Saturday, 7 April 2012

பிரிந்து நின்ற ரெலோக்கள் ஒன்றிணைகின்றன! த.தே.வி.கூட்டமைப்பு கலைப்பு?!


பிரிந்து நின்ற ரெலோ கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே தலைமையின் கீழ் மீண்டும் அவற்றின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்த முக்கிய கலந்துரையாடல் கடந்த வாரம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் முக்கியஸ்தருமான வினோ நோதராத லிங்கம் கடந்த மாதம் லண்டனிற்கு பயணமாகியிருந்தார். அங்கு ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
ரெலோவின் பிரிந்து நிற்கும் ரெலோ உறுப்பினர்களை ஒன்றிணையுமாறு புலம்பெயர் ரெலோ உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையினை அடுத்து மூன்று பிரிவினரையும் ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்றிருக்கின்றது.
இதன் அடிப்படையில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, உதயராசா தலைமையிலான ஸ்ரீ ரெலோ, சிவாஜிலிங்கம், சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்தவாரம் வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர்.
இதன் அடிப்படையில் மூன்று கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதென முடிவெடுத்திருப்பதாக தெரியவந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் நாளை வவுனியாவில் ரெலோ உறுப்பினர்களுக்கான மாநாடு ஒன்று ஏற்பாடாகியிருப்பதாக வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதன் ஒருகட்டமாக சிவாஜிலிங்கம், சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கட்சி கலைக்கப்படலாம் என்று ரெலோ கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உதயராசா தலைமையிலான ஸ்ரீ ரெலோ கட்சியினர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் நம்பிக்கைக்கு உரியவர்களாக கடந்த காலங்களில் செய்யபட்டு வந்தமையால் இந்த விடயத்தின் பின்னணி சிக்கலாக அமையலாம் என்று எதிர்வு கூறப்பட்டாலும்,
தமிழரசுக்கட்சி தனியான பாதையில் பயணிப்பதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றமையால் ரெலோ தன்னை வலுப்படுத்த முற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றார் கொழும்பின் சட்டத்தரணி ஒருவர்.

No comments:

Post a Comment