முள்ளியவளையில்
மீள்குடியமர்ந்த மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கு
அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
இந்த மக்கள் ஒவ்வொரு இரவுப் பொழுதையும் நித்திரை இன்றியும் நிம்மதி
இன்றியும் மரணப் படுக்கையிலேயே கழித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்
கூறினார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை மத்தி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குடிசைகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்த நிலையில
நேற்று திங்கட்கிழமை அந்த இடத்திற்குச் சென்று தீயிட்டு எரிக்கப்பட்ட
குடிசைகளை அவர் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல்
கூறினார்.
எதிரிகளை இனங்காண முடியாதவாறு கறுப்பு அரசியல்வாதிகளின் இரும்புத்திரை
பாதுகாப்பில் மேற்கொள்ளப்படும் கொலை அச்சுறுத்தல்களுக்கும் வீடுகள்
எரிக்கப்படுகின்றமைக்கும் அரசாங்கம் முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர்
கூறினார்.
இறுதி யுத்தத்தில் அனைத்தையும் இழந்த மக்கள் ஓலைக் குடிசைகளில் வாழும்
உரிமையும் இன்று மறுக்கப்படுகின்றது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்
எஸ்.வினோநோகராதலிங்கம், இது இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏனைய மக்களுக்கும்
விடுக்கப்பட்ட எச்சரிக்கை போன்ற செயல் ஆகும் எனவும் கூறினார்.
மக்களை அச்சுறுத்தி வெளியேற்ற திரை மறைவில் எடுக்கப்படும் முயற்சியின் ஆரம்பமே இது எனவும் அவர் கூறினார். தமிழினத்தின் காவலர்களாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் நாடகமாடி
வேடமிட்டவர்களும் இதன் பின்னணியிலிருப்பது தமிழர் நெஞ்சங்களில் வேதனை தரும்
செயல் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
அரசாங்கம் இவ்வாறான நாசகாரச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் அவர்களுக்கு
துணை போகின்றவர்களையும் பாதுகாப்பதிலிருந்து நிறுத்திக்கொள்ள வேண்டும்
எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment