Wednesday, 25 April 2012

Ex TELO: தீர்வை முன்வைத்திருந்தால் இந்தியாவிடமோ உலக நாடுகளிடமோ தாம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது:செல்வம் அடைக்கலநாதன் !


தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைக்கான எந்தெந்த வழிகளைக் கையாள முடியுமோ அத்தனை வழியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளுமெனத் தெரிவித்த அக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கம் தீர்வை முன்வைத்திருந்தால் இந்தியாவிடமோ உலக நாடுகளிடமோ தாம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்றும் கூறினார். பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவிடமும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் சென்று எடுத்துரைப்பதில் எவ்விதமான பிரயோசனமுமில்லையென அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்ததுடன் கூட்டமைப்பு என்னதான் நச்சரித்தாலும் தீர்வு இங்குமட்டுமே இருக்கின்றதெனவும் அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் மகா நாட்டில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;
தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் ஒரு வருடகாலம் நடைபெற்ற பேச்சில் எந்தவொரு விடயத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே தீர்வு காண்பதற்கு அறிந்த இடம் தெரிவுக்குழுவெனவும் இதில் பங்குபற்றுமாறு கூட்டமைப்புக்கு அரசாங்கம் கூறிவருகின்றது. முன்னர் 13 ஆம் அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம் இன்று தெரிவுக்குழுவில் இடம்பெறுவதன் மூலமே 13 பிளஸா அல்லது மைனஸா என்பது குறித்து ஆராய்ந்து தீர்வொன்றுக்கு செல்ல முடியுமென இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் தெரிவித்துள்ளோமெனக் கூறுகின்றது. அரசாங்கம் தீர்வை முன்வைக்காது காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாட்டிலேயே இருக்கின்ற நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற நாம் உலகநாடுகளிடம் செல்ல வேண்டியேற்பட்டுள்ளது. அரசாங்கம் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருக்குமாயின் நாம் இந்தியா உட்பட உலக நாடுகளிடம் செல்ல வேண்டி ஏற்பட்டிருக்காது.
எம்மை பொறுத்தவரை எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு எந்தெந்த வழிகளைக் கையாள வேண்டுமோ அந்தந்த வழிகளை நாம் கையாளுவோம். தீர்வு தொடர்பில் அரசாங்கம் உளப்பூர்வமான ஆர்வம் கொண்டிருக்குமாயின் என்னதான் கூட்டமைப்பு உலக நாடுகளிடம் சென்று கூறினாலும் தீர்வு இங்கு மட்டும் தான் என்று கூறியிருக்காது.

No comments:

Post a Comment