Monday, 8 April 2013

அரச அதிகாரிகள் முன்னிலையில் இதற்கு தீர்வு காணுவோம் ! முள்ளியவளையில் வினோ நோகராதலிங்கம் !!

முள்ளியவளை காணி வழங்கலில் இரு இனங்களுக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு முள்ளியவளை மத்தியில் உள்ள வன வள திணைக்களத்திற்குரிய காணியை துப்பரவு செய்து மீள்குடியேறியோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இரு இனங்களுக்கிடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இடம்பெயர்ந்தவர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு காணிகளை முல்லைத்தீவு முள்ளியவளை மத்தியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்காக வன வள திணைக்களத்திற்குரிய காணிகளை மாவட்ட செயலகத்தின் ஊடாக அனுமதி பெற்று துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முள்ளியவளை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அதனை தடுத்து நிறுத்தியதுடன் காணியற்ற தமிழ் மக்களுக்கு முதலில் காணிகளை வழங்கிய பின்னர் ஏனையோருக்கு வழங்குங்கள் என தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி காடழிப்பை தடுத்ததுடன் கனரக வாகனங்களை அப்புறப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அங்கு காடு துப்பரவுக்கு வந்திருந்து கனரக வாகனங்களை அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்திய நிலையில் அங்கு வந்திருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மக்கள் தமக்கு ஏற்பட்ட நிலைமைகளை சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதன்போது கரைத்துறைப்பற்றில் 2500 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமக்கு காணிகள் இல்லை என பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்காது சுமார் 600 மேற்பட்ட முஸ்லிம் மக்கள் காணி இல்லை என பதிவு செய்துள்ள நிலையில் அவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்க வேண்டாம் என நாம் கூறவில்லை. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சமமாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோருகின்றோம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வருகை தந்திருந்த முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான ச. கனகரட்ணம் தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் என கூறி மக்களை சமரசப்படுத்து முற்பட்டபோது மக்கள் அவருடன் முரண்பட்டதையடுத்து வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தமிழ் மக்களுக்கு இவ் இடத்திலேயே காணி வழங்கப்படும் என்ற கோரிக்கையை முன் வைத்து விட்டு காட்டை துப்பரவு செய்யுங்கள் என தெரிவித்தார்.

இதன்போது ஒரு சிலர் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்தமையினால் மீண்டும் முறுகல்நிலை  ஏற்பட்டது. இதனையடுத்து இவ்விடத்திற்கு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் வருகை தந்து காணி வழங்க வேண்டியதன் நிலைப்பாட்டை எடுத்துக்கூறியிருந்தார்.

எனினும், இன ரீதியாக காணியை வழங்காது இரு சமூகத்திற்கும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் மீண்டும் தமிழ் தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து இரு சமூகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிலருடனும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், ஜனாதிபதியின் இணைப்பாளர் ச. கனகரட்ணம் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதன்போது அரசாங்க அதிபர் காணி அற்ற தமிழ் மக்களுக்கு காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இக்காணி நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோர் என்ற ரீதியியல் முஸ்லிம் மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும்  தெரிவித்தார்.

எனினும், மக்கள் இதற்கு உடன்படாத தன்மையில் இருந்த நிலையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அரசாங்க அதிபரிடம் இரு சமூகங்களின் பிரதிநிதிகளையும், வன்னி அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுர்தீனையும் அழைத்து அரச அதிகாரிகள் முன்னிலையில் இதற்கு தீர்வு காணுவோம்; எனவும் அதுவரையில் காடழிப்பை நிறுத்துமாறும் கோரியிருந்தார்.

இதனை பலரும் ஏற்றிருந்த நிலையில் அரசாங்க அதிபர் பதிலேதும் கூறாது சம்பவ இடத்தில் இருந்து செல்ல இரு தரப்பினரும் சம்பவ இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment