங்களும் உயர் காப்பு வலயங்களும்; உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழர் வாழ்விடங்களில், பூர்வீகமாகப் பௌத்த சிங்களவர்கள் வாழாத பிரதேசங்களில், அரச காணிகளிலும் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட காணிகளிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கான அடிப்படை வாழ்வு வசதிகளுடன் பொளத்த விகாரைகளும் அங்கு எழுப்பப்படுகின்றன. இவ்வாறாக விகாரைகள் எழுப்பப்படும் இடங்கள் எல்லாம் பௌத்த புனிதப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன.

போர் நிகழ்ந்த காலத்தில் கைது செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான அரசியற் கைதிகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். போரின் முடிவில் சரணடைந்த ஆயிரக் கணக்கான போராளிகள் கூட விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையிலும், அரசியற் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் அடைக்கப்பட்டுள்ளார்கள். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கூட திரும்பத் திரும்ப கைது செய்யப்படுவதுடன், அவர்களும் அவர்களது குடும்பங்களும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.

இவை எதுவுமே இன நல்லிணக்கத்திற்கான அறிகுறிகள் இல்லை என்பதனையும், இவ்வாறான செயற்பாடுகள் இந்த நாட்டு மக்களின் அமைதியான வாழ்வுக்கோ அல்லது பொருளாதார மேம்பாட்டுக்கோ எவ்வகையிலும் வழி செய்யாது என்பதையும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த தமிழீழ விடுதலை இயக்கம் விரும்புகின்றது

தமிழர் தாயகப் பிரதேசங்களில் குவிக்கப்பட்டுள்ள ஆயுதப் படைகளை வெளியேற்றி,

அரசாங்கப் பின்னணியுடன் மேற்கொள்ளப்படுகின்ற செயற்கையான சிங்கள மயமாக்கலை நிறுத்துவதுடன், ஏற்கெனவே செய்யப்பட்ட குடியேற்றங்களை மீளப்பெற்று,

சிங்கள பௌத்தர்கள் வாழாத ஏனைய இனங்களின் பூர்வீக வாழ்விடங்களில் பௌத்த விகாரைகள் எழுப்புவதனை நிறுத்தி,

போர்க் காலக் காரணங்களிற்காகக் கைது செய்யப்பட்ட அனைத்து அரசியற் கைதிகளையும் நிபந்தனைகள் ஏதும் இன்றி விடுவித்து,

போர் நிகழ்ந்த காலத்தில் காணாமற் போனவர்கள் மற்றும் போரின் முடிவில் சரணடைந்தவர்கள் பற்றிய விபரங்களையும், அவர்களது தற்போதைய நிலை பற்றிய ஆதாரங்களையும் வெளிப்படுத்தி,

மீன்பிடித்தல், விவசாயம் செய்தல் போன்ற வாழ்வாதாரத் தொழில்களைச் செய்வதற்கு இடப்பட்டிருக்கும் தடைகள் அனைத்தையும் நீக்கி,

காத்திரமான இன நல்லிணக்க முயற்சிகளை எடுப்பதுடன், நேர்த்தியானதும் நிலையானதுமான ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கும் சிறீலங்கா அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

அரசியற் தீர்வு

தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபைகள் முறைமை, நேர்த்தியானதும் நிலையானதுமான ஒரு அரசியற் தீர்வு அல்ல. 

கடந்த ஏழு தசாப்தங்களாக, குறிப்பாகக் கடந்த 30 வருடங்களாக, எமது இனம் கொடுத்த விலைகளுக்கு மாகாண சபைகளின் அதிகாரங்கள் ஈடானவை இல்லை. 

சிறீலங்கா அரசியலமைப்பில் செய்யப்பட்ட 13வது திருத்தம், தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளுக்கான ஒரு வலுவான பதிலாக அமைந்திருக்கவில்லை என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு. 

ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிட்டதும், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டியதும் காலத்தின் தேவையாக உள்ளது. 

 அவ்வாறாக மாகாண சபைத் தேர்தல்களில் நாம் போட்டியிடுவதனை, எமது மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடமையிலிருந்து நாம் தவறிவிட்டோம் என யாரும் கருதிவிடக் கூடாது. 

செல்லும் திசை தெளிவாக இல்லாத ஒரு அரசியற் சந்தியில் தற்போது நின்றுகொண்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் சமூக – பொருளாதார – அரசியல் இருப்பை மீள உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாக மாகாண சபைத் தேர்தல்களில் நாம் பங்கேற்க வேண்டிய தேவை தற்போது உள்ளது. 

இது, இறுதித் தீர்வை நோக்கிய நீண்ட பயணத்தில் ஒரு படியே அல்லாமல், தமிழீழ விடுதலை இயக்கம் முன்வைக்கும் இறுதித் தீர்வு தற்போது உள்ள மாகாண சபை முறைமை அல்ல. 

தமிழினம் ஒரு தேசிய இனம் !

ஓவ்வொரு தேசிய இனத்திற்கும் இருப்பதைப் போல, எமது இனத்திற்கும் இலங்கைத் தீவிற்குள் ஒரு தேசம் உண்டு !! 

நீண்ட கால அடக்குமுறைகளுக்கும், இனப் பாகுபாட்டிற்கும், வன்முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து மீளுவதற்கான ஒரே வழியாகவே எமது இனத்திற்கென தனியாக ஒரு நாட்டை உருவாக்கும் இலட்சியத்தோடு நாம் எல்லோரும் போராடினோம்.

 ஆனாலும், கால மாற்றத்திற்கு ஏற்ப வழிவிட்டும், வேறு மார்க்கங்களை முயன்று பார்க்கும் நோக்குடனும், இலங்கை என்பது ஒரே நாடு என்ற வரையறைக்குள் தீர்வு தேடும் முயற்சியில் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நாம் ஈடுபட்டு வருகின்றோம். 

இலங்கை என்ற ஒரு ஐக்கிய நாட்டிற்குள் எமது தேசத்திற்கென ஒரு தனியாக சுயாட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதே இலங்கை இனப்பிரச்சனைக்குப் பொருத்தமான ஒரு தீர்வாக, தற்காலச் சூழலில் அமையும் என்றே தமிழீழ விடுதலை இயக்கம் கருதுகின்றது. 

அந்தவகையில், எமது இனத்திற்கான எமது தேசத்தில், எம்மை நாமே ஆளுவதற்கு ஏற்றதான ஒரு பூரண சுயாட்சிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு ஆகும். 

நிலப் பகிர்ந்தளிப்பு, நீதி ஒழுங்கு, கல்வி வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய விடயங்களில் நாமே முடிவெடுத்து, எமது தேசத்தில் எம்மை நாமே ஆளுகை செய்யக்கூடிய அதிகாரங்களுடனான ஒரு சுயாடசிக் கட்டமைப்பாக அது அமைய வேண்டும்.

அந்த வகையில், மிக அடிப்படையான தமது அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதான ஒரு சுயாட்சிக் கட்டமைப்பு நிறுவப்படாது போனால், தமிழினத்திற்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவதே ஒரே வழி என்ற முடிவை தமிழினத்தின் எதிர்காலச் சந்ததி எடுக்கும் நிலை வரலாம்.

 மூன்றாம் தரப்பு இந்த நாட்டின் அரசாங்கத்தினது தற்போதைய போக்கை உற்று அவதானிக்கும் போது, அர்த்தம் மிக்க எவ்வகையான ஒரு தீர்வையும் அது தானாகவே முன்வந்து தமிழ் மக்களுக்கு வழங்கும் என்று நாம் கருதவில்லை. அதனால், தமிழ் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றின் நேரடியான ஈடுபாடு அவசியம் என்றே நாம் கருதுகின்றோம். 

அத்தகைய ஒரு மூன்றாம் தரப்பாக, இந்தியாவும் இருக்கலாம், அல்லது வேறு ஒரு நாடும் இருக்கலாம். அதே நேரம், தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விடயத்தில் தான் வகிக்க வேண்டிய முக்கிய பாத்திரத்தை இந்தியா மறந்துவிடக்கூடாது என்பதுடன், தனக்கிருக்கும் தார்மீகக் கடமையிலிருந்தும் இந்தியா விலகிவிடக்கூடாது என்பதனையும் தமிழீழ விடுதலை இயக்கம் நினைவுபடுத்த விரும்புகின்றது. 

தமிழக மக்களுக்கும், தமிழக அரசியற் கட்சிகளுக்கும், இந்தியாவின் ஏனைய மாநில அரசுகளிற்கும் கூட இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றோம். தமக்கு இடையேயான உள் நாட்டு அரசியற் கருத்து வேறுபாடுகளை மறந்து, இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஒரே குரலாக அவர்கள் செயற்பட வேண்டும். கடந்த கால கசப்புணர்வுகள் ஏதும் இருப்பின் அவற்றை மறந்துவிட்டு, எதிர்கால நன்மையை முன்னிறுத்தி அவர்கள் செயலாற்ற வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வு ஒன்றுதான் இந்திய நாட்டின் நலன்களுக்குப் பாதுகாப்பாக அமையும் என்பதையும் சிந்தித்து அவர்கள் செயற்பட வேண்டும். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மாதம் அமெரிக்க அரசாங்கத்தினால் சமர்க்கப்பட்டு, 26 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை – பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரித்தது. 

அந்தத் தீர்மானம் வலுவானதா, இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், ‘எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஐக்கிய நாடுகள் சபை வரை எடுத்துச்செல்லப்பட்டுள்ளது’ என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமேனும் எமது கட்சி அதனை ஆதரித்தது. வேறு எந்த ஒரு நாடுமே இத்தகைய ஒரு நகர்வினைச் செய்வது பற்றிச் சிந்திக்காத, அல்லது அவ்வாறு செய்வதற்குத் துணியாத நிலையில் அமெரிக்கா அதனைச் செய்தது. அமெரிக்காவின் இந்த முயற்சி, ‘இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டது’ என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்று ஏட்டில் பதிவு செய்த இரண்டாவது நிகழ்வாக அமைந்தது. அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், ‘தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்டது என்பதனையும், அவர்களது அரசியல் அபிலாசைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை’ என்பதனையும் 26 நாடுகள் அந்த அனைத்துலக மன்றத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.

அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கத்தினது முழுமையின்மை காரணமாக, அதனைப் பூரணமாக ஏற்றுக்கொள்ளுவதில் எமது கட்சிக்கும் தயக்கங்கள் இருந்தன. ஆனாலும், வெறும் விமர்சனங்களை முன்வைக்காமல், அத்தகைய ஒரு வரலாற்றுப் பணியைச் செய்ததற்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க எமது கட்சி கடமைப்பட்டுள்ளது. 

அதே வேளையில், அமெரிக்கா ஏற்கெனவே கொண்டுவந்த தீர்மானங்களும், எதிர்காலத்தில் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களும், தவறு இழைத்தவர்களைச் சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லும் என ஒர் அதீத எதிர்பார்ப்பு எம்மிடையே இருந்தாலும், சர்வதேச நாடுகள் அதனைச் செய்வற்கு ஏற்ற உந்து சக்தியாக நாங்கள் செயற்பட வேண்டும். அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 26 நாடுகளையும் தொடர்ந்தும் எமது பக்கம் வைத்திருப்பது மட்டுமல்லாமல், நடுநிலை வகித்த நாடுகளுக்கும் எமது நியாயப்பாடுகளை எடுத்துவிளக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கு, எம்மிடையேயான ஒற்றுமையும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டமும் அவசியமானது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பேசும் சமூகமும், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களும், எமது தமிழகத்து உறவுகளும் ஒரே நேர் கோட்டில் பயணிக்க வேண்டும். எம்மிடையேயான சமூக மற்றும் மதப் பிரிவுகளைக் கடந்து, மாறுபட்ட பொருளாதார நிலைகளையும் மறந்து, கட்சி பேதங்களையும் நடைமுறைக் கொள்கை வேறுபாடுகளையும் துறந்து, அர்த்தமற்ற முரண்பாடுகளுக்குள் சிக்குண்டு நிற்காமல், நாம் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். அத்தகைய ஒர் ஒற்றுமையின் அவசியம் கருதியே 12 ஆண்டுகளுக்கு முன்னர் எமது கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்தது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துமே மக்களுக்காக உருவானவை. அவற்றில் பெரும்பான்மையானவை எமது மக்களுக்காக ஆயுதப் போராட்ட இயக்கங்களாக உருவெடுத்தவை. ஆனாலும், காலத்தின் தேவை கருதி தத்தமது தனித்துவங்களில் விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒரே அணியாக நாம் இணைந்தோம். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்னும் இறுக்கமானதாக ஆக்கி வைத்திருக்க வேண்டியதே எம் அனைவருக்கும் இன்று அவசியமானதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, அதற்குப் புதிய ஒரு காத்திரமான வடிவத்தை நாம் கொடுக்க வேண்டும். வெறும் தேர்தல் கூட்டு என்ற நிலையில் இருந்து, தமது மக்களை உண்மையாகவே பிரதிநிதித்துவம் செய்யும் பதிவு செய்யப்பட்ட ஓர் அதிகாரபூர்வமான அரசியற் கட்சி என்ற புதிய வளர்ச்சியை உருவாக்க வேண்டும். அதனை அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாம் எல்லோருமாகச் சேர்ந்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும். அத்தகைய ஒரு வளர்ச்சியை நோக்கிய நகர்வில், எமது இனத்தின் ஒற்றுமைக்காக, நாம் மேலும் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டி ஏற்படலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக, தன்னால் முடிந்த எந்தகைய விட்டுக்கொடுப்பைச் செய்வதற்கும் தமிழீழ விடுதலை இயக்கம் தயாராக இருக்கின்றது. 

அதே சமயத்தில், அதே ஒற்றுமை மனப் பாங்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் செயற்பட வேண்டும் என எமது கட்சி எதிர்பார்க்கின்றது.ஆனால், ஒற்றுமைக்கான விட்டுக்கொடுப்புகள் என்பவை எல்லாத் தரப்புக்களினாலும் சமமாகச் செய்யப்படுவதே பொருத்தமானதாக இருக்கும். குறிப்பிட்ட சில தரப்புக்கள் மட்டுமே விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான நிர்ப்பந்த சூழல்களை உருவாக்கவதோ பொருத்தமானதாக அமையாது. அவ்வாறாக, ஒரு நிர்ப்பந்த சூழலில் ஏற்படுத்தப்படும் இணக்கப்பாடு நின்று நிலைக்கக்கூடிய ஒரு ஒற்றுமையாகவும் அமையாது. 

அனைத்துலக சமூகத்தை மையப்படுத்தியே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற பின்னணியில், கூட்டமைப்பின் இறுக்கமான ஒற்றுமையையே அனைத்துலக சமூகம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளாகிய நாம் அனைவருமே, சக பங்காளிக் கட்சிகளைச் சமமாகக் கருதி, நிகராக நடாத்தி, தலைமைத்துவப் பண்புடன் செயலாற்றும் முதிர்ச்சியைக் கொண்டிருக்க வேண்டும். அந்த முதிர்ச்சியின் வெளிப்பாடாக, கூட்டமைப்பின் கட்டமைப்பைச் சரிவர எமக்குள் பகிர்ந்தளித்து அனைவரும் அனைவரையும் கௌரவத்துடன் நடத்த வேண்டும் என்பதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் எதிர்பார்ப்பு. 

ஒட்டுமொத்தமான தமிழ் தேசிய இனத்தின் அரசியற் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தில், எமது அடுத்த நகர்விற்கு அடிப்படையான தேவையாக இருப்பது எமக்கு இடையிலான இறுகிய ஒற்றுமை தான் என்பதை எம்மில் எவருமே மறந்துவிடக் கூடாது !

திரு.செல்வம் அடைக்கலநாதன்
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்

அரச அதிகாரிகள் முன்னிலையில் இதற்கு தீர்வு காணுவோம் ! முள்ளியவளையில் வினோ நோகராதலிங்கம் !!

முள்ளியவளை காணி வழங்கலில் இரு இனங்களுக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு முள்ளியவளை மத்தியில் உள்ள வன வள திணைக்களத்திற்குரிய காணியை துப்பரவு செய்து மீள்குடியேறியோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இரு இனங்களுக்கிடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இடம்பெயர்ந்தவர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு காணிகளை முல்லைத்தீவு முள்ளியவளை மத்தியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்காக வன வள திணைக்களத்திற்குரிய காணிகளை மாவட்ட செயலகத்தின் ஊடாக அனுமதி பெற்று துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முள்ளியவளை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அதனை தடுத்து நிறுத்தியதுடன் காணியற்ற தமிழ் மக்களுக்கு முதலில் காணிகளை வழங்கிய பின்னர் ஏனையோருக்கு வழங்குங்கள் என தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி காடழிப்பை தடுத்ததுடன் கனரக வாகனங்களை அப்புறப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அங்கு காடு துப்பரவுக்கு வந்திருந்து கனரக வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்திய நிலையில் அங்கு வந்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மக்கள் தமக்கு ஏற்பட்ட நிலைமைகளை சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதன்போது கரைத்துறைப்பற்றில் 2500 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமக்கு காணிகள் இல்லை என பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்காது சுமார் 600 மேற்பட்ட முஸ்லிம் மக்கள் காணி இல்லை என பதிவு செய்துள்ள நிலையில் அவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்க வேண்டாம் என நாம் கூறவில்லை. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சமமாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோருகின்றோம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வருகை தந்திருந்த முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான ச. கனகரட்ணம் தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் என கூறி மக்களை சமரசப்படுத்து முற்பட்டபோது மக்கள் அவருடன் முரண்பட்டதையடுத்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தமிழ் மக்களுக்கு இவ் இடத்திலேயே காணி வழங்கப்படும் என்ற கோரிக்கையை முன் வைத்து விட்டு காட்டை துப்பரவு செய்யுங்கள் என தெரிவித்தார்.

இதன்போது ஒரு சிலர் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்தமையினால் மீண்டும் முறுகல்நிலை  ஏற்பட்டது. இதனையடுத்து இவ்விடத்திற்கு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் வருகை தந்து காணி வழங்க வேண்டியதன் நிலைப்பாட்டை எடுத்துக்கூறியிருந்தார்.

எனினும், இன ரீதியாக காணியை வழங்காது இரு சமூகத்திற்கும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் மீண்டும் தமிழ் தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இரு சமூகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிலருடனும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதியின் இணைப்பாளர் ச. கனகரட்ணம் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதன்போது அரசாங்க அதிபர் காணி அற்ற தமிழ் மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோர் என்ற ரீதியியல் முஸ்லிம் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும்  தெரிவித்தார்.

எனினும், மக்கள் இதற்கு உடன்படாத தன்மையில் இருந்த நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அரசாங்க அதிபரிடம் இரு சமூகங்களின் பிரதிநிதிகளையும், வன்னி அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுர்தீனையும் அழைத்து அரச அதிகாரிகள் முன்னிலையில் இதற்கு தீர்வு காணுவோம்; எனவும் அதுவரையில் காடழிப்பை நிறுத்துமாறும் கோரியிருந்தார்.

இதனை பலரும் ஏற்றிருந்த நிலையில் அரசாங்க அதிபர் பதிலேதும் கூறாது சம்பவ இடத்தில் இருந்து செல்ல இரு தரப்பினரும் சம்பவ இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) எட்டாவது தேசிய மாநாடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்; (ரெலோ) எட்டாவது தேசிய மாநாடு; இன்றும் நாளையும் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் யெலாளர் நாயகம் கென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கட்யினால் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் புதிய உறுப்பினர்கள் மற்றும் குழூக்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…..

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் எட்டாவது தேசிய மாநாடு வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து மாலை ஐந்து மணிவரை நடைபெறவுள்ளது.

இதன் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது. இதில் குறிப்பாக கட்சியின் தற்பொதைய நிலைமைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் , அரசியல் சமகால நிலைமைகள் , தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் மற்றும் சவால்கள் , கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் உட்பட கூட்டமைப்பிற்குள் ரெலோவின் செயற்பாடுகள் ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து நாளையதினம் கட்சியின் முக்கிய குழூக்கள் மற்றும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பல்வெறு குழூக்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கட்சியின் இக் கலதுரையாடலில் பல்வேறு கட்சிகளைக்ச் சார்ந்த பிரமுகர்கள் கலந்துரையாட்வுள்ளனர் .மேலும் இந்த எட்டாவது தேசிய மாநாட்டில் வடகிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலுமாக 115 பொதுக் குழூ உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் .

அவர்களிலிருந்து கட்சிக்கான நிர்வாகிகனள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் கட்சினக்கான முக்கி மற்றும் தலைமைக் குழூ உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இதன் பின்னர் கட்சிய்ன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் புதிய குழூக்கள் தொடர்பில் வெளியிடப்படுமென்றும் அவர் மேலும் தெரரிவித்துள்ளார்.

Saturday, 6 April 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவு தமிழ் முஸ்லிம் உறவுக்காக திறந்தே இருக்கிறது ! - ஜனா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவு தமிழ் முஸ்லிம் உறவுக்காக திறந்தே இருக்கிறது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்புகளை நிராகரித்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் தற்போதாவது உணர்ந்துள்ளதை வரவேற்பதாகவும் தெரிவித்தார். 

தமிழ் பேசும் சமூகங்கள் ஒற்றுமை குறித்து சம்பந்தன் ஐயா எங்களோடு பேச முன்வர வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பின் உறுகாமத்தில் அமைச்சர் றிசாத் உரையாற்றியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாண தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் பதவியையும், தேவைப்பட்டால் அமைச்சுகள் அனைத்தையும் தருகிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்தார்.

இருந்த போதும் அதனைப் பொருட்படுத்தாது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஆட்சி அமைத்துக் கொண்டது. 

இந்த விடயம் ஞாபகத்தில் இல்லாதது போல் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுகாமத்தில் உரையாற்றியிருக்கிறார்.

அவரது பேச்சில் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறையற்றிருப்பது போன்ற தோரணை தெரிகிறது. பழியைச் சுமத்துவது போன்றதொரு பாங்கில் அவரது கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்போது அவர்தான் தமிழ் முஸ்லிம் ஒன்றுமை குறித்த கருத்தை வெளியிடுவதாகவே அவருடைய பேச்சு அமைந்திருக்கிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தற்போதுதான் நம்பிக்கையற்ற நிலை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கிறது என்பது கவலைக்குரியதுதான். அதனை தமிழர் தரப்பு எப்போதோ உணர்ந்து விட்டது. அதனால்தான் சிறுபான்மை இனங்களின் ஒன்றுமை தொடர்பில் பல தொடர் முயற்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட வண்ணமிருக்கிறது.

ஒரு மனிதனுக்கு முக்கிய தேவைகளாக உணவு, உடை, உறையுள் என்பனவே அமைந்திருக்கின்றன. பொதுப்பலசேனா ஊடாக முதலில் உணவில் கை வைத்த அரசாங்கம் முஸ்லிம்களின் உடையிலும் கையை வைத்திருக்கிறது, அடுத்தது உறையுள் என்ற வகையில் அதுவும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

தமிழர்கள் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமைக்காக எதனையும் விட்டுக் கொடுப்பதற்கும் இழப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. 

இவற்றினை மறந்து முஸ்லிம் தலைவர்கள் கருத்துகளை வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே விடுத்த அழைப்புகளைப் பொருட்படுத்தாத முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தற்போதேனும் ஞானம் பிறந்தது போன்று கருத்து வெளியிட்டுள்ளமை பாராட்டத்தக்கதுதான்.

ஆனாலும் அழைப்புகளை விடுப்பதற்கான தேவையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விடுத்த அழைப்புக்கள் இல்லாமல் செய்து விட்டன.

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவு தமிழ் முஸ்லிம் உறவுக்காக திறந்தே இருக்கிறது என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Posted by on Tuesday, April 2, 2013 · Leave a Comment